அண்மையிலே மும்பாயிலே சிறுகுடிசைகளினருகே அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி ஐந்நூறு பணியாட்களுடன் வாழப்போகும் முகேஷ் அம்பானியின் சொந்தவாழ்க்கைத்திட்டத்தைக் குறித்து செய்திகளிலே அடிபடுகின்றது. இதற்குச் சமாந்திரமாக அவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில்முயற்சிகளும் விவாதப்பொருளாகியிருக்கின்றன. வளர்முகநாடுகளின் பெருநிறுவனங்கள் பொருளாதாரமுன்னேற்றம் பெற்ற நாடுகளின் பெருநிறுவனங்களுடன் பொருதுவதைவிட்டு, தம்நாட்டின் சில்லறை வர்த்தக நிறுவனங்களை முடக்கும் வகையிலே செயற்படுவதை ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறைவர்த்தகத்தில் ஈடுபடுவதினூடாகப் பார்க்கின்றார் மயூரன்.
படைப்பிலக்கியம், நடப்பரசியல் பற்றி நூல்கள் அதிகம் வரும் தமிழ்ப்பதிப்புலகிலே அறிவியல், பொருளாதாரம் பற்றி தொழில்முறைப்பரிச்சயமில்லாத வாசகர்களுக்கு அறிமுக நூல்கள் வருவது மிகக்குறைவாகயிருந்திருக்கின்றது. அண்மைக்காலத்திலே இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருவது மிகவும் மகிழ்ச்சியினைத் தரும் செய்தி. அதுவும் வலையுலகின் பதிவர்களின் நூல்கள் வெளிவருவது இரட்டிப்புமகிழ்ச்சிக்குரியதாகின்றது. பதிவர் செல்லமுத்து குப்புசாமியின் "இழக்காதே" நூலினைப் பற்றி நல்லதொரு அறிமுகத்தினை வா. மணிகண்டன் பதிந்திருக்கின்றார்.
தமிழ்சார்ந்த கலைஇலக்கிய நிகழ்வுகள் உலகம் பூராகப் பரந்து நிகழ்கின்றது. திரைகடலோடியும் சமூகம் மொழிசார்ந்த செயற்பாடுகள் எவ்வாறு விரிந்து அக்கறையோடு நிகழ்கின்றன என்பனவற்றுக்கு இவ்வாரத்திலே வெளிவந்திருக்கும் செய்திகளே சான்றாகின்றன. ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு, சிங்கப்பூர் மலேசிய இலக்கியக்கருத்தரங்கம், கனேடிய தமிழியல் மாநாடும் வரவிருக்கும் பேரா. சிவத்தம்பியின் எழுபத்தைந்தாம் அகவை பூர்த்தியாதலினை முன்னிட்ட 'பேராசிரியன்' வெளியீடு, வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கப்பேரவையின் ஆண்டு மகாநாடு குறித்த மலர்வெளியீட்டுச்செய்தி என்று பரந்த செயற்பாடுகளின் பதிவுகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இனி வரும் பூங்கா இதழ்களிலே இப்படியான நிகழ்வுகளின் செய்திகளை வெளியிடுவதற்காக ஒரு பகுதியினை ஒதுக்கத்தீர்மானித்திருக்கின்றோம். பதிவர்கள், தம்பகுதிகளிலே நிகழும் வர்த்தக நோக்கின்றிய தமிழிலக்கிய, கலை, சமூக நிகழ்வுகள் பற்றி பூங்காவுக்கு அறியத்தந்தால், அவற்றினைப் பதிவாக்கி வாசகர்களுக்கு அறியத்தர வாய்ப்பேற்படுத்த முயற்சிப்போம். ஃபெட்னா தன் மலருக்கு படைப்புகளைத் தரவேண்டி நிற்கும் செய்தியை வாசகர்களுக்கு அறிவிப்பதோடு இப்பகுதியை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.
தலித் மக்களின் சமூகநிலையிலும் வாழ்வதற்க்கான அரசின் வசதிசெய்தலிலே அவர்கள் பின்பற்றும் மதங்கள் பார்க்கப்படும் பார்க்கப்படவேண்டிய கோணங்களை ஜோசப், கோவி. கண்ணன் ஆகியோரின் கட்டுரைகள் அலசுகின்றன.
பதிவர் அய்யனாரின் மொழியாளுமை குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தேர்ந்தெடுத்து நயக்கும் படைப்புகளும் பொதுவிலே மாறுபாடானவையாகவிருக்கின்றன. அவ்வகையிலே அவருடைய ஓர் உரைவீச்சும் திரைப்பட அலசலும் இவ்வாரத்துப்படைப்புகளிலே சேர்க்கப்பட்டிருக்கின்றன. தன் தடங்களிலேயே தாம் சிக்கிக்கொள்ளும் அவலம் பல படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கின்றது. அய்யனார் அவ்வாறின்றி விரிந்து நடக்க, பூங்கா வாழ்த்துகின்றது. இரா. முருகனின் அரசூர்வம்சம் குறித்த வாசிப்பனுவத்தினை மோகன்தாஸ் தந்திருக்கின்றார். மேலும் இளங்கோவனின் மரபுக்கவிதையும் இவ்வாரவெளியீட்டிலே சேர்ந்திருக்கின்றது.
கடந்த ஒரு மாதகாலமாக திமுக தோணி அரசியற்கடலிலே எத்திசையிலே எவரோடு பயணிக்கின்றதென்பதை ஊகிக்கமுடியாதவகையிலே நிகழ்வுகள் விரைந்து மாறுகின்றன; நிகழ்கின்றன. தினகரன் கருத்துக்கணிப்பு, பத்திரிகை அலுவலத்தாக்குதல், மாறன் சகோதரர்களின் எட்டிப்போகும்நிலை, ராஜ் டிவி திமுக தலைமையுடன் நெருங்கி வருகை, கலைஞர் தொலைக்காட்சி உதயம்... இவ்வழிப்பாதையிலே புதிய வருகை, கனிமொழியின் அரசியல் அல்லது அரசியலுக்குக் கனிமொழி. இதுபற்றி லக்ஷ்மி எழுதியிருக்கின்றார்.
தொடர்ச்சியாக, பூங்கா அறிவியல், சூழல், பொருளாதாரம், உடல்நலம், தொழில்நுட்பம் போன்று அதிகம் தமிழுலகிலே பதிக்கப்படாத துறைகளிலும் படைப்புகளை ஊக்குவிக்க விரும்புகின்றது. குட்டிப்பிசாசு, சந்திரன், பாலபாரதி, அல்வாசிட்டி விஜய், ஆசிப் மீரான் போன்றோரின் பதிவிடுகைகள் இவ்வகையிலே பூங்காவுடன் சேர்ந்து கொள்கின்றன.
சென்ற வார தமிழ்மணம் நட்சத்திரம் இலவசக்கொத்தனாரின் இடுகைகள் இரண்டும் இவ்வாரப்பூங்காவின் செடிகளாக அலங்கரிக்கின்றன.
தமிழ்மணத்திலே இவ்வாரம் தோன்றிய புதியபதிவுகளிலே பூங்காவின் சிறப்புக்குரிய பதிவாக மணிதர்ஷாவின் திரைவெளி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அவரின் பதிவுகளின் உள்ளிடுகைகள் ஏற்கனவே அச்சிதழ்களிலே ஏற்றப்பட்டிருப்பதன் காரணமாக, பூங்காவினுள்ளே சேர்க்கப்படவில்லை. தொடர்ந்தும் வாராவாரம் தரமான புதிய பதிவொன்றை - அதை இடுகின்றவர் புதிய பதிவராக இருக்கவேண்டிய அவசியமில்லை - நாம் பூங்காவுக்காகத் தேர்ந்தெடுத்து மதிப்பளிக்க விரும்புகின்றோம்.
தமிழ்மணத்தின் வாசிப்பில் ... பத்திக்காக, இவ்வாரம் செல்வநாயகி மிகவும் அருமையான எழுத்தாக்கத்தைத் தந்திருக்கின்றார். தனியே இவ்வாரப்பதிவுகளைமட்டும் அலசாமல், தமிழ்மணத்தோடும் வலைப்பதிவோடுமான அவருடைய நடையினையும் சேர்த்துத்தருகின்றது இப்பத்தி. இதுவரை இப்பத்தியினைத் தந்த அனைத்து பதிவு வாசகர்களும் அவரவர் பார்வைகளிலே அலசியிருப்பது பூங்காவிற்குச் செழுமையினை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்காக அவர்கள் அனைவருக்கு நன்றி.
மேலும் இந்த முப்பத்தியெட்டாவது பூங்கா இதழ், முனியாண்டி, ஞாயிறு, வெயிலான், பங்காளி ஆகியோரின் அரசியல், சமூகம், மொழி சார்ந்த பதிவுகளையும் உள்ளடக்கி வருகின்றது.
|