|
மா.சிவக்குமார்
|
மாமாவுக்கு 87 வயது. வண்டி இடித்துக் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது நடமாட முடியாமல் இருக்கிறார். போன தடவை வந்த போது போய்ப் பார்க்க முடியவில்லை.
யார் என்று கேட்டு அடையாளம் தெரிந்து கொண்டார். காது நன்கு கேட்டது. என்னைப் பற்றிய விபரங்கள் நன்கு நினைவு இருந்தன. கீழே விழுந்த, அறுவைச் சிகிச்சை செய்த அனுபவங்களை எல்லாம் சொன்னார். யோகீஸ்வரர் சாமிக்கு நிறைய சொத்து, அதை எல்லாம் வித்து இரண்டு கோடி ரூபாய் வங்கியில் போட்டு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்களாம்.
'தோசையைச் சுடு, காபியைப் போடு' என்று அத்தையை விரட்டிக் கொண்டிருந்தார் மாமா. கடைசியில் சீனி போடாமல் பால், முறுக்கு என்று கையில் திணித்து விட்டுத்தான் ஓய்ந்தாள் அத்தை, அப்பாவின் அக்கா. 'வெளியே போக முடியாமல் எப்படிப் பொழுது போகிறது' என்று கேட்டேன். தொலைக்காட்சி எல்லாம் ஈடுபாடு இல்லை, அப்படியே சும்மா படுத்துக் கிடப்பேன் என்றார் மாமா.
விவசாயம் செய்து வந்தவர் அவர். சின்ன வயதில் நான் அங்கு போன போதெல்லாம் அதிகமாகப் பேச மாட்டார். ஆனால் தலைப்பாகைக் கட்டோடு, கரிய உடலோடு, புகையிலை அடக்கிய வாயோடு சாப்பிட வரும் போது கொஞ்சம் பயமாக இருக்கும். நல்ல உழைப்பாளி என்று நினைவு இருக்கும். இப்போது எண்பத்தியேழு வயதிலும் உடல் உறுதியாக, எலும்பு முறிவைத் தாங்கி தேறும் வளைவுத் தன்மையுடன் இருந்தது.
'எப்படியெல்லாம் பாடுபடுவோம் நாங்க. மழை வெயில் பார்க்க மாட்டோம். விவசாயம் செய்யணும்னா உழைப்புத்தான். எவ்வளவு உழைக்கிறோமோ அவ்வளவுதான் நிக்கும். வருஷம் பூராவும் உழைப்புத்தான்' என்றார். ஒரு பையன், நான்கு பெண்கள். பையன் நான் சின்ன வயதாக இருக்கும் போதே திருச்சியில் விபத்தில் இறந்து போனான். அதன் பிறகு நான்கு பெண்களையும் வளர்த்து ஆளாக்கிய பிறகு மாமாவும் அத்தையும் தனியாக இருக்கிறார்கள்.
'வேறு வருமானம் ஒன்றும் கிடையாது. மக்கமாருகள் கொடுக்கும் பணத்தில்தான் செலவுகள். ஆப்பரேஷனுக்கு இருபதாயிரத்துக்கு மேல் ஆகி விட்டது. நானும் சித்தப்பாவும் ஆளுக்கு ஐயாயிரம் கொடுத்தோம். இன்னைக்கு நீ ஒரு நூறு ரூபாய் மாமா கையில் கொடு' என்று முன்பே சொல்லியிருந்தார்கள் அப்பா.
'என்கிட்ட இருக்கு, ஐநூறு வேணும்னாலும் கொடுக்கேன்' என்றேன். கொஞ்சம் யோசித்து விட்டு, இருநூறு ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள் அப்பா. தயாராக பணப்பையிலிருந்து உருவி வைத்துக் கொண்டேன்.
பேச்செல்லாம் முடிந்து கிளம்பும் போது மாமாவின் கையில் நோட்டுக்களைக் கொடுத்தேன். எப்படி எந்த நேரத்தில் கொடுப்பது என்றெல்லாம் சமூக நடவடிக்கை தெரியாத அப்பாவி நான். சரியாகத்தான் கொடுத்தேன் என்று பட்டது. அப்படியே கண்களில் ஒத்திக் கொண்டார் மாமா.
மனம் கடுத்துப் போனது. வாழ்நாள் முழுவதும் மண்ணில் பாடுபட்ட இந்த மனிதரை அடுத்தவரை அண்டி இருக்க வைத்து விட்ட நம் அமைப்பின் மீது வருத்தமாக இருந்தது. சொந்தக் காரர்கள் உதவியில்தான் இருந்தாலும், மைத்துனர்கள், மகள்களிடமிருந்து பணம் வாங்கும் போது அந்தப் பெருமையான மனிதருக்கு மனம் என்ன பாடுபடும்? தனது உழைப்புக்கு அங்கீகாரமாக ஏதாவது மாதாமாதம் வரும் படி நாட்டின் விவசாயிகள், உடல் உழைப்பாளிகள் அனைவருக்கும் ஏற்பாடு இருக்க வேண்டும்.
அரசாங்க உதவிகள் பெறக் கிட்டத்தட்ட பிச்சைக்காரராக ஆகி விட வேண்டியிருக்கும். எப்படியோ இந்தச் சமூக அமைப்பு அவரை தாங்குகிறது.
http://masivakumar.blogspot.com/2007/06/blog-post_470.htm l
|