வலைபதிவர் கண்ணாயிரமும் அவரது நண்பர் ஜிகிடியும் சிவாஜி படம் பார்க்க கிளம்பினர்.காரில் போகும்போது கண்ணாயிரம் உச்சுகொட்டிக்கொண்டே வந்தார். ஜிகிடிக்கு பொறுக்க முடியவில்லை.
"ஏன்டா இப்படி உச்சுகொட்டிட்டே வர்ரே?" என்றார்.
"இந்த திரைப்படத்துக்கு நாள்முழுக்க வரிசையில் நின்று மனித உழைப்பை கரியாக்குகிரானே தமிழன் என யோசித்தேன். கவலையில் உச்சு கொட்டினேன்" என்றார் கண்ணாயிரம்.
"நீ ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உன் வலைபதிவில் உட்கார்வாய்?" என்று கேட்டார் ஜிகிடி.
"18 மணிநேரம்" என்றார் கண்ணாயிரம்.
கார் திரையரங்கை அடைந்தது. அங்கே ரஜினி கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.
"பாலை எப்படி எல்லாம் வேஸ்ட் செய்கிறான் பார்த்தாயா?" என மீண்டும் உச்சு கொட்டினார் கண்ணாயிரம்.
"படம் போடும் நேரம் ஆகிவிட்டது" என அவசரப்படுத்தினார் ஜிகிடி.
'இரு..இரு..ஒரு காட்பரீஸ் மில்க் சாக்லட் வாங்கி வந்து விடுகிறேன்" என ஓடிப்போய் வாங்கினார் கண்ணாயிரம்.
"மில்க் சாக்லட் தினமும் சாப்பிடுவாயா?" என்று கேட்டார் ஜிகிடி.
"வாரத்துக்கு நாலைந்து சாப்பிடுவேன்" என்றார் கண்ணாயிரம். இருவரும் திரையரங்குக்குள் நுழைந்தனர்.
முதல் பாட்டில் நயன் தாராவை பார்த்ததும் "பெண்மையை கேவலப்படுத்தறாண்டா" என்று முணுமுணுத்தார் கண்ணாயிரம்.
"என்னடா சொல்றே?" என்று கேட்டார் ஜிகிடி.
"அரைகுறை ஆடையில் நடிகையை ஆடவிடுவது பெண்மையை கேவலப்படுத்துவது தானே?" என்று கேட்டார் கண்ணாயிரம்.
"அட ஆமாம்" என்றார் ஜிகிடி.
கண்ணாயிரத்தின் செல்போன் அலறியது."அட சட்" என்று அதை எடுத்து வைப்ரேட்டர் மோடில் வைத்தார்.
"செல்போன் புதுசா? குடு பார்க்கலாம்" என வாங்கினார் ஜிகிடி. ஸ்கிரீன் சேவரில் நீச்சல் உடையில் எதோ பெண் தெரிந்தார்.
"யாருடா இது?" என கேட்டார்.
"ஜெனிஃபர் லோபஸ்டா..அதை விடு..என்ன சொல்லிட்டிருந்தேன்?ஆங்..பெண்மையை கேவலப்படுத்துவது..இந்த சினிமாகரன்லாம் திருந்துவான்றே நீ?"
திரையில் கறுப்புபணத்துக்கு எதிராக ரஜினி முழங்கிக்கொண்டிருந்தார்.
"இவர் கிட்டயும், ஏவிஎம் கிட்டயும், ஷங்கர் கிட்டேயும் இல்லாத கறுப்பு பணமா? புல்ஷிட்..." என சத்தமிட்டார் கண்னாயிரம். ஆவேசத்தில் அவர் உடம்பு நடுங்கியது.
'இந்த ப்ளாக் மணி அவ்ளோ பெரிய பிராப்ளமா?" என்று கேட்டார் ஜிகிடி.
"அரசாங்கத்துகிட்ட கணக்கு காட்டாம ஏமாத்தற பணம் தான்டா ப்ளாக் மணி.இதனால அரசுக்கு எத்தனை நஷ்டம் ஏற்படுது தெரியுமா?ஆனா அதை சொல்ல இவனுகளுக்கு ஒரு தகுதி வேணாமான்னேன்" என்றார் கண்ணாயிரம்.
வைப்ரேட்டரில் போன் மீண்டும் ஒலித்தது. நைசாக எடுத்து "தியேட்டர்ல இருக்கேன்.அப்புறம் பேசறேன்" என்று சொல்லி போனை கட் செய்தார் கண்னாயிரம்.
"போன்ல யாரு?" என்று கேட்டார் ஜிகிடி
"லேண்ட் புரோக்கர். புறநகரில் ஒரு கிரவுண்ட் இடம் விலைக்கு வருதுன்னார். பேச சொல்லிருந்தேன். கிரவுண்ட் நாலு லட்சத்துக்கு படிஞ்சது...இனி பணத்தை புரட்டணும்..ப்ளாக்க்ல மூணு, ஒயிட்ல ஒண்ணு...ஆமா என்ன சொல்லிட்டிருந்தேன்?"
"ப்ளாக் மணி எனும் சமூக குற்றத்தை பற்றி பேசிகிட்டிருந்தோம்"
திரையில் ரஜினி காவிரியை பற்றி பாடியதும் கடும்கோபமடைந்தார் கண்னாயிரம்.
"கர்னாடகாவில் தமிழர்களை கொன்னுகிட்டிருந்தப்ப இந்த தமிழ் பாசம் எங்க போச்சு?" என்று கேட்டார் கண்னாயிரம்.
"எப்ப நடந்தது இது?" என்று கேட்டார் ஜிகிடி.
"1992ல் பங்காரப்பா ஆட்சியில்..அப்ப தமிழர்களை கர்னாடகாவில் கொளுத்தினாங்க..அப்ப இவர் எங்க இருந்தார்?அப்ப ஒரு அறிக்கை மட்டும் விட்டுட்டு இப்ப ஸ்க்ரீன்ல 'தமிழ், காவிரின்னு' உளறினா என்ன அர்த்தம்?" என்று கேட்டார் கண்னாயிரம்.
"1992ல எந்த மாசத்துல நடந்த அக்கிரமம் இது?" என்று கேட்டார் ஜிகிடி.
"மாசம் சரியா ஞாபகமில்லை...ஆனா அந்த இன்சிடண்ட் எனக்கு க்ளியரா ஞாபகமிருக்குடா..1992ல நான் ஊட்டில ஒரு ரிசார்ட்டில் கோடை விடுமுறைக்கு ஒரு மாசம் தங்கியிருந்தேன்.அப்ப நடந்த சம்பவம் இது....அந்த 1 மாசமும் என் உடல் தான் ஊட்டில இருந்துச்சே தவிர, மனசு பூரா பெங்களூர்ல தான்டா இருந்துச்சு.." என்றார் கண்ணாயிரம்.
ஸ்க்ரீனில் ரஜினி ஏழ்மையை பற்றி பேசிக்கொண்டிருக்க கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. இன்ஸ்ன்டன்டாக ஒரு கவிதை எழுதினார்.
"ஏழ்மையை சொல்ல
ஆன
செலவு
85 கோடி"
"இதென்னடா இது?" என்று கேட்டார் ஜிகிடி.
"புதுக்கவிதைடா" என்றார் கண்னாயிரம்.
"இதை சிம்பிளா 'ஏழ்மையை சொல்ல ஆன செலவு 85 கோடி"ன்னு ஒரே வரில எழுதிருக்கலாமே?" என்று கேட்டார் ஜிகிடி.
"அப்படி எழுதினா அது கவிதை ஆகாது. பிரிச்சு போட்டு எழுதினா தான்டா கவிதை" என்றார் கண்ணாயிரம்.
"அதே மாதிரி செட்டிங் போட்டு செலவு பண்ணி எடுத்தா தான்டா படம்.செலவே பண்ணாம ஏழ்மை ஒழிகன்னு சொன்னா அது துணுக்கு" என்று சொல்ல நினைத்தார் ஜிகிடி...
ஆனால் கண்ணாயிரம கொலைவெறியில் இருந்ததால் சொல்லாமல் விட்டுவிட்டார்...
எதுக்கு வம்பு?
http://holyox.blogspot.com/2007/06/301.html
|