24-ஜூன்-2007 அன்று சென்னை வித்லோகா புத்தக நிலையத்தில் நடந்த வலைபதிவர் சந்திப்பின் நிமிடக் குறிப்புகளின் ஒரு பகுதி. பதிவர் பட்டறை பற்றிய விவாதங்கள் மட்டுமே இதில் பதியப்படுகின்றன.
முதலில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பதிவர் பட்டறை குறித்து மா.சிவகுமார் பேசினார். பட்டறையை மொத்தம் இரண்டு அமர்வுகளாக திட்டமிட்டிருக்கிறோம்:
- பதிவுகள் என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்காக ஒரு முதல்நிலை பதிவர் பட்டறை
- பதிவுகளில் ஏற்கனவே இயங்கிவரும் கணினித் தொழிற்நுட்ப வல்லுநர்கள் அல்லாத பிரிவினருக்காக அடுத்த அமர்வு.
தொடர்ந்து பதிவர் பட்டறையின் உள்ளடக்கம், பங்கேற்போர், பிற தளவாடங்கள் என்று இந்தப் பதிவில் கண்டிருக்கும் விவரங்கள் அனைத்தையும் ஒருமுறை பிரகாஷ், விக்கி, பொன்ஸ் முதலானோர் அறிமுகப்படுத்தினர்.
சந்திப்புக்கு வந்திருந்தவர்கள் பட்டறையை மேம்படுத்துவது குறித்து தத்தம் யோசனைகளை முன்வைத்தனர்:
- 'பின்னூட்டத்தில் லிங்க் கொடுப்பது போன்ற சின்னச் சின்ன தொழிற்நுட்ப குறிப்புகள் தொடங்கி அசைபடங்கள் சேர்ப்பதுவரை சொல்லிக் கொடுக்க முடியுமானால் நிறைய பேருக்குப் பயனுள்ளதாக இருக்கும்' என்ற யோசனையை லக்கிலுக், முத்துலட்சுமி, தமிழ்நதி என்று பல பதிவர்களும் முன்வைத்தனர்.
- லக்கிலுக், புகைப்படங்களில் சித்து விளையாட்டு காட்டும் morphing நுட்பங்கள் குறித்து தாமே ஒரு அமர்வு நடத்துவதாகவும் முன்வந்தார்.
- செல்பேசிவழி வலைபதிதல் நுட்பம் தமிழ்ப்பதிவுகளில் குறைவாகவே உள்ளது. இது குறித்த அமர்வொன்றையும் நடத்த வேண்டும் - லக்கிலுக்
- சென்னையில் உள்ள கல்லூரிகளின் தமிழ்மன்றங்களுக்கு அறிவிப்பு அனுப்பி, தமிழார்வம் மிக்க மாணவர்களைப் பங்கேற்க வைத்தால் சிறப்பாக இருக்கும் - ப்ரியன், அருள்குமார்
- 'சென்னை பல்கலைக் கழக வெளியுறவுத்துறை அதிகாரி மூலம், பல்கலைக்கழகம் சார்ந்த பிற கல்லூரிகளுக்கு அறிக்கை அனுப்பச் சொல்லலாம்' என்ற யோசனையை முன்மொழிந்ததோடு அல்லாமல், சரியான விவரம் கொடுத்தால், இந்தப் பொறுப்பைத் தாமே எடுத்துக் கொள்வதாகவும் சொன்னார் சிவஞானம்ஜி.
- தமிழ்மன்ற மாணவர்கள் மட்டுமல்லாது, தொலைதொடர்புத் துறை படிக்கும் பிள்ளைகளுக்கும் அழைப்பு அனுப்பவேண்டும் என்றார் பாலராஜன்கீதா
- பாலராஜன் தன் இரண்டு மடிக்கணினிகளை இந்த நிகழ்வுக்காக அரங்கத்துக்கு எடுத்து வருவதாகவும் வாக்களித்தார்
- FETNA நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் குறுந்தகட்டின் உள்ளடக்கம், பட்டறைக்காக திட்டமிடப்பட்டிருக்கும் உள்ளடக்கத்துடன் ஒத்திருக்குமானால், அந்த குறுந்தகட்டைப் பகிர்ந்துகொள்வதாக வாக்களித்தார் மு.சுந்தரமூர்த்தி.
- பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதும் சான்றிதழ் கொடுக்கலாம் என்றும் மு.சுந்தரமூர்த்தி சொன்னார். பட்டறைக்கான சான்றிதழ் பல்கலைக்கழக சார்பாகவும் கொடுக்க முடியுமானால் அவர்களையே உதவி கேட்கலாம் என்றார் பத்ரி.
- "பொதுவாக எழுத வருபவர்கள் ஆரம்ப ஜோர் தீர்ந்ததும், ஓரிரு மாதங்களில் எது குறித்து எழுதுவது என்று யோசித்து எழுதுவதை நிப்பாட்டி விடுகிறார்கள். இந்தக் குறை நீங்க, ஒலிப்பதிவிடல், ஒளிப்பதிவிடல், குறும்படங்கள் போன்ற செய்திச்சேகரிப்பு ஒளிக்கோப்புகள் இடுவது போன்ற விசயங்களை ஆழ்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டும்" - பத்ரி
- "ஏற்கனவே வலைபதிந்து கொண்டிருக்கும் இணைய மக்களையும், இணைய வசதி பரவலாக இல்லாத கல்லூரி மாணவர்களையும் மட்டுமன்றி இணையத்தில் இருக்கும், வலைபதிவு சாரா மென்பொருள் வல்லுநர்களையும் ஈர்க்க வேண்டும். சின்னச்சின்ன கதைகள், உருக்கமான கவிதைகள் போன்ற விவரங்களுடன், 'நீங்களும் இது போல் எழதவேண்டுமா? வாருங்கள் எங்கள் பட்டறைக்கு!' என்ற வாசகத்துடனான forward மின்மடல்களை அனுப்பி இவர்களைக் கவரலாம்" என்றார் வெட்டிப்பயல். இதுபோன்ற மடல் தயாரித்து அனுப்பும் வேலையையும் தாமே எடுத்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டார்.
- மென்பொருள் நிறுவனங்களில் மட்டுமன்றி யாஹூ குழுமங்கள், கூகள் குழுமங்கள், ஆர்குட் குழுமங்கள் என்று தமிழ் சார்ந்து இயங்கும் எல்லா இடங்களிலும் இந்த அறிவிப்பை இடலாம் என்றார் அருள்குமார்.
- 'வலைபதிவதற்கும், தனித் தளம் நிறுவி செயல்படுவதற்குமான வித்தியாசம் என்ன? பதிவுகளில் எழுதப்பட்டவை விகடன் போன்ற பத்திரிக்கைகளில் அங்கீகரிக்கப்படும் சாதனைகள்' போன்றவை குறித்து விரிவாக பேசினால் கேட்பவர்களுக்கு வலைபதிவதில் ஆர்வம் ஏற்படக்
கூடும் என்றார் தமிழி.
- தாய்மொழியில் வலைபதிவதன் சிறப்பை உணர வைத்தாலே, வலை பதியும் ஆர்வம் அதிகரிக்கும் என்றார் டோண்டு
- மேற்குறிப்பிட்ட இரண்டு அமர்வுகள் மட்டுமல்லாது, ஏற்கனவே தொழில்நுட்பத்தில் தேர்ந்த ஆர்வமுள்ளவர்களை அழைத்து, இணையத்தமிழுக்கு இன்னும் செய்ய வேண்டுவன யாவை? அவற்றைச் செயல்படுத்த என்னென்ன கருவிகள், மனிதவளம், உழைப்பு தேவைப்படும்? அதற்கு யார் யார் தயாராக இருப்பார்கள்? என்பன போன்ற விவரங்களைப் பற்றிப் பேச வைக்க வேண்டும் என்றார் மா.சிவகுமார். இந்த யோசனையை பத்ரி ஆர்வத்துடன் வழிமொழிந்தார். எளிமையான, முழுமையான சொல்திருத்தி, அகராதி போன்றவற்றிற்கான தேவை இன்னமும் இருப்பதை நினைவு கூர்ந்தார்.
பட்டறையில் கொடுக்கப் போகும் குறுந்தகட்டின் உள்ளடக்கமாக சில விளக்கப்படங்களையும் சேர்க்க எண்ணியிருக்கிறோம். பின்வரும் தலைப்புகளை அதற்காக தேர்ந்தெடுத்திருக்கிறோம் :
- தமிழில் இருப்பதை படிப்பது எப்படி? - 98/2000
- தமிழில் இருப்பதை படிப்பது எப்படி? - XP, மற்ற advanced versions, Firefox, Linux
- தமிழில் தட்டச்சுவது எப்படி? - சுரதா, ஹைகோபி, தங்கிலிஷ்
- தமிழில் தட்டச்சுவது எப்படி? - தமிழ் 99
- ஈகலப்பை நிறுவுவது எப்படி?
- பதிவுச் சேவைக் கருவிகள் - blogger, wordpress, cms, spirit, yahoo 360, sify
- ப்ளாக்கரில் புதுப் பதிவு தொடங்குவது எப்படி?
- வோர்ட்பிரஸ்ஸில் தொடங்குவது எப்படி?
- திரட்டியில் சேருவது எப்படி?- already done by வெளிக்கண்ட நாதர்
இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பை ஏற்று ஒரு நிமிடத்துக்குள் முடியும் விதமான விளக்கப்படம் தயாரித்து கொடுக்க தன்னார்வலர்கள் தேவை.
* மேலே சொன்ன விசயங்கள் தவிர்த்து இந்தப் பதிவர் பட்டறை குறித்த ஆலோசனைகள், தன்னார்வ உதவிகள், கவனித்த குறைகள், 'இப்போ இது ரொம்ப தேவையா?' என்று எதைவேண்டுமானாலும், உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால், நமக்கு உதவியாக இருக்கும். உங்கள் எண்ணங்களையும் எழுதுங்களேன்..
|