இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
நான் நொறுங்கிய பொழுதுகள்... Print E-mail
மங்கை   

மிகை ஆர்வம் காரணமாக சமயங்களில் திட்டமிடாமல் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கிறோம். விளைவு பிரச்சனை வரும்போது அதை எதிர் கொள்ள முடியாமல் மன உளைச்சல்.காலம் கடந்த பின்னர் திரும்பிப் பார்த்தால் நாமளா இவ்ளோவ் முட்டாள்தனமா நடந்திருக்கோம்னு நினைச்சி வெக்கமும் வேதனையும் படுவோம்.அப்படி என் வாழ்க்கையில சந்தித்த ஒரு பிரச்சனையை பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது ஒரு பெண்ணால் எனக்கு ஏற்பட்ட இன்னல்கள், அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு, துன்பங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத வேதனை வடுக்கள். நமக்கு நல்லது செய்தவர்களை எப்படி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதோ அப்படி நம்பவச்சு கழுத்தறுத்த துரோகிகளையும் வாழ்நாள் பூரா மறக்க நினைத்தாலும் முடியறதில்லை.

90களின் ஆரம்பத்தில் ஏதாவது தொழில் துவங்கி பெரிய 'தொழில் அதிபரி' ஆயிடனும்னு புராஜக்ட் எல்லாம் தயாரிச்சு வங்கியில குடுத்து PMRY ல லோன் கேட்டேன்.ஆச்சர்யமான ஆச்சர்யமா ஒரு வாரத்துல குடுத்துட்டாங்க. மாணவர்களுக்கான நோட்டு புத்தங்கள் தயாரிக்கலாம்னு பெங்களூரு போய் நாலஞ்சு பேர பார்த்து மெஷினரி எல்லாம் இறக்குமதி பண்ணி, முதல் வருடமே சுமார் 10 லட்ச ரூபாய்க்கு பள்ளிகளில் இருந்து நோட்டுகளுக்கான ஆர்டர் வந்துச்சு. தலைகால் புரியலை. ஏதோ சும்மா வீட்ல இருக்க பிடிக்காம ஆரம்பிச்சது இவ்வளவு நல்ல வரவேற்பு இருக்கேன்னு சந்தோஷம் ஆயுடுச்சு. இதற்கு பல காரணங்ககள் இருந்தாலும் இரு முக்கிய காரணங்கள், இந்த குறிப்பிட்ட தொழில்ல பெண்கள் யாரும் இல்லாததும் மேலும் நான் அணுகிய பெரும்பாலான பள்ளி தலைமை ஒரு பெண்ணா இருந்ததும்தான்.

முழுக்க முழுக்க labour oriented தொழில் ஆனதால் பணியாட்களை தாஜா செய்ய வேண்டியிருக்கும். நானும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்கள் தங்குவதற்கு
கம்பெனியிலேயே ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, ஊட்டி, கொடைக்கானல் என பல ஊர்களில் இருந்து ஆர்டர் வந்து குவிந்தது. முக்கியமா தூத்துக்குடியில் தான் அதிகமாக கிடைத்தது. 1994 இல் இருந்து 99 வரை, நான் பெரும்பாலும் தூத்துகுடியில்தான் இருந்தேன் என்று சொல்லலாம். மூன்றாம் ஆண்டே 20 லட்சமும், 4 ஆம் ஆண்டு 30 லட்சம் என டர்ன்ஓவர் உயர்ந்தது.இப்படி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அவசரப்பட்டு யோசிக்காமல் எடுத்த ஒரு முடிவும் அதன் விளைவும் என் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது என்றால் மிகையில்லை.

அந்த சமயத்தில் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்த ஒரு பெண்ணின் (அவளை பெண் என்று சொல்லக் கூட எனக்கு விருப்பம் இல்லை) நட்பு கிடைத்தது. ஆனால் அவளால் பல லட்சத்தை இழக்கப் போகிறேன் என்று அப்பொழுது தெரியவில்லை.


அந்தப் பெண்,தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஒரு கூட்டமைப்பின் செகரட்டிரியாகவும் இருந்தாள். இந்த கூட்டமைப்பின் மூலமாக உறுப்பினராக இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் சப்ளை செய்யலாம் என்றும், எல்லோருக்கும் ஒரே தரத்துடன் கூடிய நோட்டுக்களை செய்வதால் உற்பத்தி செலவும் குறையும், வருடா வருடம் அதிக சிரமம் இல்லாமல் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் என்றும் கூறினாள்.

கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து பேசினோம். இன்று இவன் ஒரு கட்சி ஆரம்பித்து கொள்கைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கும்.....................(அ)யோக்கியன்...நன்றாக நினைவிருக்கிறது. பிப்ரவரி 4ஆம் தேதி. பூந்தமல்லிசாலையில் இருக்கும் ஹோட்டல் 'சுதா'வில் தான் சந்தித்தோம். விலையை மிக குறைவாக கேட்டான். நான் முடியாது என்று கூறி புறப்பட்டு விட்டேன். ஆனால் எப்படியோ மீண்டும் பேசி, கொஞ்சம் விலையை ஏற்றி, ஒரு வழியாக ஒத்துக்கொண்டோம். சப்ளை செய்து மூன்று மாத தவனையில் பணம் கொடுப்பதாக ஒத்துக்கொண்டான்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் மார்ச் மாதத்தில் உற்பத்தியை துவங்கினோம். என் நல்ல நேரம் அந்த வருடம் பேப்பர் தட்டுப்பாடு, விலை உயர்வு, பணியாட்களின் பிரச்சனை என்று எல்லாம் சேர்ந்து, ஒத்துக்கொண்ட ஆர்டர்களை எப்படியாவது முடித்தால் போதும் என்கிற நிலைமை. போதாக்குறைக்கு, நான் மேலே குறிப்பிட்ட பெண் தினமும் என் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாத கோபம் வந்து அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக துரத்தி அடித்தேன்.

மேலே சொன்ன தலைவருக்கு மட்டும் மொத்தம் ரூபாய் 22லட்சத்துக்கு நோட்டுகள் சப்ளை செய்தோம். இது தவிர வழக்கமாய் வரும் ஆர்டர்கள் சேர்த்து 4/5 மாதத்திற்குள் நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவர் 48 லட்சம் ரூபாய்....ஆரம்பத்தில் தருவதாக ஒப்புக்கொண்ட அட்வான்ஸ் தொகையையும் சொன்னபடி கொடுக்காததால் மேற்கொண்டு சப்ளை செய்ய முடியாது என்று கூறிவிட்டேன்.என் நிலைமை எப்படியிருந்திருக்குமென யோசித்துப் பாருங்கள், விழி பிதுங்கி விட்டது.

ஒரு வழியாக சப்ளை செய்து முடித்தேன்.பின்னர் அவளை பார்ப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஒரு மாதம் இரண்டாகி,மூன்றாகி..பணம் வந்த பாடில்லை. ஆளும் சிக்கவில்லை. அவள் கணவன் கோவை பார் கவுன்சிலில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தான்.அதே சமயத்தில் என் கணவரின் மாமா, பொள்ளாச்சியில் மேஜிஸ்ட்ரேட்டாக இருந்ததினால் அவனை மிரட்டி, நுகர்வோர் கோர்ட் நீதிபதி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் மாதம் 5 லட்சம் வீதம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டாள். அவள் சொன்னபடி பார்த்தால் என் பணம் வசூலாக 4 மாதம் ஆகுமே, என்ன செய்வது விதியை நொந்துகொண்டும், வந்தால் போதும் என்று அவள் கொடுத்த காசோலைகளை வாங்கிக்கொண்டோம். காசோலைகளில் அந்த சென்னை ஆசாமி கையெழுத்துதான் இருந்தது.

முதல் காசோலையே போட்ட வேகத்தில் திரும்பியது. சென்னை, புதுக்கோட்டை
, மதுரை என்று அவன் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று போராடி போராடி முதல் 5 லட்சம் வாங்கவே டிசம்பர் அகிவிட்டது. அதற்கு பிறகு பல தடவை சென்னை சென்றும் அவனை பார்க்க முடியவில்லை. அந்த பெண்ணோ தலைவரிடம் பேசிக்கொள்ளுங்கள், நான் வெறும் செகரட்டரிதான் என்று கூறி கை கழுவி விட்டாள்.

பிறகு வழக்கு பதிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக மீத தொகையினை வாங்குவதற்குள் மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது. அதிலும் ஒன்றைரை லட்சம் ரூபாய் இன்று வரை வரவில்லை.இதன் விளைவாய் இரண்டாம் வருடம் எங்கள் வியாபாரமும் படுத்து விட்டது. 3 வருடங்கள் கழித்து 20 லட்சம் வந்தாலும் அது எந்த விதத்திலும் என் பிரச்சனையையும் தீர்க்கவில்லை, இழந்து போன என் தொழிலையையும் மீட்டுத்தரவில்லை. PMRY ல் கடன் வாங்கி ஆரம்பித்த வியாபாரத்தில் இத்தனை குளறுபடி நடந்தால், என் நிலமை என்னவெல்லாம் ஆகியிருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.

பிறகு எனக்கு தொழிலில் இருந்த ஆர்வமும் வேகமும் சுத்தமாக குறைந்து விட்டது. முதுகலை பட்டத்தை வைத்துக் கொண்டு எதற்கு நாம் இந்த தரித்திர தொழிலில் இருக்க வேண்டும் என்று மனதில் பட்டது. எத்தனை ஆர்வமாய் இந்த படிப்பை படித்தோம்.. எதற்காக இந்த தொழிலை ஆரம்பித்து இத்தனை மன உளைச்சல், வேதனை. என்ன சாதித்துவிட்டோம்


யோசித்தேன்...ஒரே இரவுதான், காலையில் முடிவெடுத்து விட்டேன்.

அடுத்த நாள் சான்றிதழ்களை எல்லாம் தூசுதட்டி எடுத்து, PSG மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் செய்தேன். அங்கு சமுதாய மருத்துவ துறையில், எச்ஐவி/ எய்ட்ஸ் ல் project officer 5 வருடங்கள், பின் தில்லியில், வாய்ப்பு கிடைக்கவே இங்கு வந்து விட்டேன். பிஎஸ்ஜி யில் சேர்ந்ததில் இருந்து இன்று வரை, 8 வருடங்கள், திரும்பி பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றேன். ஆனால் அன்று ஏற்பட்ட காயமும்,வலியும் அதன் வேதனையும் இந்த நிமிடம் வரை பத்திரமாய்தான் இருக்கிறது. தூக்கியெறிய நினைத்தாலும் துலைந்து போகாத தழும்புகளாக எனக்குள்ளேயே இருக்கின்றன.

என் மீதும் தப்பிருக்கிறது, இத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டதற்கு எனது கவனக்குறைவும், அனுபவமின்மையும் காரணம்...அதற்காக என் சக்திக்கு மீறிய விலையையும் கொடுத்துவிட்டேன். ஆனால் என்னால் ஜீரணிக்க முடியாதது என்னை சுற்றி இருந்த பொய் முகங்களை அடையாளம் கண்டபோதுதான். நிஜமாகவே நான் நொறுங்கிப் போய்விட்டேன். நம்மிடம் இருக்கும் பணத்திற்கும், பொருளுக்குமா நம்மிடம் வந்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்த போது, உண்மையில் நம் மதிப்புதான் என்ன?, என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.


இன்று மீண்டும் அதே ஜென்மங்கள் ஆஹா இருந்தால் இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று நமக்கு சான்றிதழ் குடுத்து, பொய்ப் பாசம் காட்டி, வேசம் போடுவதைப் பார்த்தால்.... ஹ்ம்ம்ம் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நாம் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க நேர்ந்துவிடும் ஏராளமான நிகழ்ச்சிகள் வாழ்க்கையில் நடந்தபடியே தான் உள்ளன. இந்த நிகழ்வுகலால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது அது துாண்டிவிடும் எண்ணங்களையும் துக்கங்களையும் கேள்விகளையும் கூர்ந்துபார்த்து நம்மை செதுக்கி, உண்மையில் உலகத்தில் நிலையானது எது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் வேதனையான விஷயம், இப்படி அடி பட்டும் திருந்தாத சில மனிதப் பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

http://manggai.blogspot.com/2007/06/blog-post_28.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)