கருத்தொன்றினதோ சமூகமொன்றினதோ வரலாற்றினை எழுத வேண்டியதன் தேவை பற்றிய விவாதம் எழுகின்றபோது, எழுதப்பட்ட வரலாற்றினை வைத்து கருத்தினில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்ற விவாதமும் ஏற்பட்டுவிடுகின்றது. வாசிக்கப்படும் வரலாறு என்பது தனியே நிகழ்வுகளைக் கால, கள அடிப்படையிலே கண்டுகொள்வதிலே மட்டும் திருத்தமாகவிருந்துவிடமுடியாது; எவர் எப்பின்புலத்திலே நிகழ்வுகளிலிருந்து வரலாற்றினைத் தொகுக்கின்றார் என்பதையும் உணர்ந்துகொண்டு வாசகன் கற்பதும் அவசியமாகின்றது. வரலாற்றாசிரியரையும் அவரின் பின்புலம், சொல்நோக்கு ஆகியவற்றினைத் தவிர்த்துவிட்டு வாசிக்கப்படும் வரலாறு கருத்தியல் மாற்றம், சமூகத்தின் தொடர்ச்சி பற்றிய புரிதலுக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும். கடந்த இரு வாரங்களிலே தமிழ்மணத்திலே தொகுக்கப்பட்ட வலைப்பதிவுகளிலே 'இணையத்திலே தமிழ்' என்ற மையக்கருவினைச் சுற்றி நிகழும் விவாதங்களும் இதன் அடிப்படையிலேயே காணப்படவேண்டும். இத்தொடர்விவாதத்தினை முடுக்கிவிட்ட மாலனின் கட்டுரையைக் கடந்த வாரம் பூங்கா வெளியிட்டிருந்தது. இவ்வாரத்தின் பூங்கா, தொடர்ச்சியாக, -/பெயரிலி, ஓசை செல்லா, மாயன் ஆகியோரின் எதிர்வினைகளின் பின்னான மாலனினதும் அருணா ஸ்ரீனிவாசனினதும் கருத்துகளை அவர்களின் பதிவுகளிலிருந்து தொகுத்துத் தருகின்றது.
இவ்விவாதம் பூங்கா போன்ற தமிழ்வலைப்பதிவுகளையும் வலைத்தமிழ்மொழியினையும் மையங்கொண்டு வெளிவரும் வலையிதழ்களிலே இணையத்தின் கடந்த காலக்கூறுகளைச் சேமித்துவைக்கும், வாசகர்களுக்குக் கைகாட்டும் தேவைகளைச் சுட்டிக்காட்டுகின்றது. இணையத்தமிழ் வரலாற்றினை முழுமையாகத் தொகுக்கும் திட்டத்தின் பக்கக்கூறாக, ஒவ்வொரு வாரமும் இணையவரலாற்றுப்பக்கங்களை அகழ்ந்து எடுத்துக்காட்டும் நோக்கத்தோடு இவ்வாரத்திலிருந்து பூங்கா 'வலையகழ்வு' என்ற புதிய பகுதியினை ஆரம்பித்திருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் இயன்றவரை ஆண்டின் இக்காலகட்டத்திலே முன்னைய ஆண்டுகளிலே இணையத்திலே தமிழோடு இணைந்து வந்த பக்கமொன்று இப்பகுதியிலே சுட்டிக் காட்டப்படும். பூங்கா வாசகர்களையும் காலத்தினால் முந்திய இணையப்பக்கங்களைப் பூங்கா ஆசிரியர்குழுவுக்குச் சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். இவ்வாரம், இப்பகுதியிலே முதலாவது மின்னோலையாக, 14 ஜூலை 2007 அன்று தன் பத்தாவது ஆண்டு நிறைவினை எய்திய எழில்நிலா இணையத்தளம் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாரத்தின் பூங்கா சமூகம்சார்ந்த கருத்துகளை முக்கியப்படுத்தும் பதிவுகளை முன்னிலைப்படுத்துகின்றது. லக்ஷ்மியின் பத்தி இன்னொரு பதிவரின் ஆண்கள்-பெண்கள் பற்றிய கருத்துக்கு எதிர்வினையாகத் தோன்றிய கட்டுரையானபோதுங்கூட, தன்னளவிலே தனிக்கட்டுரையாகவும் தமிழ்ப்பண்பாடு என்று சுட்டப்படும் இன்றைய எம் சமூக விழுமியக்கோவையிலே பெண்வைக்கப்படும் நிலையை நோக்குகின்றது. பத்மா அர்விந்தின் கட்டுரைத்தொடரின் மூன்றாம்பகுதி குடும்பம் என்ற அமைப்பின்கீழே ஆண்-பெண் உறவுநிலையில் உளத்தாக்கத்தினை அலசுகின்றது. சந்திப்பின் பதிவு, உலகமயமாக்கத்திற்கும் தமிழ், இந்திய சமூகத்திலே சுமங்கலி என்ற நிலை பெண்களிலே இறுக்கப்படுவதையும் தொடர்புபடுத்தி விபரிக்கின்றது.
இத்தகைய கட்டுரைகளின் தனியாள் உளவியல் பற்றிய கருத்தாடலிலிருந்து விரிந்து அடுத்த பெருமட்டத்திலே, சமூகநிலைக்கூறுகளைப் பேசும் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள், புரட்சி என்ற பதங்களின் வரைவிலக்கணம் காலத்துடனும் களத்துடனும் மாறுபடுதலைக் கருத்திலே கொண்டு வாசிக்கவேண்டிய கட்டுரை இது. இரணியன் - ஸ்பார்ட்டகஸின் கட்டுரை வாழ்க்கையைச் சொல்லும் தற்கொலைகள் முரண்நகையான தலைப்பே கட்டுரையினைச் சுருங்க விரிக்கின்றது. ஜீவியின் கட்டுரை, இட ஒதுக்கீடு பற்றிய மேலுமொரு கட்டுரையானபோதுங்கூட, அது தொடும் களம் ஆரம்பக்கல்வியாகவிருப்பது இணையப்பதிவுகளுக்குப் புதியது.
புலம்பெயர்ந்தநாடுகளில் எம்சமூகத்தின் கலந்து உறவாடும் முரண்படும் அங்கமாகிப்போனது தமிழ்ச்சங்கம். அமெரிக்காவிலே இதுபோன்ற தமிழ்ச்சங்கக்கூட்டமைப்புகளின் அண்மைய நிகழ்வினைப் பற்றிய பார்வையினை, தாராவும் அப்படியான சங்கங்களின் உள்நிலைமீதான தன் பார்வையினை, சுந்தரவடிவேலும் தந்திருக்கின்றார்கள்.
பாரி அரசு தந்திருக்கும் விழியம் மிகவும் நல்லதொரு முயற்சி. இப்பூங்கா தாங்கிவரும் வலைப்பதிவுகளைக் கொண்ட காலப்பகுதியிலே தமிழ்மணத்தின் நட்சத்திரமாகவிருந்த செல்வேந்திரனின் இரு கட்டுரைகள் மிகவும் எளிமையாக, அன்றாட வாழ்வின் இரண்டு அனுபவங்களை விரித்துச் செல்கின்றன. வாய்ஸ் ஆன் விங்க்ஸின் கட்டுரை இணையத்தொழில்நுட்பத்தினை பயனாளிக்கு இலகுபடுத்திச் சொல்லும் நோக்குடன் அமைந்திருக்கின்றது.
இவ்வாரத்தின் 'தமிழ்மணம் வாசிப்பில். . ." பகுதியினை பூங்காவின் வேண்டுகோளுக்கிணங்கித் தந்திருக்கும் பொட்'டீ'கடை சத்யாவுக்கு எமது நன்றி. இவ்வாரத்தின் புதிய பதிவாக பூங்காவின் தேர்வு, தீபாவின் 'My Photoblog.' ஆயினும், அவர் இன்னமும் பூங்கா தன்னிலே சேர்த்துக்கொள்ளும்வகையிலே சம்மதம் தெரிவிக்கும் வசதியைத் தன் பதிவினைக் கொண்டிருக்காத காரணத்தால், அப்பதிவிலிருந்து எப்படமும் பூங்காவிலே சேர்க்கப்படவில்லை. சென்ற வார நட்சத்திரத்தின் தேர்வுகள் பூங்கா இணையப்பதிப்புக்குத் தயாரித்து முடியும்வரை பூங்காவிற்கு வந்து சேராத காரணத்தினாலே இவ்விதழிலே தோன்றவில்லை.
மேலும், அய்யனாரின் கவிதை, திரைப்பட அலசல், காயத்ரியின் கவிதை, டிசேயின் திரைப்படப்பார்வை, பரங்கி கலீல் பாகவியின் செய்திப்பதிவு ஆகியனவும் இந்த நாற்பத்திநான்காவது பூங்கா இதழிலே இடம்பெறுகின்றன.
இந்நேரத்திலே, இணையத்தமிழினைப் பயனாளிகளுக்கு இலகுபடுத்திய உமர் தம்பியினை, அவரின் ஓராண்டு மறைவு தினம் உள்ளடங்கிய இவ்வாரப்பூங்காவிலே நன்றியுடன் நினைவுகூருகிறோம்.
|