இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தமிழகத்தை ஆண்ட சாதிகளின் கதை(யல்ல நிஜம்) Print E-mail
குழலி   

தமிழகத்திலே ஆண்ட சாதிகளின் கணக்கையெடுப்பதை விட ஆளாத சாதிகளின் கணக்கை எடுப்பதுவே சுலபம், ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் கேளுங்கள் அவர்களின் குலப்பெருமைகளையும் ஆண்ட கதைகளையும் சொல்வார்கள், மீனவர்களை செம்படவர்கள் என்று அழைப்பது உண்டு, அவர்களை போய் செம்படவன் என்று அழைத்து பாருங்கள் செருப்பால் அடிப்பார்கள், தாங்கள் பரதவ குலமென்றும் பரதவ குல ராசாக்கள் ஆண்ட கதைகள் உங்களுக்கு சென்னையிலிருந்து குமரிவரை நீண்டிருக்கும் கிழக்கு கடற்கரை ஊர்கள் முழுவதிலும் கிடைக்கும், மதுரைக்கு சென்றால் அறிவாணந்த "பாண்டிய" நாடார் சுவர்களில் சிரித்துக்கொண்டிருப்பார்.

சமீபத்தில் விகடனில் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் நாடார்கள் பற்றி எழுதியதற்கு நாடார் சங்கதலைவர் ஒருவர் நாடார்கள் எப்படி சங்க காலங்களிலும் மற்றைய காலங்களிலும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் என்று மறுப்பு எழுதினார்.

ஊரெல்லாம் கொச சாதி (குயவர்கள்) என்று கூறினாலும் தம்மை "மண் உடையார்கள்" என்றும் சோழ மன்னரின் உயிரை காப்பாற்றியதற்காக சோழர்கள் பல ஊர்களை கொடுத்ததாகவும் அதை ஆண்டு வந்ததாகவும் சொல்லிக்கொள்வார்கள் நாங்கள் வசிக்கும் பகுதியின் மண்ணின் மைந்தர்கள், ஊரை பிரிக்கும் சாலைக்கு தெற்கு பக்கம் ஒரு குடிமக்களும் வடக்கு பக்கம் மற்றொரு குடி மக்களும் வாழ்ந்தார்கள்.

"ஊரின் பவிசு கோவிலில் தெரியும்
குலத்தின் பவிசு குல சாமியிடம் தெரியும்" என்பார்கள்,

ஊர் எத்தனை வளமாக இருக்கிறது என்பதை ஊரில் உள்ள கோவிலின் வளமையிலும் ஒரு குலம் எத்தனை வளமாக உள்ளது என்பதை அவர்களின் குல தெய்வ கோவிலும் அந்த சாமிக்கு எடுக்கும் விழா கொண்டாட்டங்களிலும் தெரியும் என்பார்கள், எனக்கு தெரிந்த இருபது ஆண்டுகளில் இரண்டே முறை குலசாமிக்கு அவர்கள் படையல் எடுத்தனர், அவர்களின் குல தெய்வத்திற்கு கோவில் என்று எதுவுமில்லை, சாமி சிலை கும்பத்தோடு அந்த பரம்பரை வழி ஒருவரின் வீட்டு சாமிமாடத்தில் இருக்கும், பூசையின் போது மட்டும் வெளிக்கொண்டுவந்து வேப்பமரத்தடியில் வைப்பார்கள். இவர்களும் ஆண்ட சாதி தான்.
அதே பகுதியில் ஒதுக்கு புறமாக (ஊர் விரிவடைந்ததில் இப்போது அந்த இடம் மையமாகிவிட்டது) பன்றி மேய்த்து பிழைப்பவர்கள் பல குடும்பங்கள் இருந்தனர், ஊரே அவர்களை பன்னி குறவன் என்றாலும் அவர்கள் "காட்டு நாயக்கர்கள்" என்றே குறிப்பிடுவார்கள், எஸ்.டி. சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் இவர்களுக்கு அது இது வரை கிடைக்கவில்லை, அவர்களை எஸ்.சி. என்றே மாவட்ட நிர்வாகம் குறிப்பிடுகிறது, நாங்கள் என்ன "பறையர்களா" எஸ்.சி. என்று சொல்ல என்று எதிர்க்கிறார்கள், "காட்டு நாயக்கர்களான" நாங்கள் காட்டு ராஜாக்கள் என்கின்றனர், இவர்களும் ஆண்ட சாதி தான்.

வன்னியர்கள் படையாட்சிகள் என்று எங்கள் பகுதிகளில் அழைக்கப்படுவார்கள், படைகளை ஆட்சி செய்தவர்கள் என்று பெருமை பேசும் படையாட்சிகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவேன் நான்.

"படையாட்சியின் குடிசையில்
பன்றிகளின் ஆட்சி
போங்கடா போங்க"

பல்லவ பரம்பரை நாங்க என்பவர்களிடம்

" பல்லவ குல தோன்றல்கள்
பன்றி குடிசைகளில்"


தேவர் என்பது அரசர்களின் பட்டப்பெயர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியுள்ளனர், முக்குலத்தோர் , தேவர், கள்ளர், மறவர் என்றும் இன்னும் பல பல பெயர்களில் சேர, சோழ, பாண்டிய பரம்பரை ஆண்ட பரம்பரை என்பார்கள், பல்லவன் எங்கள் சாதி, சோழன் எங்கள் சாதி நாங்கள் ஆண்ட சாதிகள் என்பவர்களிடம் உங்க சாதிக்காரங்க எல்லோரும் நரசிம்ம வர்ம பல்லவன், ராஜ ராஜ சோழனின் மனைவிக்கும் ஆசை நாயகிகளுக்கும் பிறந்தவர்களா? அந்த ராஜாக்களுக்கு அத்தனை மனைவிமார்களும் ஆசை நாயகிகளுமா? இல்லையே பின் ஏனிந்த வெட்டிபெருமை....

தென் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி "பள்ளர்கள்", ஆனால் பள்ளர் சாதியினர் "பெரியோர் பள்ளர்", "சான்றோர் பள்ளர்" என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும், பல இடங்களில் பள்ளர் இன தலைவர்களும் தலைவிகளும் பெரும் செல்வந்தர்களாக ஊர் ஆண்டவர்களாக புலவர்களுக்கு வாரி வழங்கியிருப்பதை சங்க இலக்கிய சான்றுகளுடன் சொல்கின்றார்கள் தாங்கள் ஆண்ட கதையை.

தமிழகத்திலே ஆளாத சாதிகளைவிட ஆண்ட சாதிகள் அதிகம், ஆளாத சாதியென்றால் அதில் முதலிடம் பிடிப்பவர்கள் பார்ப்பனர்கள் தான் (பல்லவர்கள் பார்ப்பனர்கள் என்று சொல்லப்படுவதை தவிர்த்து) ஆனால் சமூகநிலையில் ஆளாதா சாதி பார்ப்பனர்களும் ஆண்ட சாதி குயவர்கள், வன்னியர்கள் , தேவர்கள், பள்ளர்களும் ஒன்றா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் ஆண்ட சாதியாகிவிடுவார்களா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் கல்வி, செல்வம், அதிகாரம் என எல்லாம் பெற்றவர்கள் ஆகிவிடுவார்களா?

கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார், கலைஞர் கருணாநிதி பிறந்த சாதி இசை வேளாளர்(முடிதிருத்தும் அல்லது நாதஸ்வரம் வாசிக்கும் சாதி என்று சொல்லப்படுவது) அவரை மேடைக்கு மேடை வாழ்த்து வாலியோ பார்ப்பனர், அதனால் இசை வேளாளர் சாதியை வாழ்த்தி பிழைக்குது பார்ப்பனர் சாதி என்று சொல்லமுடியுமா? கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார் கலைஞர் கருணாநிதி பிறந்த இசை வேளாளர் சாதி உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றா சொல்ல முடியும்?

ஒரு சாதியில் பிறந்த ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதி சமூகத்தில் உயர்நிலையில் இருந்ததா? ஆண்ட சாதிகள் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன? ஆண்டவர்கள் எல்லோரும் பார்ப்பன சமூகத்தின் பிடியிலேயே ஆண்டிருக்கிறார்கள், ராஜ குருக்களாகவும், ஆச்சாரிகளாகவும், மந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருந்தது பார்ப்பன சாதி ஆட்களா? அல்லது ஆண்ட சாதி என்று சொல்லிக்கொள்ளும் இந்த சாதிகளா?

பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?

ஏனென்றால் இவர்கள் வர்ணாசிரமத்தை காக்கும் காவல் நாய்கள் மட்டுமே, அதற்காக கிடைக்கும் எலும்புத்துண்டு ஆண்ட சாதி என்கிற பெயர் எதற்கும் உதவாத சாதிப்பெருமை, காவல் நாய்களுக்கு அரியாசனம் மட்டுமல்ல சரியாசனம் கூட கிடைப்பதில்லை, ஆனால் இந்த ஆண்ட சாதிகள், தலித்கள் என அத்தனை ஆட்களின் பங்கையும் சேர்த்து உயர்த்தப்பட்ட சாதிக்காரர்கள் தின்று கொண்டிருக்கின்றார்கள். உண்மை என்னவென்றால் தலித்களுக்கும் இந்த ஆண்ட சாதிகளும் சமூக பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை, அதனாலேயே இடஒதுக்கீடு பல ஆய்வுகளின் முடிவில் வழங்கப்படுகிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் பல ஆய்வு மற்றும் புள்ளிவிபரங்களுக்கு பிறகே இவைகள் வழங்கப்படுகின்றன.

எழுத்தாளர் சமூக நீதி ஆர்வலர் ஆதவன் தீட்சண்யா பூனைக்கு மணி கட்டும் காலம் என்ற கட்டுரையில் சொல்லியுள்ள சில பகுதிகள் இங்கே இவர் தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். என்றும் மிக கடுமையாகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஒடுக்குமுறைகளை சாடியிருந்தாலும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அவர் நிராகரிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் ம க இ க நிராகரிக்கின்றது.

-----------
இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடுதான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.


இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.
-------------

பிற்படுத்தப்பட்டவர்களில் குறிப்பிட்ட சாதியினரே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர் என்பவர்களுக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டநாதன் கமிஷன் வைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 1987 வன்னியர் சங்க போராட்டத்திற்கு பின் அமல் செய்யப்பட்டு மிகபிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு பிற்படுத்தப்பட்டோரிலேயே மற்றோரு பிரிவு உருவாக்கப்பட்டு அதில் இடஒதுக்கீட்டால் பலன் கிட்டாத சாதிகள் இணைக்கப்பட்டன, தற்போது தலித் ஒதுக்கீட்டிலேயே அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது, இது போல அவ்வப்போது இடஒதுக்கீடு அதன் பாதையில் சரியாக சென்று பலன் தருகின்றதா என கவனிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் திமுகவில் உடன்பிறப்புகளே என்றும், அதிமுகவில் ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைப்பதை போல "அன்பார்ந்த உழைக்கும் மக்களே" என்று ஆரம்பிக்கும் ம க இ க விற்கு ஆண்ட சாதிகளின் உழைக்கும் மக்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

நேர்மையாக சொல்ல சொல்லுங்கள் ம க இ க வினரை BC/MBC/DNC பட்டியல் இதில் உள்ளது, ஆண்ட சாதி, மோண்ட சாதி என்று சொல்லாமல் இந்த 285 சாதிகளில் எந்தெந்த சாதிகளை இடஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென குறிப்பிட்டு சொல்லுங்கள் முதலில் அடுத்ததாக நீங்கள் சொல்லும் அந்த சாதிகள் இடஒதுக்கீடு பட்டியலிலிருந்து நீக்கப்படும் வரை இப்போதிருக்கும் இடஒதுக்கீட்டை தொடரலாமா? கூடாதா? இவவ இரண்டுக்கும் பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக எழுதாமல் ஈழப்பிரச்சினைக்கு சொன்னீர்கள் பாருங்கள் அது மாதிரி 'நச்' சென்று பதில் சொல்லுங்கள் தோழர்களே....

பிற்படுத்தப்பட்டோரும் தலித்களும் தண்டவாளம் போன்றவர்கள் இவர்களின் மீது தான் பார்ப்பன உயர்சாதி ரயில் ஓடிக்கொண்டிருக்கும், இந்த தண்டவாளங்கள் இணையும் போது பார்பன உயர்சாதி ரயில் கவிழ்ந்துவிடும், இந்த தண்டவாளங்கள் இணையாமல் இருக்க வேண்டியதை பார்ப்பன உயர்சாதியினர் செய்துகொண்டே உள்ளார்கள், உண்மையில் சமுதாய விடுதலைக்காக பாடுபடவேண்டியவர்கள் செய்ய வேண்டிய

முதல் விசயம், எல்லா தளங்களிலும் தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்பை உருவாக்குவதே, பெரும்பாண்மயான இவ்விரு மக்களும் அடித்துக்கொள்ள ரத்தம் குடிக்கும் சிறுபான்மை பார்ப்பன உயர்சாதியினர் அதற்கு விடமாட்டார்கள், அதற்காக பகையாளி குடியை உறவாடி கெடு என்று கூட வருகிறார்கள், மீண்டும் ஆதவன் தீட்சண்யாவின் வரிகளை மேற்கோள் காட்டுகிறேன் "உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது."

பார்ப்பன தலைமையின் கீழ் இயங்கும் ம க இ க பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கிடையே ஒற்றுமையை உருவாக்குகிறதா? அடித்துக்கொள்ள தூண்டுகிறதா?, இவர்கள் அடித்துக்கொள்வதால் ம க இ க வின் தலைமை பொறுப்பிலுள்ள பார்ப்பனர் சார்ந்திருக்கும் சாதி அமோகமாக வாழும்....

"நாமக்கட்டி வருது பாரு உஷாரு" ன்னு ம க இ க மேடைகளில் பாடும் நேரத்தில்

"காவிக்கொடி வருது பாரு உஷாரு
அது சிவப்பு வர்ணம் பூசி வருது உஷாரு
"
ன்னு பாட வேண்டிய நிலையும் உள்ளது என்பது வேதனைக்குறிய விடயம்...

http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_16.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)