இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
மீண்டும் மணி சமூகத்தில் தனிமையாக்கப்பட்டான் Print E-mail
அல்வாசிட்டி.விஜய்   

“கதிரேசா! ஒன் ஃபிரண்டை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாயேன்ல. மூதி, பஸ்லயிருந்து கீழே விழுந்து ஆஸ்பத்திரிலே கிடக்கான்” என்று காலை முதல் அம்மா தொனதொனத்து கொண்டிருந்தாள்.

“போறேம்மா”

வீட்டில் இருப்பதோ ஒரே ஒரு சைக்கிள். அதையும் அப்பா ஆபீஸ்க்கு எடுத்து கொண்டு போய்விடுவார். பஸ்ஸூக்கு காசு கேட்டால் அப்பா உதைப்பார். “நாங்கெல்லாம் அந்த காலத்துல பல மைல் நடப்போம்” என்று பிரசங்கிக்க ஆரம்பித்தால் அகிலமே “கொடுமை” என்று அடங்கிவிடும். “சின்ன வயசுல நடக்கனும்டா” என்பார். நடந்து போக வேண்டுமெனில் பாளையங்கோட்டை சமாதானபுரத்திலிருந்து ஹைகிரவுண்டுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். எங்கேயாவது நடக்க போக வேண்டும் என்றாலே எரிச்சல் தான் மிஞ்சுகிறது. அப்பா சைக்கிள் கிடைத்தால் பீரப்பாவையும் டபிள்ஸில் கூட்டி போய் விடலாம். பேச்சு துணைக்காவது ஆகும். நடந்து நெடுந்தூரம் போக வெண்டுமென்றால் பீரப்பா கட்டாயம் வரமாட்டான்.

கணேசன் மூதி வார நாளில பஸ்லேயிருந்து விழ வேண்டும். வாரக்கடைசியில் விழுந்திருந்தாலாவது அப்பா சைக்கிளை எடுத்துட்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம்.

சாயங்காலம் 4 மணி வாக்குல பஸ் ரூட்டில் போகாமல் தூயயோவான் பள்ளி மைதானத்தின் வழியாக மருத்துவக்கல்லூரி போய், அங்கிருந்து ஹைகிரவுண்டுக்கு போகலாம் என்று முடிவெடுத்தேன். ஆள் அரவமில்ல வழி. கண் முன்னே பரந்துகிடக்கும் மைதானம் எப்போதும் என்னை மெஸ்மெரிசம் பண்ணும். பள்ளி/கல்லூரி சம்பந்தப்பட்ட இடம் என்றாலே மரங்கள் அடர்ந்திருக்கும் என்ற நினைப்பு தூயயோவான் பள்ளி மைதானத்தை பார்த்ததும் பொய்த்து விடும். மைதானத்துக்குள் நுழைந்ததும் சிறிது தூரத்தில் மெயின் ரோட்டுக்கு ஒட்டியே ஒரு கல்லறை உண்டு. அப்புறம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொட்டல் வெளி. வெக்கை வடியும் மைதானத்தில் ஒன்றிரண்டு மரங்கள் கண்ணுக்கு தட்டுப்பட்டாலும் பெரும்பாலும் அவைகள் கிளை அதிகம் விரிக்காமல் காய்ந்து போன் தோற்றத்தில் இருக்கும். நடக்கும் ஒற்றையடி செம்மண் பாதையை தவிர இருமருங்கிலும் நெருஞ்சி முட்கள் தான் அதிகம்.

பிய்ந்து போய் மண்ணில் புதைந்திருக்கும் வெளிர் வெள்ளை ப்ளாஸ்டிக் பை, காய்ந்து போய் கிடக்கும் ஆட்டுப் புழுக்கை. அரைகுறையாக புதைக்கப்பட்ட கல்லறை பிணங்களில் சில சமயம் நாய் தோண்டி கொண்டுவந்து போட்டிருக்கும் மனித எலும்புகள், உடைக்கப்பட்டிருக்கும் விஸ்கி பாட்டில்கள், மண்ணில் காய்ந்து புதைந்து பிய்ந்து போய் காட்சியளிக்கும் ஆணுறைகள் எல்லாமே அந்தப் பள்ளி மைதானத்திலிருந்து மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள பொட்டல் காட்டின் சொத்துக்கள்.

இன்று பள்ளிக்கு விடுமுறை. மைதானத்தில் ஆள் அரவம் எதுவும் இருக்காது. தனியாக போக பயமாக இருந்தாலும் தூயயோவன் பள்ளியில் படித்த போது அந்த மைதானமே கதி என்று கிடந்ததால் காதலியை பார்க்கப்போகும் அதே மோகம் தான் என்னுள் ஊடுருவியிருந்தது. விரைவாக நடந்தால் 45 நிமிசத்தில் ஹைகிரவுண்டுக்கு போய் விடலாம்.

மைதானத்தின் குட்டை கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தேன். பள்ளி நாட்களில் மட்டும் இந்த பள்ளிக்கூடத்துக்கு எத்தனை கலகலப்பு. எத்தனை ஆர்ப்பாட்டம். எத்தனை குதூகலம். புழுதி பறக்க நாங்கள் ஓடி ஆடிய போது கிளம்பும் இந்த மண்ணுக்கு தான் எத்தனை மணம். நெஞ்சில் பசுமையாய் அந்த நினைவுகள். டேவிட் சொல்லி காண்பிக்கும் காமெடிக்கும் நாங்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தது… அதோ அந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சன்னலின் கீழ் தான். நீளமான அந்த கட்டிடத்தில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் இரண்டிரண்டு சன்னல்கள். பள்ளி முடிந்த உடன் கட்டிட்டத்தின் பின் இந்த கோடியில் ஆரம்பித்து ஒரு சன்னலில் ஏறி மறு சன்னலில் சுவரை பிடித்துக் கொண்டே எத்தனை முறை பல வகுப்பறைகளை கடந்திருக்கிறோம்.

நடந்து போய் கொண்டிருந்த எனக்கு திடீரென ஓர் ஆசை. பள்ளி முடித்து கல்லூரிக்குள் நுழைந்து ஏறக்குறைய 3 வரும் ஆகிவிட்டது. என் பழைய வகுப்பறையை பார்க்க வேண்டுமென்ற ஆசை. என் வகுப்பறையின் பின்னாடி சன்னல் திறந்துதானிருந்தது. மெதுவாக சன்னல் கம்பிகளை பிடித்து ஏறி வகுப்பறைக்குள் நோட்டமிட்டேன். அதோ அந்த டெஸ்கின் முன் தான் கேசரி வாத்தியார் நின்றுக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் என் மேல் சாக்பீஸ் எறிந்து முழிக்க வைப்பார். டெஸ்கில் ப்ளேடு வைத்து என் பெயரை கிறுக்கி அதில் இங்க் தடவி ப்ளு கலரில் மாற்றி வைப்போம். என் பெயர் எதாவது ஒரு டெஸ்கில் தென்படுகிறதா என்று பார்த்தேன். அது எங்கேயும் காணோம். பரீட்சை வந்துவிட்டாலே போது பெஞ்ச டெஸ்கை இடமாற்றி வைத்து விடுகிறார்கள்.

நடக்க ஆரம்பித்தேன். கல்லறை தோட்டம் தென்பட ஆரம்பித்தது. அதை தாண்டி தான் போக வேண்டும். கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் 5 வருடத்துக்கு முன் செத்துப்போன தேவசகாயம் இன்னும் அங்குதானிருக்கிறாரா என்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் மேலிட்டது. இதோ இந்த மண்மேட்டில் காலை வைத்து கல்லறை தோட்டத்தின் சுவரை தொற்றினால் அதனுள் இருக்கும் எல்லாம் என் பார்வைக்கு வந்து விடும். பள்ளி படிப்பை முடிக்க இரண்டு வருடம் முன்பு தான் தேவசகாயம் இங்கு வந்தார். ஒவ்வொரு கல்லறைக்கும் நட்டுவைத்திருக்கும் பளிங்கு கல்லை விட தேவசகாயத்துனுடைய கல் மிக பெரிதாக பைபிள் வசனத்துடன் இருந்தது. பளிங்கு கல் பெரியதாக இருந்ததால் இந்த தேவசகாயம் பெரிய ஆள் தான் என்று சகாக்களுடன் பேசிக்கொள்வோம். எட்டிப் பார்த்தேன். தேவசகாயம் அங்குதானிருந்தார். கல்லின் மேல் வைத்திருந்த பூங்கொத்து பாதி வாடிப்போயிருந்தது. தேவசகாயத்தை அவர் இறந்த நாளில் குடும்பத்தார் இங்கே வந்து நினைவு கூர்ந்திருக்கிறார்கள். ம்ம்… எத்தனை ஆண்டுகள் தான் இந்த நினைவு கூறலோ? சில ஆண்டுகளாக குடும்பத்தாரின் பேச்சில் அதிகம் அடிபடும் தேவசாகயம், ஒரு காலக்கட்டத்தில் முற்றிலும் மறக்கடிக்கபடுவார். பாவம். இது கூட காலத்தின் வல்லமையோ?

நடக்க ஆரம்பித்தேன். மைதானத்தை தாண்டி பொட்டல்வெளி. இந்த பொட்டல்வெளியை கடக்கும் போது சில நினைவுகளை அசைப்போடாமல் இருக்க முடியவில்லை. அன்று பள்ளி உணவு இடைவேளை. நான், பீரப்பா,கனி மூன்று பேரும் இந்த பொட்டலுக்கு வந்திருந்தோம். எதிர்த்தாற்போல் வந்தவன் சொன்னான் “அங்கே யாரோ சின்ன குழந்தையை பொதச்சிருக்காங்க”. எல்லாருக்கும் கொஞ்சம் கிலியாய் இருந்தது நான் “போயிருலாம்டா” என்றேன். பீராப்பா “அடச்சீ அவன் சும்மா சொல்றான், வா அங்கே போய் பார்ப்போம்” என்றேன்.

ஆம் சொல்லிவிட்டு போனவன் உண்மையை தான் சொல்லி விட்டு போயிருக்கிறான். புதைத்தவர்கள் நல்ல ஆழ குழி தோண்டி புதைக்கவில்லை. புதைக்க வந்தவர்களுக்கு யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயமோ என்னமோ? நாய் ஒன்று குழியில் வெளியில் தெரிந்த துணியை பிடித்து இழுக்க அந்த சிசுவின் மேல் தலை வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதை பார்த்தது தாமதம், பள்ளிக்கூடத்தை நோக்கி ஓட்டம் எடுத்தோம். அதற்க்கப்புறம் அந்த இடத்துக்கு வரத் துணிவு இல்லை. இன்று நான் அதே இடத்தில் தான் நின்றுக் கொண்டிருக்கிறேன். சிசுவை புதைத்த இடத்தில் தடயமோ, தடமோ எதுவுமில்லை. கால் செருப்பால் அந்த இடத்தை இரண்டு தடவை தோண்டிப்பார்த்தேன். வெறும் கட்டாந்தரை தான். பூமியில் ஜனிக்க அந்த சிசு என்ன பாவம் செய்ததோ? இன்று வரை அது பெண் சிசுவாகத்தான் இருக்குமென என உணர்வுகள் சொல்லிக் கொண்டிருக்கிறது. உலகில் அங்கீகரிக்கப்பட்டோர் கடைசியில் கல்லறை என்ற இடமாவது கிடைத்து நினைவுகூறப்பட்டே மறக்கப்படுகிறார்கள். உலகில் அங்கீகரிக்கப்படாதோர் தான் புதைய அங்கீகரிக்கப்படாதா இடத்தில் நினைக்கப்படாமல் மறக்கப்படுகிறார்கள். விந்தை தான்.

நடக்க ஆரம்பித்தேன். இன்னும் 10 நிமிட நடையில் மருத்துவகல்லூரியை அடைந்துவிடலாம். அன்று ஒரு நாள் முன்னாள் இந்திய பிரதமர்,கட்சியின் பெருந்தலை ஒருவரின் கூட்டம் இந்த மைதானத்தில் நடக்கவிருப்பதாக இருந்தது. முன்னாள் பிரதமரின் கூட்டம் என்பதாலோ என்னவோ விறு விறுவென ஒற்றை அறையுள்ள கட்டடம் எழுப்பப்பட்டு ஏசி பொருத்தப்பட்டது. எதனால் என்று தெரியவில்லை தலைவர் வருவது கேன்சல் ஆகிவிட்டது. அந்த கட்டடமும் கைவிடப்பட்டது. ஏறக்குறை அது பாழடைந்த கட்டிடம் என்ற அளவில் இப்போது ஆகிவிட்டது. அங்கு கொஞ்சம் இளைப்பாறலாம் என்று நினைத்து உள் சென்றேன். சிதிலமடைந்து போன சுவர்கள் மூத்திரவாடை, மலம் வேறு கழித்திருந்தார்கள். நிற்கவே அருவருப்பாய் இருந்தது. இன்னும் யாரோ இந்த பாழைடந்த கட்டிடத்தை பயன்படுத்துகிறார்கள். யாராக இருக்கும்? ஒரு வேளை மருத்துவக்கல்லூரி பக்கதில் இருப்பதால் மாணாக்கர்கள் இங்கு வருகிறார்களோ? இங்கே நிற்க வேண்டாம் கிளம்பி விடலாமென நினைத்திருந்த போது அந்த அறையின் மூலை சுவற்றில் கரியால் வரையப்பட்ட படம் ஒன்று கண்ணில் பட்டது.

அறைகுறையாக அதில் வரையப்பட்ட உருவத்திலிருந்து இது ஆணாக இருக்கலாமெனவும் இன்னொரு படத்தில் மார்பு வரையப்பட்டிருந்ததால் பெண்ணாக இருக்கலாமெனவும் தோன்றியது. இரண்டு படத்திலும் தொடையிடுக்கில் சுவரை துளைத்து ஓட்டையிடப்பட்டிருந்தது. இந்த வித்தியாசமான படம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. பக்கத்தில் போய் பார்த்தால் சுவர் ஓட்டையினுள் துணியோ இல்லை பேப்பரோ என்னமோ ஒன்று திணிக்கப்பட்டிருந்தது. அந்த ஓட்டையிலிருந்து சுவரில் ஏதோ வழிந்து ஓடிய தடம். காய்ந்துப் போயிருந்தது. ஏன் இந்த ஆராய்ச்சி என்று வேகமாக நடையைக் கட்ட ஆரம்பித்த சமயத்தில் நான் உள்ளிருப்பது தெரியாமல் உள் நுழைந்தது ஓர் உருவம். நல்ல பூசினாற்போல உருவம். நல்ல உயரம். முகத்தைப் பார்த்தால் கல்லூரி படிக்கும் மாணவன் போல் தானிருந்தான். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் ஸ்தம்பித்து நின்றான்.

எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. ஓட ஆரம்பித்தேன். நன்றாக இளைத்தது. வெகு தூரம் நடந்த வந்த களைப்பு வேறு. பாதுகாப்பான தூரம் வந்தவுடன் திரும்பி பார்த்தேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தான். வேகத்தை கூட்டினேன். நல்ல வேளை பாளை மருத்துவக்கல்லூரி கண்ணில் தெரிய ஆரம்பித்தது. திரும்பி பார்க்கிறேன். இன்னும் என்னை நோக்கி அவன்.

ஒரு வழியாக ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனை வாசலில் வந்து நின்றவுடன் தைரியம் வந்தது. இனி அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. திரும்பி பார்த்தேன். அவன் அங்கிருந்து பார்த்தால் நான் மருத்துவமனைக்குள் நுழைந்துவிட்டது அவனுக்கு நன்றாகவே தெரியும். என்ன செய்யமுடியும் அவனால்?
“அடிபட்டுகிடக்கும் கணேசனுக்கு குறைந்தது அரைமணி நேரமாவது ஆறுதல் சொல்ல வேண்டும்”

“அந்த அரை மணி நேரத்தில் அவன் போய் விட்டிருப்பானா?”

“திரும்பி போகும் போது ஓரளவு இருட்டிவிடும், பொட்டல் காட்டின் வழியாக போகக் கூடாது. ரோட்டின் வழியாகவே திரும்பி போக வேண்டும்”

கணேசனை பார்த்து விட்டு திரும்பும் போது 45 நிமிடம் ஆகியிருந்தது.

திரும்ப நடந்து போக வேண்டுமென்று நினைக்கும் போது அயர்ச்சியாக இருந்தது. கணேசன் அம்மாவிடம் 5 ரூபாயை கடன் வாங்கிக் கொண்டேன். பஸ்ஸில் போய் விடலாம். வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். அவனை காணவில்லை. பஸ் வருகிற வழியும் தெரியவில்லை. ஆஸ்பத்திரிக்கு எதிரில் இருக்கும் ஹோட்டலில் நுழைந்தேன். டீயாவது சாப்பிட்டுவிட்டு போகலாம். மாஸ்டரிடம் ஒரு டீயை சொல்லிவிட்டு கொஞ்சம் அசுவாசமாகினேன். அந்த ஹோட்டலில் மொய்த்த ஈயை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்கிருந்து முளைத்தானோ தெரியவில்லை. மீண்டும் அவன். இதயம் படபடக்க ஆரம்பித்தது. டீ மாஸ்டர் இருக்கிறார். அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. டீ மாஸ்டர் என்னை காப்பாற்றுவார். கொஞ்சம் தைரியம் வந்தது. வந்தவன் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

“ஹாய்! நான் மணி” என்றான்.

“ம்ம்ம்…”

கைப்பை ஒன்றை திறந்து பேப்பர் ஒன்றை எடுத்தான். “உங்க பேர் என்ன?” என்றான்

“கதிரேசன்”

“இவன் என்ன செய்ய போகிறான். எதற்கு பேப்பரை எடுக்கிறான். நல்லவனா இருப்பானோ?” என் மனது.

அவன் “எதுக்கு என்னை பார்த்ததும் ஓடுனீங்க”

“இல்லை பயமா இருந்தது”. “நீங்க எங்கே அங்கே?”

“மெடிடேசன் பண்ண வந்தேன்”

அப்பா… எனக்கு கொஞ்சம் தைரியம் பிறந்தது. “மெடிடேசனா… அந்த இடத்தை பார்த்த…”

“இல்ல இல்ல மெடிடேசன் பண்றதுக்கு இடமா முக்கியம். அமைதி தேவை” என்றவன் என் கையைப்பிடித்து அமுக்கி விட ஆரம்பித்தான். “இப்படி நீங்களே கைய அமுக்கி விட்டுகிட்டீங்கன்ன மனசுக்கு ரொம்ப இதமா இருக்கும்” என்றான்

டீ மாஸ்டர் இந்த நேரம் பார்த்த அடுப்புக்கரியை கிளறி சரிபார்த்தா எரியாத அடுப்பை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க வேண்டும்.

கை அமுக்கி விட்டவன் பிறகு என் தொடையில் கை வைத்து அமுக்கி விட ஆரம்பித்தான். அவன் கையை உதறினேன்.

“ஏன் இப்படி பண்றீங்க. அறிவில்லை” என்றேன்.

“நீங்க ஏன் அந்த கட்டிடத்துக்கு போனீங்க” என்றவனுக்கு

“நான் ஆஸ்பத்திரிக்கு அந்த வழியா வந்திகிட்டிருந்தேன்” என்று பதிலளித்தேன்

“என்னை பார்த்தா உங்களுக்கு ஆசையா இல்லையா?” என்ற அவன் சொன்னவுடன் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

“உன்னை பார்த்தா எனக்கு ஏன் ஆசை வரணும்?” ஏகவசனத்தில்

“உங்களைப் பார்த்த எனக்கு ஆசை வருதே?”

“அதுக்கு என்ன பண்ணலாம்”

“நீங்க என்னை அடிக்கடி வந்து பாருங்க. நான் உங்களை அடிக்கடி வந்து பார்க்கிறேன். எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்” என்றான்.

“உன்னை அடிக்கடி பார்க்க எனக்கு என்ன வேண்டியிருக்கிறது”

அவன் முகம் சுண்டிப்போனது. “என்னை ஏன் யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க?” அவன் கையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தான்.

பஸ் வந்து பஸ்ஸ்டாப்பில் நிற்க, போகிற போக்கில் மாஸ்டரிடம் டீ வேண்டாமென்று சொல்லிவிட்டு வேகமாக ஓடி பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸும் கிளம்பியது. பஸ்ஸின் பின் கண்ணாடி வழியாக அந்த ஹோட்டலை பார்த்தேன். நான் சென்ற பஸ்ஸை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மீண்டும் மணி சமூகத்தில் தனிமையாக்கப்பட்டான்.

 

http://halwacity.com/blogs/?p=268

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)