கலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும்,
“திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீஸோ
கல்லா மண்ணாவோ”
என தொடங்கி தொடரும் 10 வரிகள் பொதுவாய் வரும். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட மற்ற வரிகளின் மூலம் அவ்விரு கவிதைகளும் தத்தம் தனித்தன்மையினை அடையும்.
தெரு விளக்கு
————–
திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென நிறுத்திவிட்டு
தன்னிலும் சிறுசுகளை
பயமுறுத்தி…
தடைப்பட்ட மின்சாரம்
மீண்டும் பளீரென வரும் போது
தன்னிச்சையாய்க்
கைதட்டி பிள்ளைகள்
கும்மாளமாய் கூக்குரலிடும்
ஜாடைகளற்ற
சந்தோச மொழி வழியே
எந்த மாநிலத்தை
பிரிக்கப்போகிறார்.
வீதி விளக்குகள்
——————
அருகே வரும் வரை
பின்னாலிருந்தது
தாண்டும் வரை
காலடியில்
தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்
திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளீரென மீளும் போது
தன்னிச்சையாய்க் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோச வெளிச்சம்
காணமலாக்கும்
கவலையின் நிழல்களை
இந்த கவிதைகளை முதல் முறை வாசித்த போது என்னை ஈர்த்தது இந்த “பொதுவாய் சில வரிகள்” அம்சம் தான். படித்த போது கவிதை மட்டுமே தரக்கூடிய குறுகுறுப்பை தந்த கவிதைகள் இவை. ஆனால் வடிவத்தையும் தாண்டி தனித்தனியாகவும் மிகச்சிறந்த கவிதைகள்.
குறுந்தொகையில் மிளைப்பெருங் கந்தனார் எழுதிய இரு கவிதைகளில் இது போன்ற ஓர் வடிவத்தை காண முடிந்தது.
“காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே”
என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.
காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)
காமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. தழை தின்ற யானையின் மதத்தைப் போல, பார்ப்பவர் பார்த்தால் அது வெளிப்படும்.
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)
காமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புறுவது போல, நினைக்க நினைக்க இன்பம் தருவது நண்பா அது.
http://angumingum.wordpress.com/2007/07/21/poemsimet2/