
இப்படி கூட தமிழில் படங்கள் வருமா என்ன? வன்முறை இல்லை, கற்பழிப்பு இல்லை, கொச்சை வசனங்கள் இல்லை, டிஷூம்..டிஷூம் சண்டைக்காட்சிகள் இல்லை, நாலு வெளிநாட்டு காதல் காட்சி இல்லை (வெளிநாட்டில் எடுத்தது போல் தோற்றமளிக்கும் வண்ணம் உள் நாட்டில் எடுத்துள்ளார்கள் என்று தோன்றுகிறது). எப்போதும் வில்லனாக சித்தரிக்கப்படும் பிரகாஷ்ராஜ் எளிமையான, இயல்பான, காமெடி ரோல்! ஜோதிகா முன்னேறி வருகிறார். பல உணர்ச்சிகளைக் காட்டப் பழகி வருகிறார். கோபப்படும் போதுதான் செயற்கையாகப் படுகிறது, அல்லது சரியாக வரவில்லை. புதிய கதாநாயகன் ப்ரிதிவிராஜ் நன்றாகச் செய்திருக்கிறார். எதிர்காலம் தெரிகிறது. எல்லாக் கதாபாத்திரங்களுமே சோடை போகவில்லை. மிக அழகான இயக்கம் (ராதாமோகன்). இசை, இப்படத்தின் உயிர். வித்யாசாகர் என்றால் நல்ல இசை என்று பொருள். வைரமுத்துவின் வைர வரிகள். மொத்தத்தில் எல்லோரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். வாழ்க.
இப்படித்தின் கதை 70 களில் வந்த ஒரு இந்திப்படத்தின் கதை. ஊனமுற்ற தம்பதியர் இருவருக்குப் பிறக்கும் குழந்தையும் ஊனமோ என்ற பயம் வரும் அப்படத்தில். அற்புதமான படம் (பெயர் மறந்து விட்டது).
1. இப்படத்தின் கதாநாயகி இவ்வளவு அழகாக இருக்காவிடில் ஊனத்தின் மீதும் உண்மைக் காதல் வருமா?
2. சப்தமே இல்லாத உலகு என்று ஒன்று உண்டா? அவளுக்கு பேச்சுத்தான் இல்லை. உள்ளே ஒரு நாதம் இருந்து கொண்டே இருக்கும். அது யோகம் கற்றவர்க்குப் புரியும்.
3. மொழி என்பதை மிக விரிவாக சிந்திக்க வைக்கிறது படம். உண்மையில் மொழி என்பது ஒரு சௌகர்யம். மின்சாரம் போல. அது இல்லாமலும் வாழ்வு ஓடும். அவரவர் மொழி, அவரவர்க்கு!
4. திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில், தன் நிலையை ஊமையின் கனவிற்கு ஒப்பிடுவார். "ஊமை கண்ட கனவு, அதுவும் பழுதாய் கழிந்தன, ஒழிந்தன நாட்கள்" என்பார். நெற்றியடி. எவ்வளவு கஷ்டம், பாருங்கள்.
மொத்தத்தில் அன்பு செய்வது என்பது எவ்வளவு எளிதோ, அவ்வளவு கஷ்டமும் கூட. ப்ரிதிவிராஜ் நிலையில் என்னை வைத்துப் பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. ஆனால் காதல் என்பதில் மலையும் மானுடர்க்கு ஒரு கடுகாமே!
* * *
யோசித்துப் பார்த்ததில் "மொழி" தமிழ் சினிமா வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்று தோன்றுகிறது. இதுவரை தமிழ் சினிமா தானாக வரித்துக் கொண்ட சினிமா லட்சணங்கள் என்பவைகளை மறுதலித்து 'மொழி' படம் புதிய லட்சணம் சொல்கிறது. இது மரபைப் புரிந்து புதுக்கவிதை எழுதுவது போல் அமைந்திருப்பது அதன் சிறப்பு.
தமிழ் சினிமா வளர்ச்சி பேசாப்படம், பேசும்படம், பாடல்கள் நிரம்பி வழியும் இசை நாடகம் (மூசிகல்), புராண, இதிகாச மறுஆக்கம், பினனதை ஒட்டி கதாநாயகனை ஆகச்சிறந்த புருஷனாக (இராமனைப் போல்) காட்டும் போக்கு (எம்.ஜி.ஆர்) என்று வளர்ந்து, பின்சினிமாத்துவம் (பின் நவீனத்துவம் போல்) வருகிறது. இக்காலக்கட்டத்தில் வில்லன் சிறப்பிக்கப்படுகிறான் (ரஜனி, ரகுவரன், சத்யராஜ்). வில்லத்துவம் என்பது கதாநாயகத்துவத்திற்கு ஈடாகிறது. வன்முறையின் வெளிப்பாடாக கதாநாயகன் காட்டப்படுகிறான் (பாட்சா, நாயகன், ஆளவந்தான், ஆறு, பிதாமகன், தாமிரபரணி). கதாநாயகனே செய்வதால் வன்முறை நியாயப்படுத்தப்படுகிறது.
இந்த வளர்ச்சியின் அங்கமாக நகைச்சுவை என்பதையும் நோக்கலாம். முதலில் அசடு வழியும் ஸ்லோ டைப் நகைச்சுவை (அப்பன் மகனே! சிங்கம்டா!), பின் என்.எஸ்.கேயின் சமூக விழிப்புத்தரும் நகைச்சுவை, நடனம், இசை கலந்து தரும் சந்திரபாபுவின் நகைச்சுவை, டனால் தங்கவேலுவின் குடும்பம் சார்ந்த நகைச்சுவை, நாகேஷ் கொண்டு வரும் சுறு,சுறுப்பான நகைச்சுவை என்று வளர்ந்து கவுண்டமணி, செந்தில் என்ற இருவரிடம் கொச்சைப்பட்டு போய் ஸ்தம்பித்து விடுகிறது! கிராமப்புர நகைச்சுவையாக இயல்பாக வரும் கவுண்டமணியை கல்லூரிப் பேராசிரியர் வரை (காதலர் தினம்) கொண்டு போய், வேறு வழி தெரியாமல் ஸ்தம்பித்து நின்றிருக்கிறது, தமிழக சினிமா. நல்ல வேளையாக கமல் இயல்பான நகைச்சுவையை மீண்டும் கொண்டு வருகிறார். அவர் இதை சிவாஜியின் வழியில் செய்கிறார். சிவாஜிக்கு காமெடி நன்றாக வரும். அவரைத் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கமல் அக்குறையை நிறைவு செய்கிறார். என்.எஸ்.கே வழியில் விவேக் மீண்டும் கொஞ்சம் டீசண்டான காமெடியைக் கொண்டு வருகிறார்.
இப்படியான வளர்ச்சியில் "மொழி" என்பது ஒரு புது ஊடக வளர்ச்சியின் தொடக்கமாக எனக்குப் படுகிறது. மொழி படத்தில் கதாநாயகத்துவம் இல்லை. ப்ரிதிவிராஜ், பிரகாஷ்ராஜ் இருவருமே உபபாத்திரங்கள். எல்லாப் பாத்திரங்களுக்கும் சமமான எடைப் பங்கீடு கொடுக்கப்படுகிறது. மேலும் காமெடி என்பதற்கு தனி டிராக் (பாட்டை) கொடுக்கப்படாமல், இயல்பான மெல்லிய நகைச்சுவை படம் முடியும் வரை ஓடுகிறது. கொஞ்சம் கூட உரத்த வசனங்களோ, கொச்சைப் படுத்ததலோ இல்லை. கடைசிக் காட்சியில் கூட கதாநாயகனும், நாயகியும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால், நண்பன் நண்பனைத் தழுவுகிறான். தோழி, தோழியிடம் போகிறாள். இது யதார்த்தமான தமிழ்ச் சூழலைக் காட்டுகிறது. இசை என்பது இன்னும் தமிழ்ச் சினிமாவின் பிரிக்கமுடியாத அங்கமாக உள்ளது. இப்படம், பாடல் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது ஓட வேண்டுமெனில் தமிழர்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் போக வேண்டும். அது நடக்கும். இன்னும் 10 வருடமாகலாம். எனவேதான் "மொழி" ஒரு புதிய வளர்ச்சியின் தொடக்கம் என்கிறேன். "மொழி" படத்தில் வணிக ரீதியிலான அம்சங்கள் முதலீட்டாரின் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்று புகுத்தப்பட்டுள்ளன. அதில் கூட ராதாமோகன் வென்றிருக்கிறார். இசைக்கு வித்யாசாகர், பாடல்களுக்கு வைரமுத்து என்பது சரியான தேர்வு. ஆக, மொழி எனும் படம் ஒரு "நியூட்ரல் சினிமாவை" முன் வைக்கிறது. வில்லன் இல்லாத, கதாநாயகன் இல்லாத, செக்ஸ் இல்லாத, கொச்சை நகைச்சுவை இல்லாத ஒரு புதிய ஊடக உருவம்.
மொழி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்பது ஆரோக்கியமான சமிக்ஞை. தமிழ் சினிமாவிற்கு எதிர் காலம் இருக்கிறது. தமிழ் ரசனை என்பதை மெருக படுத்த முடியும்.
http://emadal.blogspot.com/2007/07/2.html
http://emadal.blogspot.com/2007/07/2.html
|