|
மனிதாபிமானமுள்ளவர்களாக இருக்க முயற்சிப்பவர்களுக்கு…. |
|
|
|
தமிழச்சி
|
மற்றவர்கள் உன்னைத் தூற்றும் போது,
நீ! தலை நிமிர்ந்து நிற்க முடியுமானால்;
மற்றவர்கள் உன் மேல் அய்யப்படும் போது,
நீ! உன்மேல் தன்னம்பிக்கை கொள்ள முடியுமானால்; ஆனால் அதே சமயத்தில் அவர்கள் அய்யப்படுவதிலும் உண்மையிருக்குமோ என ஆராய நீ இடம் கொடுக்க முடியுமானால்;
நீ! பொறுமையாகச் செய்து முடிவு காணக் காத்திருக்க வேண்டுமானால் - அதனால் சோர்வடையாமல் இருக்க முடியுமானால்;
உன்னை மற்றவர்கள் பொய்யனாக்க இடம் கொடுக்காமலிருக்க முடியுமானால்;
நீயும் உண்மைக்குப் புறம்பானவற்றில் ஈடுபடாமல் இருக்க முடியுமானால்;
நீ! மற்றவர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், மற்றவர்களால் பகைத்துத் கொள்ளப்படாமலும் இருக்க முடியுமானால்;
நீ! அளவுக்கு அதிகமாக நல்லவனாக இராமலும் அளவுக்கு அதிகம் பேசாமலும் இருக்க முடியுமானால்;
நீ! நற்கனவுகளைக் காண முடியுமானால் ஆனால் கனவுகள் உன்னை ஆட்சி செய்ய இடமளிக்காமலும் இருக்க முடியுமானால்;
நீ! சிந்தனைத்திறன் பெற முடியுமானால் ஆனால் சிந்திப்பதை மட்டுமே உன் லட்சியமாகக் கொள்ளாமல் இருக்க முடியுமானால்;
நீ! உன் வெற்றித் தோல்விகளைச் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனத்திடம் பெற முடியுமானால்;
நீ! உன் வெற்றித் தோல்விகளைச் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனத்திடம் பெற முடியுமானால்;
நீ! சொன்ன உண்மைகளைப் பிறர் திரித்துக் கூறி மற்றவர்களை உனக்கு எதிரியாகச் செய்யும் போது அதனைப் பொறுத்துக் கொள்ள முடியுமானால்;
நீ! உன் வாழ்க்கையில் கண்ட சிறு தொல்லைகளையும் தோல்விகளையும் உனது சக்தியைக் கொண்டு மாற்ற முடியுமானால்;
நீ! பெற்ற வெற்றிகள் அனைத்தையும் ஓரே சமயத்தில் இழக்க நேரிடும் போதும் மீண்டும் திட சித்தத்தோடு முயற்சியைத் தொடங்கவும் உன் தோல்வியைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட முணுமுணுக்காமலும் இருக்க முடியுமானால்;
நீ! உனது வெற்றிகள் போன பின்னும் உனது உள்ளத்தையும் நாடி நரம்புகளையும் உனது முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தி உன் திட சித்தத்தின் துணையோடு மேற்செல்ல முடியுமானால்;
நீ! சாதாரண மக்களுடன் உனது நற்பண்பை இழக்காமல் அதேசமயம் உயர்நிலையில் இருப்பவர்களோடு பழகும் போது பொது மக்களின் தொடர்பை விடாமல் இருக்க முடியுமானால்;
நீ! உன் விரோதிகளாயினும், நண்பர்களாயினும் யாரும் உன்னைத் துன்புறுத்தாவண்ணம் உன்னால் நடக்க முடியுமானால்;
உன்னிடம் எல்லோரும் ஓரே நிலையில் பழகுமாறு உன்னால் நடந்து கொள்ள முடியுமானால்;
நீ! உன் வாழ்க்கையில் ஒரு நிமிடத்தைப் பயனின்றிக் கழித்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்து ஒரு துளி நேரத்தையும் பயனுள்ள வகையில் செலவிடும்வண்ணம் உன்னால் முடியுமானால்;
நீ! ஒரு மனிதனாகச் சிறந்தோங்குவாய்!
(ருட்யார்ட் கிப்ளிங் சொல்கிறார். இவர் 1865-1936 காலங்களில் இருந்தவர்)
http://thamilachi.blogspot.com/2007/08/blog-post_9395.html
|