இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பார்த்தேன் வியந்தேன் : பத்மநாபபுரம் அரண்மனை Print E-mail
சேவியர்   

2.jpg
பத்மநாபபுரம் அரண்மனை
வியப்பூட்டும் வரலாற்றுச் சின்னம்

இந்த முறை விடுப்பு எடுத்துக் கொண்டு கிராமத்துக்குச் சென்றிருந்த போது எங்கள் ஊருக்கு அருகிலே உள்ள பத்மநாமபுரம் அரண்மனைக்குச் செல்லலாம் என்று கிளம்பினேன். நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அந்த அரண்மனை.

பலமுறை பார்த்த இடம் என்றாலும் இன்னும் கம்பீரம் குறையாமல் கேரள அழகு மிளிர வசீகரிக்கிறது பத்மநாபபுரம் அரண்மனை.

கிபி 1592 முதல் 1609 வரை திருவிதாங்கோட்டை ஆட்சி செய்த இரவி வர்மா குலசேகர பெருமாள் இந்த அரண்மனையை கிபி 1601ல் கட்டியதாக வரலாறு கூறுகிறது.

சுமார் எண்பத்து ஆறு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாக பரந்து விரிந்து இருந்த இந்த பத்மநாபபுரம் கோட்டைப் பரப்பு தற்போது ஆறரை ஏக்கர் எனுமளவில் சுருங்கியிருக்கிறது. தமிழகத்தில் இருந்தாலும் இந்த ஆறரை ஏக்கர் நிலப்பரப்பையும், அரண்மனையையும் கேரள அரசு தான் பராமரித்து வருகிறது.

உள்ளே நுழைந்ததும் வரவேற்கும் நிசப்தமான அறையைக் குறித்து ‘இங்கே தான் வருஷம் பதினாறு படத்தை எடுத்தார்கள்’ என்று வழிகாட்டி சொல்லும்போது எரிச்சல் மேலிடுகிறது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் வரலாற்றை விளக்க ஒரு திரைப்படம் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

தொன்னூறு வகையான பூக்களை கூரையின் மரவேலைப்பாடுகளாய் சித்தரித்திருக்கும் இடம், ஒரே மரத்தில் கடைந்தெடுத்த பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் உள்ள கூரை, கூரை முழுவதும் செதுக்கப்பட்டிருக்கும் தாமரைப் பூக்கள் என மரவேலைப்பாடுகள் அரண்மனையை ஆக்கிரமித்திருக்கின்றன.

மன்னனின் ஆலோசனைக் கூடம் திரைப்படங்களில் மிகைப்படுத்தப்படும் விதத்தில் இல்லாமல் சிறு அறை போல அமைந்திருந்து வியப்பூட்டுகிறது. அதே போல பிரஞ்ச் சன்னல் போன்ற அமைப்புடன் அமைந்துள்ள இடம் அம்பாரி முகப்பு என்றழைக்கப்படுகிறது. இது மன்னன் தேரோட்டம் பார்க்கவும், மக்களுக்கு தரிசனம் கொடுக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

அரசியின் அந்தப்புரம், கட்டில், அறைகள் என இன்னொரு புறம் அமைந்துள்ளது. அங்கே கிருஷ்ணரின் லீலைகள் படம் பிடித்து வைக்கப்பட்டிருப்பது மெலிதாக புன்னகைக்க வைக்கிறது.

பெண்கள் எந்த உரிமைகளும் இல்லாமல் இருந்த நிலை இங்கும் புலனாகிறது. அவர்கள் அரண்மனை நாட்டிய அறையில் நிகழும் கலை நிகழ்ச்சிகளைக் கூட மேல் தளத்திலிருந்து சிறு துளை வழியாகவே பார்த்து ரசிக்க முடியும்.

இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கிய பெரிய இரண்டு அறைகள் அன்றைய அரசர்களின் அன்னதான பணிகளை விளக்கும் விதத்தில் இருக்கிறது.

மலையாளமும் தமிழும் கலந்த அரண்மனைப் பணியாளர்கள் அந்த அரண்மனையில் பதினான்கு மன்னர்கள் வாழ்ந்ததையும், கடைசியாக ஆண்ட மார்த்தாண்ட வர்மாவின் கதைகளையும் சுவாரஸ்யமாய் விளக்குகின்றனர்.

பெரிய அறை ஒன்றில் வரையப்பட்டுள்ள பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியையும், அவரைக் கொல்ல எட்டுவீட்டுப் பிள்ளைமார் செய்யும் சதிச் செயல்களையும் படம் பிடிக்கிறது.

ஒருமுறை கோயிலில் தனியே கடவுளைத் தரிசிக்க வரும் மன்னனைக் கண்டு கொண்டு அவரைக் கொல்ல வாசலில் வாள்களோடு காத்திருக்கின்றனர் எதிரிகள். உள்ளே மன்னனுக்கு விஷயம் புரிந்து விடுகிறது. ஆனால் மன்னனும் பூசாரியும் தவிர யாரும் உள்ளே இல்லை.

மன்னன் வெளியே வந்தால் தலை உருள்வது நிச்சயம். பூசாரி மன்னனைப் பணிகிறான். மன்னர் பூசாரியின் ஆடையை அணிந்து வெளியே வந்து தப்பிச் செல்கிறார். பூசாரி மன்னனின் ஆடையுடன் வெளியே வந்து வாளுக்கு இரையாகிறார்.

இப்படி பல கதைகள் ஓவியங்களில் உயிரோட்டமாய் உலவுகின்றன. பெரும்பாலும் மன்னனின் உதவிகளும், பரிசுகளும் பிராமணர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

127 அறைகள் கொண்ட அரண்மனையில் பல அறைகள் இன்று பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. கீறல் விழுந்த சுவர்களும், வசீகரம் இழந்த பாதையுமாக பல இடங்கள் பராமரிப்பை கெஞ்சும் நிலையில் இருப்பது வேதனை.

எனினும் அரண்மனையில் புராதனம் கெடாமல் பார்த்துக் கொள்ளும் விதம் உண்மையிலேயே பாராட்டுதற்குரியதே. குதிரைக்காரன் விளக்கு, சீனாவிலிருந்து வந்திருந்த ஊறுகாய் பானைகள், வித்தியாசமான பூட்டுகள், ஆட்டுரல், என எல்லாமே ரசிப்பதற்குரியனவாக இருக்கின்றன அரண்மனையில்.

முந்நூறு வருடங்களுக்கு முந்தைய கடிகாரம் ஒன்று இப்போதும் உயிர்த்துடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. பூட்டப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை இக்கட்டான சூழல் வந்தால் மன்னனின் குடும்பம் தப்பிச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்திருக்கிறது.

குறுகிய படிக்கட்டுகளும், நல்ல சில்லென பாதங்களை குளிர்விக்கும் தரையும் என மாறி மாறி வரும் அறைகளில்  சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கக் கூடிய நிகழ்வுகளை கற்பனைகளில் கொண்டு வந்து பார்த்தால் சிலிர்க்கிறது.

முப்பத்து எட்டு கிலோ எடையுள்ள உருண்டையான கல் ஒன்று முற்றத்தில் இருக்கிறது. அரச படையில் சேர விரும்புபவர்கள் அந்த கல்லைத் தூக்க வேண்டும். ஒருமுறை இருமுறை அல்ல, நூறு முறை தொடர்ந்து தூக்க வேண்டுமாம் !

ஒரு அருங்காட்சியகமும் அமைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் அது. வரலாறுகளின் மடியில் காலம் எப்படி புரண்டு விளையாடியிருக்கிறது என்பதை அது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

செயற்கை விளக்குகள் ஏதும் பொருத்தப்படாததால் அரண்மனை அனுமதி மாலை நான்கரை மணியுடன் முடிவடைந்து விடுகிறது. அற்புதமான வேலைப்பாடுகளுடன் வரலாற்றின் விரல் பிடித்து நடக்கும் சுக அனுபவம் இந்த அரண்மனை தரிசிப்பில் கிடைக்கிறது. அந்த அனுபவத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக போய் வரலாம்.

 

http://xavi.wordpress.com/2007/07/29/padmanathapuram/ 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)