இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
இராமதாசின் பரட்டை அரசியல்! Print E-mail
நாக.இளங்கோவன்   

16 வயதினிலே படத்தில் பரட்டையாக இரசினி நடிப்பார். அவ்வப்போது ஏதாவது கேடு செய்து விட்டு "இதேப்டி இர்க்கு?" என்பார். அதேபாலஇரசினியை தனக்குப் பிடிக்காவிட்டாலும், இராமதாசு அதே வேடத்தைஅரசியலில் போட்டுக் கொண்டிருக்கிறார். 16 வயதினிலே சப்பாணி பரட்டைக்கு எண்ணெய் தேய்த்து விடுவதைப் போல, தி.மு.க எவ்வளவுதேய்த்து விட்டாலும் பா.ம.க பரட்டை போலவே நடந்து கொள்கிறது.

அரசியல் அரங்கில் அரசியல் கட்சித்தலைவர்களின் செயல்பாடுகள்கோமாளித்தனமாகவும் நகையாகவும் இருந்து வருவது நமக்குப்புதிதல்லவாயினும் அவ்வப்போது நமது புருவத்தை உயர்த்த வைத்துவிடுகிறார்கள்.

கடந்த சட்ட மன்றத்தேர்தல் நடந்தபோது புரட்சிப் புயல் வைகோ "டாட்டாவை மிரட்டலாமா?"; தி.மு.க/தயாநிதி டாட்டாவை மிரட்டியது ஏன்?டாட்டாவை மிரட்டுமளவுக்கு நீங்கள் என்ன பெரிய இவுங்களா? என்ற அளவிற்குக் கேள்விக்கனைகளால் துளைத்தெடுத்தார்.

இரத்தன் டாட்டா வைகோவோட மச்சினன்போல, டாட்டாவுக்கு ஆதரவாகக் கத்தித் தீர்த்தார்!

அதே வைகோவும் அவரின் தங்கச்சியும் இப்போ டாட்டாவை எப்படி தமிழ்நாட்டில் அனுமதிக்கலாம்? அய்யோ டாட்டா கொள்ளையடிக்கப் போகிறான்! டாட்டாவை அனுமதித்தால் இங்கேயும் ஒரு நந்திகிராம் உருவாகும் என்று நரம்பு நாட்டியமாடப் பேசுகிறார்/(கள்).

சரி - இதுவாவது ஒன்னே கால் ஆண்டுக்கு முன்னர் பேசியது; பேசினவர்களுக்கும் சரிமக்களுக்கும் சரி மறந்து போயிருக்கும். ஒரு இரண்டு மாதத்திற்கு முன்னர்,தினகரன் இதழ் போட்டு வந்த சுண்டைக்காய் கருத்துக் கணிப்புகளுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கோவித்துக் கொண்டன.

போயசு தோட்டம் அழுதது! தைலாபுரம் தொடை தட்டி ஆர்ப்பரித்தது!
ஒப்புக்கு சப்பாணிகள் கூட ஏதோஅது ஒரு பெரிய பாவம் போல அதைப் பற்றி கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். இராமதாசு அவருக்கே உடைய வயித்தெரிச்சல்-அரசியல் பாணியில் "கருணாநிதியின் இழிவான அரசியல்" என்று கூட அறிக்கை விட்டார். ( அப்புறம் எப்படி முகத்தைத் துடைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை).
உச்சமாக தி.மு.க கொந்தளித்தது வரலாறு ஆனது!

அதை விட நகைச்சுவை என்னவென்றால் மிடைய உலகில் இருக்கும் போட்டிகளில்,"தினகரன்தானே" அழியட்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஏனைய மிடையங்கள் அதனை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. இந்து இராமின் நாய்க்கு இருமல் வந்திருந்தால் கூட இந்திய நாடே எழுந்து நின்று கண்டித்திருக்கும்(அது வேறு கதை).

அந்த சுண்டைக்காய் கருத்துக் கணிப்புகளே நமது அரசியல் ஞானிகளின் விண்ணளவு அறிவு நிலையைக் காட்டப் போதுமானதாக இருந்தது.
சரி - இப்ப என்ன செய்கிறார்கள்!?

இன்னும் முளைக்காத சரத்குமாரில் இருந்து 100+ ஆண்டுக் கட்சிகளும்டாட்டா நிறுவனம் வரலாமா வேண்டாமா என்பது பற்றி கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள்!

மிடையங்கள் கருத்துக் கணிப்புகள் நடத்தினால் அது முட்டாள் தனமாகவும், இந்தக் கட்சிகளே கருத்துக் கணிப்புகள் நடத்தினால் அது மட்டும் ஆர்வர்டு பல்கலையை மிஞ்சிய அறிவார்ந்த செயலாகவும் இவர்களுக்குப் படுவதை எண்ணிப் பார்க்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒரே வாரத்தில் எல்லாக் கட்சிகளும் கருத்து அறியும் கண்ணாயிரங்களாக மாறி தென்பாண்டிச் சீமையை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் போய் அங்கே என்ன கிழிக்கப் போகிறார்கள்?
கருத்தறிவதில் என்ன அணுகுமுறையை இவர்கள் காட்டப் போகிறார்கள்?
கருத்தறிவதிலும், கருத்து கணிப்பதிலும் என்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்பதனை இவர்கள் அறிவார்களா? என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை இவர்கள் அறிவார்களா?

ஏதோ ஒரு அணுகுமுறை இருப்பினும், ஒரு மாதத்திற்கு முன்னர் கருத்துக் கணிப்புகள் பற்றி வாய் கிழிய வேதாந்தம் பேசி விட்டு இப்ப அட்டையையும் எழுது குச்சியையும் தூக்கிக் கொண்டு திரிய கொஞ்சமாவது நாணம் வேண்டாம்?

தென் தமிழ்நாட்டில் தொழில்கள் பெருகாமல், வாய்ப்புக் குறைவுகளினாலும், வறட்சியாலும் இன்ன பிறவாலும் எவ்வளவோ தீங்குகள் நிறைந்து வருகின்றன.

தமிழகமெங்கும் சாதிச் சழக்கு நீக்கமற நிறைந்திருந்தாலும், தென் தமிழ்நாட்டில் இது அதிகம்.

வேலைவாய்ப்பு அங்கு மிகக் குறைவு. விளைவாக அடிதடி வெட்டுக் குத்து வழிக்கேபல பேர் செல்கின்றனர்.

இராமநாதபுர மாவட்டத்தில் தீரா வறட்சி! இயற்கையும் அங்கு மக்களுக்கு அணுக்கமாகஇல்லை.

அங்கே வேலை கிட்டாமல் வாய்ப்பு இல்லாமல் எத்தனை எத்தனை ஆயிரம் தொழிலாளிகள் நாட்டை விட்டு அயல்நாடுகளுக்குப் போய் தங்கள் வாழ்க்கையையே சூனியமாக்கிக் கொள்கிறார்கள் தெரியுமா?

அயல்நாடு போவதென்பது பறனை ஏறும் வரை இனிப்பாகவும், பறனையை விட்டு அயலநாட்டில் இறங்கியதும் சொல்லவொன்னா துயரங்களை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவும் எத்தனை இலக்கம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு ஆகியிருக்கின்றது என்பது கலிங்கப்பட்டி, போயசு தோட்டம், தைலாபுரம், கோபாலபுரம், தஞ்சாவூர் பொருளாதார மண்டலங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதெல்லாம் விட வறுமையின் கொடுமைகளாலும், சாதிக் கொடுமைகளாலும் மதம் மாறுவோர் எத்தனை பேர் என்று கணக்கெடுக்கவும் ஆள் இல்லை தமிழகத்திலும் இந்தியாவிலும். மதச்சண்டை போட மட்டும் ஆள்கள் உண்டு எல்லா மதத்திலும்.

டாட்டா கனிம வள நிறுவனம் அமைக்கிறார்கள் என்றால், அதனால், அங்கே வசிக்கின்ற மக்களுக்கு சரியான மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் கடமை.

முறையான மாற்று வழிகள் செய்யாமல் மக்களை அல்லாட விடக் கூடாது. மண்ணை விட்டுப் பிரிவது என்பது பலருக்கும் வலிக்கின்ற ஒன்று.

அதே நேரத்தில் பாமர மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதில்அரசியல் குளிர் காய்வார்கள் ஆயின் அவர்களை மனிதர்களாக எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

ஒரு பெரிய திட்டம் வருகிறதென்றால் அதனால் மக்களுக்கும் சரவல் இல்லாமல் நீண்ட காலப் பெருக்கத்திற்கும் ஏதுவாக இருக்குமாறு செயல்படும் அரசியல்தான் தமிழகத்திற்குத் தேவையான ஒன்று. கேரள, கர்நாடக மாநிலங்களிடம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இன்னும் மானம் சூடு சொரனை ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.

டாட்டா கொள்ளையடிப்பான் என்று குதிக்கும் குரங்குகளுக்கு, வைகுண்டமும்,வாண்டையார்களும், அண்ணாச்சி பெருமக்களும், தேவதேவர்களும், பாளையக்காரர்களும் அடிக்கும் கொள்ளைகள் கண்ணுக்கு இதமாக இருக்கின்றன போலும்! இந்த இலட்சணத்தில் தொண்டை நாட்டுத் திலகங்களும் அந்த வறண்ட பூமியை நக்கிச் சுவைக்கப் புறப்பட்டுவிட்டன.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பாடிக் கொண்டே இருக்கலாம் பாருங்கள்!

இதில் எல்லாக் கட்சிகளும் அடிக்கும் கூத்துகள் ஒரு புறம் என்றால் இராமதாசு அடிக்கும் கரண வித்தைகள் சற்று மிகையானதாகவேப் படுகிறது.

தமிழ்க் குடிதாங்கி என்ற ஒன்னரை கிலோமீட்டர் நீளத்திற்கு பட்டம் சுமக்கும் இவரின்செயல்பாடு எத்தகைத்தது?

துணை நகரத்தில் கை வைத்தார். அதில் எனக்கு வருத்தமும் இல்லை - மகிழ்ச்சியும் இல்லை.

விமான நிலைய விரிவாக்கத்தில் கைவைத்தார்; அரசும் முட்டாள் தனமாக அதைக் கை விட்டது. இருக்கின்ற தளத்தை விரிவாக்கம் செய்வது எளிது. புதிதாக ஏற்படுத்துவது என்பது பல அல்லல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தும். புதிதாக ஆகும் செலவுகளை, விரிவாக்கம் செய்யுமிடத்தில் இருக்கும் மக்களின் மறுவாழ்வுக்குக் கைகுளிரச் செலவு செய்து திட்டத்தையும் தொடர்ந்திருக்கலாம்; ஆனால் அதனைத் தடுத்து நிறுத்தி, "இதேப்டி இர்க்கு?" என்றார் இராமதாசு!

கூட்டணிக் கட்சி என்பதற்காக, தகுதிக்கு மீறிய தொகுதிகளை விட்டுக் கொடுத்து, கூப்பிட்ட குரலுக்கு உள்ளேன் ஐயா போடுவதெல்லாம் நடக்கக் கூடியதுதான். ஆனால் இராமதாசின் வயித்தெரிச்சல் தில்லியில் அன்புமணியை யாரும் கண்டுகொள்ள மாட்டேன்கிறார்களே, அவரைக் கொஞ்சம் கருணாநிதியும் தி,மு.கவும் தோளில் தூக்கிக் கொண்டு போனால் என்ன என்பதுதான்.

அதோடு மதுரைக்குத் தெற்கே போகவும் கடினமாக இருக்கிறதே என்ற உதறலும்அவரை அடிக்கடி கத்த வைக்கிறது.

கூட்டணி என்ற சாக்கில் விழுக்காடுகளும் பெயர மாட்டேன்கிறதே முறையாகஎன்ற ஆதங்கம் இருந்தால் அது உண்மையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று!?

அதெல்லாம் விட பொன்முடியை நாடு கடத்தமாட்டேன்கிறார்களே என்ற ஏக்கத்திலே, தூக்கத்தில் கூட இராமதாசு உளறித் தவிக்கிறார் என்றே அவரின் பல்வேறு குமுக அக்கறைகள் வெளிப்படுத்து கின்றதாக அமைகிறது.

உண்மையில் இந்தத் தன்னலங்கள் இல்லாத தூய குரல் அவருடையது என்று யாராவது நிறுவினால் என் பதிவில் இராமதாசின் கட்சிக் கொடியை வரைந்து கொள்கிறேன்.

பா.ம.கவின் அரசியல் ஒரு சூழ்ச்சி கலந்த கோழை அரசியலாகவேத் தெரிகிறது.

காவிரிப் பிரச்சினை, பெரியாறு பிரச்சினை என்று இவர் தி.மு.கவிடம் கட்சி கட்டுவதெல்லாம் சரிதான். ஆனால் இவர் என்ன செய்தார்?

இவர் ஏன் காவிரிக்காகவும் பெரியாறிற்காகவும் தில்லியில் போய் நின்று தனதுமந்திரிகளை வைத்துக் கொண்டு போராடக் கூடாது?

காவிரிப் பிரச்சினைக்காக ஏன் இவரின் மத்திய மந்திரிகள் பதவி விலகக் கூடாது?

ஏன் இவர் நடுவண் அரசில் இருந்து விலகுவேன் என்று மிரட்டக் கூடாது?

கருணாநிதி இதெல்லாம் செய்ய வேண்டும் என்று பேசுபவர்களும் சிந்திக்க வேண்டிய ஒன்று!

நீராதாரச் சரவல்களில் தி.மு.க அரசின் செயல்பாடுகள் நிறைவாக இல்லை. அதில்எனக்கு அய்யம் இல்லை.

ஆனால், தி.மு.க பக்கம் மட்டும் கைகாட்டி விட்டு தான் ஏதோ நாயகர் போலஇராமதாசு வீரவேசம் போடுவதைத்தான் பா.ம.கவின் சூழ்ச்சி கலந்த கோழை அரசியல்என்று கருத வேண்டியுளது.

அதேபோலத்தான் ஈழத்தமிழர் விதயங்களிலும், ஈழ அகதிகள் விதயங்களிலும்!
கருணாநிதி எதுவும் செய்யவில்லை - சரி. இவர் என்ன செய்தார்?
இவர் ஏன் நடுவண் அரசில் இருந்து விலகக் கூடாது?
எல்லாம் நாடகம். பொடாவிலே வைகோ கைதானபோது கூட அது கடைசி வரைக்கும்தனக்குத் தெரியாமல் போய்விட்டது என்பதாகவே இராமதாசு நடந்து கொண்டார் என்பது நினைவுக்கு வரத்தான் செய்கிறது.

இரிலையன்சின் சீரங்காடித் திட்டத்திற்கும் இதேபோல அவர் எதிர்ப்பு தெரிவிப்பதும் அண்ணாச்சிகளின் தயவைத் தெற்கே வளர்த்துக் கொள்ளவே என்ற தந்திரமாகவேப்படுகிறது.

வெளியூர் அண்ணாச்சிகளுக்காக இரிலையன்சை எதிர்ப்பதும், உள்ளூர் அண்ணாச்சிகளுக்காக டாட்டாவை எதிர்ப்பதும் கலப்பில்லாத தூய தன்னலம் என்றே படுகிறது.

வளர்ந்த வெளிநாடுகளில் எத்தனையோ சீரங்காடிகள், பேரங்காடிகள் இருந்தும்சிறு அங்காடிகள் அல்லது சிறு கடைகள் இல்லாமல் இல்லவே இல்லை. இதை யாராவது மறுக்க முடியுமா?

சீரங்காடிகள் பெருகையில், சிறு கடைகளும், சிற்றங்காடிகளும் தமது தரத்தைஉயர்த்திக் கொள்கின்றன. இதுவே நாம் கண்டிருக்கின்ற உண்மை.

ஆனால், தமிழகத்தில் என்னவோ ஆயிடும் என்பது போல பூச்சாண்டி காட்டிக் கொண்டு அரசியல் செய்யும் தன்னலக் கோழைகளை என்ன சொல்ல?

எத்தனை நாள்களுக்குத்தான் மூக்கைச் சிந்தி சுவரில் அப்பி விட்டு,அதே கையில் வெற்றிலை பாக்கை மடித்துக் கொடுக்கும் சிறுவணிகர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும்?

எத்தனை நாள்களுக்கு அண்ணாச்சியின் கக்கத்தைப் பார்த்துக் கொண்டு கடலை மிட்டாய்வாங்கிச் சாப்பிட வேண்டும்?

அல்லது, சாக்கடையின் மேலே ஈ மொய்க்க மொய்க்க விற்கப்படும் ஆட்டுக் கறிக்கடை, கோழிக்கறிக்கடை, மீன் கடைகளில் எவ்வளவு நாள் வாங்கிச்சாப்பிட முடியும். இந்த வணிகர்களின் வாழ்க்கையும் வாழ்க்கைத் தரமும் உயர்த்தப் படவேண்டும், உயரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

ஆனால், அது இப்படித்தான் செய்யப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

சிறு வணிகருக்குப் பாதிப்பு என்றாலோ, அல்லது குமுகத்திற்கு பொருளியல் பாதிப்பு உண்டு என்றாலோ அதற்கான விதிகளை தக்காற்போல மாற்றியமைக்க முடியாதன அல்ல!

அரசாங்கம் நினைத்தால் எத்தனையோ கட்டுப்பாடுகளைச் செய்யலாம். அந்தக் கட்டுப்பாடுகளை எதிர்க்கட்சிகளும் ஆய்ந்து எடுத்துக் கூறலாம். அதை விட்டு விட்டு அடியோடு நிறுத்திவிட்டு "நான் எதிர்த்தேன் நிறுத்திட்டாங்க பார்த்தீங்களா!" என்று அதனைச் சாதனையாக வேறு இவர்கள் பேசுவது மக்களை எவ்வளவு கேவலமாக்குவது என்பதனைஉணரமுடியாமல் இல்லை.
நான்குநேரி திட்டத்தையும் போன ஆட்சியில் முடக்கி விட்டார்கள். எப்படி தென் தமிழ்நாடுவளரும்?

அப்புறம் நக்சல்களையும், வீரப்பன்களையும் துரத்திக் கொண்டே இருக்கவேண்டியதுதான், அரசியல் கட்சிகள் குறிப்பாக இராமதாசு தலையைச் சிலுப்பி,விரலை ஆட்டிவிட்டு, அப்புறம் பல்லை இளிக்கிறார் - "இதேப்டி இர்க்கு" என்று அவரின் உதடுகள் உதிர்க்கின்றன ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆப்படித்துவிட்டு.

கருணாநிதி வந்தால் மட்டும் இவ்வளவு வீரம் பேசும் இராமதாசு, அன்புச் சகோதரியிடம் மட்டும் ஒரு 20 திகிரி வளைந்து பல்லைக் காண்பிப்பார். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாகஇருக்கும்.

(வீரமணி 35 திகிரி வளைந்திருக்கையில், வாழப்பாடி இராமமூர்த்தி ஏறத்தாழ 45 வரைபோயிருக்கையில், ஏகப்பட்ட மந்திரிகள் 180திகிரியிலேயே வாழ்ந்திருக்கையில், வைகோ 360 சுழன்றிருக்கையில் இது என்ன பெரிதா என்று கேட்கிறீர்களா - அதுவும் சரிதான்! )

தமிழ்நாட்டில், தென்பாண்டிச் சீமையில் (பாலையில்?), வெறுமையாக ஆகிக் கொண்டிருக்கும் பூமியில், ஒரு திட்டம் கொண்டு வந்தால், அதைத் தொடை தட்டி அடியோடு வெட்டிப் போடும் இவர்களால், கர்நாடக, கேரள மாநிலங்களின் கெண்டைக் கால் மயிரைக் கூடப் பிடுங்க முடியவில்லை.

இவர்கள்தான் கங்கையையும், பிரம்மபுத்திராவையும் திருப்பிக்கொண்டு வந்து தமிழகத்திற்குத் தண்ணீர் பாய்ச்சி விடப் போகிறார்கள்!

இவ்வளவு இழிவான செயல்களை, தமிழக நலன்களுக்கு எதிரான செயல்களாகவே செய்து வரும் பல அரசியல்வாதிகள் உண்மையில் தமிழ் வித்துக்குப் பிறந்தவர்கள்தானா அல்லது தமிழ் வித்தே இப்படித்தானா என்ற கடுப்பு வரத்தான் செய்கிறது.

...நாக.இளங்கோவன்
05/ஆகசுடு/07

http://nayanam.blogspot.com/2007/08/blog-post.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)