|
பெரும்காள மேகம் பிள்ளாய்! |
|
|
|
பொற்கொடி
|
நகைச்சுவை கடினம்,அதிலும் wise-cracks என்று சொல்வார்களே அந்த புத்திசாலித்தனமான நகைச்சுவை, அம்மோ மெத்தக்கடினம், அதிலும் அனைவரும் ரசிக்கத்தகுந்த வகையில் 4 வரிகளில் இலக்கணக்கட்டோடு, மேலும் சொற்களாலும் கட்டுப்படுத்தப்பட்டு, கவிதை வடிவில் wise-cracks என்பது மிக மிகக் கடினம். அதை மிகச்சுலபமாக தனக்கே உரிய பாணியில் கவிதைப் பெருமழையாகப் பொழிந்த ஒருவர் கவி காளமேகம். இந்த வாரக்கடைசியில் கவி காளமேகம்த்தின் கவிதை தொகுப்பை படித்தேன். எனக்கு தமிழில் சிறிதும் ஆளுமையோ புலமையோ இல்லாத போதும் மிகச்சுலபமாகவே புரிந்தது அவருடைய கவிதைகள். சரியாகச்சொல்வதானால், பெரும்பாலான கவிதைகள் பேச்சுநடையிலேயே இருந்தாலும், இலக்கணக்கட்டோடு இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது எப்படி ஒருவரால் இப்படியும் எழுதமுடியும் என்று.
பொன்னி நதியின் வெள்ளம்போல் பொங்கி வரும் வார்த்தைகள், துள்ளலான வார்த்தைப் பயன்பாடு, பாடுபொருளின்மீது அதீதமான ஆளுமை, அதிலும் ஒரு crooked thinking என்று சொல்வார்களே அதுபோல மற்றவர் காணாததை கண்டுறைத்தல், சிலேடையாகப் பொழிதல், நிந்தாத்துதிகள் ( வஞ்சப்புகழ்ச்சி?) நையாண்டிகள், பாராட்டுதல்கள் என அனைத்து விதமான அம்சங்களையும் காணமுடிகிறது அவரது கவிதைகளில். பாக்கள் என்று சொன்னால் சரியாக இருக்குமோ? கவி காளமேகம் என்ற பெயருக்கேற்றபடி, சூல்கொண்டமேகம், ஆல கால நிறத்தில் அண்டம் அதிர மழை பொழிவதுபோல் பொழிந்திருக்கிறார். அவரது கவிதை மழை சட்டென்ற சிரிப்பிலும் அடடே என்ற வியப்பிலும் நம்மை ஒருசேர ஆழ்த்துகிறது.
யார் காளமேகம் என்று கேட்டதற்கு அவரே ஒரு "பா"வில் பதிலுரைக்கிறார்,
இம்என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம்என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ- சும்மா
இருந்தால் இருந்தேன்;எழுந்தேனே ஆயின்
பெரும்காள மேகம் பிள்ளாய்
நமது நடிகர்களின் பன்ச் டயலாக் போல் இருக்கிறது அல்லவா? நிச்சயம் இவர் நகைச்சுவை கவிதை உலகின் சூப்பர்ஸ்டார்தான். நான் ரசித்த அவரது கவிதைகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அவரது முழுத்தொகுப்பும் படிக்கவேண்டிய ஒன்று.
நிந்தாத்துதி வகையறாவைச்சார்ந்தது,முருகக்கடவுளை பாடியது
அப்பன் இரந்துண்ணி;ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உரிதிருடி-சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கிங்கு
எண்ணும் பெருமை இவை.
நையாண்டிக்கவிதை வகையறா
முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க
பின்னே இருந்து இரண்டு பேர்தள்ள- எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை
மாதம்போம் காதம் வழி
தலைவர், பெண்களோடு மிகவும் விரும்பித்திளைப்பவர்போலும், சில தாசிகளைப் பற்றியும் கவிதைகள் எழுதியிருக்கிறார்
வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள்- நேற்று
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன் கண்டேன் என்று
பழுதைஎடுத்து ஓடிவந்தான் பார்.
பாவம் கீரை விற்பவளின் அழகுக்கு கட்டியம் கூற யாரும் இல்லை என்ற வருத்தம் வேறு அவருக்கு
வெள்ளைஆன் ஏறும் விமலர் அடிபணியும்
பிள்ளையான் வாழும் பெரும்தெருவில்- வள்ளை
இலைகறிவிற் பாள்மருங்குல் இற்றுவிடம் என்று
முலைக்கு அறிவிப் பார்இலையே முன்
தொடக்கமும் முடிவும் கொடுத்து பாடல் புனையச்சொல்வது அக்காலத்து வழக்கம். அப்படி இவர் எழுதிய எழுத்தாணி-சூரிக்கத்தி, கரி-உமி,
செருப்பு-விளக்குமாறு என்று தொடக்கம்-முடிவு வார்த்தைகளுடன் பல பாடல்கள் பாடியிருக்கிறார். வினாவிடை வகைக்கவிதைகளையும்
பாட்டில் புனைந்திருக்கிறார்.
சிலேடைக்கவிதைகளில் இவரை மிஞ்சும் ஒருவர் இன்னும் பிறக்கவில்லை என்றே சொல்லலாம். மீனுக்கும் பேனுக்கும், பாம்புக்கும் எலுமிச்சைக்கும், ஆமணக்கிற்கும் யானைக்கும், கண்ணாடிக்கும் அரசனுக்கும், பூசணிக்காய்க்கும் சிவனுக்கும் என்று பல விஷயங்களில் யாருக்கும் புலப்படாத ஒற்றுமைகளை கண்டு அதை பாடலில் புணைந்திருக்கிறார். இடக்கரடக்கல்கள் இவருக்கு தண்ணீர் பட்ட பாடு.
தண்ணீர் என்றதும் ஞாபகம் வருகிறது, இவருக்கு ஒரு ஆய்ச்சியர், நீர் கலந்த மோரைக்கொடுத்துவிட்டாளாம், அதற்கு ஒரு கவிதை எழுதுகிறார்
காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடும்தரையில் வந்ததன்பின்
வாரொன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.
அவர் முன்னமே சொன்னதுபோல இம்என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ என்பது முழு உண்மை, எடுத்ததெற்கெல்லாம் கவிதை, பாடுபொருள் எதுவாயிருந்தபோதும் கவிதை காட்டாறுபோல் வருகிறது இவருக்கு. என்ன கொஞ்சம் பெண்கள் விஷயத்தில் தலைவர் ஆர்வம் மிக்கவர் போல இருக்கிறது பல கவிதைகளில் பெண்களைப்பற்றியும், அவர்களது பாகம் வரையாத குறையாய் விளக்கித்தள்ளிவிடுகிறார். தாசிகளைப்பற்றியும், பெண்களை கேவலமாக விமர்சித்தும் சில கவிதைகள் இருக்கின்றன. அவரது மற்ற கவிதைகளுக்காக அவற்றை விட்டுவிடுவது சாலச்சிறந்தது.
கவி காளமேகத்தின் கவிதைகளை ( ஒரு 220 இருக்குங்க) தொகுத்து ப்ராஜக்ட்மதுரை திட்டத்துல பதிஞ்சிருக்காங்க, நமக்காகத்தான். அதை படித்துப்பாருங்களேன்.
சுட்டி: http://www.tamil.net/projectmadurai/pub/pm0220/kalamega.pdf
இப்போ இருக்கும் கவிஞர்கள் யாராவது இந்த வகை கவிதைகள் எழுதுகிறார்களா? அதுசரி, நமக்கு யாருக்காவது இதுமாதிரி வகையறா கவிதைகள் எழுத வருமா? டபுள் மீனிங்தான், ஆனா நல்ல விதத்தில் இருக்கனும் ஆமா, இப்போவே சொல்லிட்டேன். ( எங்கயாவது தற்காலத்து வாலி மாதிரி எழுதி வெச்சுடாதீங்க)
இந்தப்பதிவில் கூட சில கவிதைகள், சற்றே எல்லை மீறியதாகவும் இருக்கலாம். போற்றுவோர் போற்றலும், தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் காளமேகத்திற்கே.
http://kavidhaiunarvu.blogspot.com/2007/08/blog-post_05.html
|