|
சங்கராச்சாரியின் பக்தனும், உச்சநீதிமன்ற வழக்கும் |
|
|
|
திரு
|
"ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம் விசாரித்துவரும் இந்த வழக்கு சங்கரராமன் கொலை செய்ததில் சங்கராச்சாரியின் பங்கு சம்மந்தமானதல்ல. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே. பாலசுப்பிரமணியன் மற்றும் நீதிபதி மாத்தூர் தலைமையில் நடந்து வரும் வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு தடை கோரி காஞ்சி சங்கராச்சாரி தரப்பில் தொடுக்கப்பட்டது. இந்த வழ்க்கின் அடிப்படையில் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வழங்கப்பட்ட நிலையில் நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனிமனிதனாக ஒருவர் நான் பக்தன் என அறிவிப்பதில் எந்த தடையும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தனது தலைமையின் கீழ் வரும்ம் வழக்கு சம்பந்தமாக நீதிபதியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சிகரமானது. இந்திய நீதித்துறை சட்டத்திற்கு கட்டுப்பட்டதா சாமிகளுக்கு கட்டுப்பட்டதா என சாமானியனையும் கேட்க தூண்டுகிறது நீதிபதியின் இந்த அறிவிப்பு.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மீதான வழக்கு காஞ்சீபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்றால் நியாயமான தீர்ப்பு கிடைக்காது என வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற சங்கராச்சாரி வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை நடத்திய உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதி சங்கராச்சாரியின் பக்தனாக மாறியிருக்கிறார். மேலும் சங்கராச்சாரியார் மனு மீது புதிய பெஞ்ச் விசாரணை நடத்தும் என அறிவித்து சங்கராச்சாரி மனு மீதான விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்திருக்கிறார்.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றம் செல்லாமல் காலம் கடத்துவதும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதுமாக இழுக்கப்படுகிறது. பிரதான குற்றவாளியாக கருதப்படும் சங்கராச்சாரி சட்டத்தின் ஓட்டைகளில் ஒளிவதும், சங்கரராமனின் ஆவி துரத்துவதுமான இந்த தொடர் விளையாட்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ. பாதிக்கப்பட்ட சங்கரராமனின் குடும்பத்தினருக்கு நீதி எப்போது?
நீதிமன்றம் புனிதமானது, நீதிமன்றங்களை அதனால் விமர்சிக்க கூடாது என்பதான பார்வை நம்மிடையே பரவலாக இருக்கிறது. உண்மையில் நீதிமன்றங்கள் புனிதமானவை தானா? மனிதகுல பரிணாம வளர்ச்சியில் வல்லவனின் வார்த்தைகளே தீர்ப்பாக ஆதிகாலம் தொட்டு மக்களாட்சி வரை தொடரவே செய்கிறது. தற்கால நீதிமன்ற நடைமுறையானது 'சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் குற்றம் செய்தவரா? இல்லையா?' என்று நடைபெற்ற சம்பவங்கள், சாட்சிகள் வழி விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்தின் அடிப்படையில் சட்டரீதியான அணுகுமுறையாகவே தீர்ப்புகள் அமைதல் வேண்டும். இதில் நீதிபதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற பார்வை நீதிபதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கே 'அனைவரும்' என்பது குற்றம் செய்தவன் அரசனோ, ஆண்டியோ, சங்கராச்சாரியோ எவராக இருப்பினும் சட்டத்தின் முன்னர் சமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதாக பொருள். ஆனால் நீதிமன்ற நடைமுறையில் என்ன நடக்கிறது?
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய குடியரசு தலைவர் மீது பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்தார் நீதிபதி ஒருவர். அந்த வாரண்ட் பிறப்பிக்க லஞ்சம் பெறப்பட்டிருந்தது தெரியவந்தது. நீதிபதிகளை நியமனம் செய்வதில் எந்தவிதமான வெளிப்படையற்ற தன்மையும் இல்லாதது இதற்கு மிக முக்கியமான காரணம். லஞ்சம், சட்டத்துக்கு எதிரான செயல்கள் என சில நீதிபதிகள் செய்யும் செயல்களால் நீதிமன்றம் மீதான கேள்விகள் பலமாக எழுகின்றன. இந்த வரிசையில் தான் சார்ந்திருக்கும் மதம் அல்லது சாதி சார்ந்த உணர்வுகளும், வெறித்தனமும் நீதிபதிகளையும் ஆட்டிவைக்கிறது. இப்படிப்பட்ட நீதிபதிகள் வழங்கிய/வழங்கும் தீர்ப்புகள் தங்களது தனிமனித விருப்பு/வெறுப்புகள் அடிப்படையில் அமைகிறதே தவிர சட்டத்தின் பார்வையில் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமையும்.
வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டியவர் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டை விட்டு கீழிறங்கியிருக்கிறார். நீதிபதிக்கான முதன்மையான பண்பை இழந்த ஒருவர் இனி வழக்குகளில் எந்த அடிப்படையில் நீதிபதியாக இருக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது. சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் வரிசையில் நீதித்துறையிலிருந்து நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் புது வரவு.
சட்டத்தின் முன்னர் விசாரிக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளை காலம் கடத்த சங்கராச்சாரி தரப்பு எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த உச்சநீதிமன்ற வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக நீதிபதியின் இந்த நடவடிக்கை அமைகிறது. 'சட்டம் ஒரு இருட்டறை' என்பதால் சங்கராச்சாரிகள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கண்ணாமூச்சியாட்டம் ஆட வாய்ப்புகள் அதிகம். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் குடும்பத்திற்கு நீதி எப்போது?
http://aalamaram.blogspot.com/2007/08/blog-post_07.html
|