|
மு. சுந்தரமூர்த்தி
|
இன்று thatstamil.com இல் செய்திகளைப் படித்தபோது ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு செய்திகள் முக்கியமாகப் பட்டன.
கருணாநிதிக்கு
இது தேவையா?: ஜெ கோபம்
கருணாநிதிக்கு
பாராட்டு விழா - அசத்திய ஸ்னேகா
ஜெயலலிதாவின் கோபத்திலும், கடுமையான விமர்சனத்திலும் நியாயமும், எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வும் தெரிகிறது. சிகுன்குன்யா (chikungunya)என்கிற வைரஸ் காய்ச்சல் தமிழ்நாட்டிலும் பரவி 250 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதைப்பற்றி தமிழக முதல்வரும், சுகாதார அமைச்சரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டுகிறார். இப்படிப்பட்ட உயிர்க்கொல்லி தொற்று நோய் பரவிவரும் வேளையில் பாரட்டுவிழா தேவையா என்னும் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
கடந்த சிலமாதங்களாகவே சிகுன்குன்யா காய்ச்சல் ஆந்திரா, மராட்டியம், ஒரிசா மாநிலங்களில் பரவி வருவதாகச் செய்திகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. கடந்த மார்ச்சு மாத உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையிலேயே இம்மாநிலங்களில் சில ஆயிரம் பேர்கள் சிகுன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆந்திராவிலிருக்கும் வைரஸ் தமிழ்நாட்டுக்கும் பரவுவது சாத்தியமே. சமீபத்தில் இங்குள்ள நண்பர் ஒருவர் தந்தை இறந்துவிட்டதாக செய்தி கிடைத்து அவசரமாக ஊருக்குச் (தஞ்சாவூர் பகுதி) சென்றார். இந்த மரணம் சிகுன்குன்யா காய்ச்சல் மூலம் தான் ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. போனவாரம் என் மனைவியின் உறவினர் ஒருவர் (கோவைப் பகுதியில்) அகால மரணம் அடைந்த செய்தி வந்து தொலைபேசிய போது அவரும் சிகுன்குன்யா காரணமாகத் தான் மரணமடைந்தார் என்று அவருடைய கணவர் தெரிவித்தார்.
பரவிவரும் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தேவையான சுகாதார, மருத்துவ நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டில் இத்தகைய இறப்புகள் ஏற்படவில்லை என்று வீம்புக்காக அறிக்கை விட்டு மக்கள் நல்வாழ்வுப் பிரச்சினையைக் கூட அரசியலாக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டும்.
பொதுவாகவே சினிமாக்காரர்களின் பகட்டுகளை எதிர்ப்பவராகவும், மருத்துவராகவும் இருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இடமிருந்தும் ஜெயலலிதாவிடமிருந்து வந்தது போன்ற விமர்சனம் வந்திருக்க வேண்டும்.
இப்போது கருணாநிதிக்கு நடத்தப்பட்டது போன்றதொரு பாராட்டு விழா முன்பு ஜெயலலிதாவுக்கும் அவர் முதல்வராக இருந்தபோது திரைப்படத் துறையினரால் நடத்தப்பட்டது தான். ஆட்சியிலிருப்பவர்களுக்கு நடத்தப்படும் இப்படிப்பட்ட பகட்டான பாராட்டு விழாக்களும், பட்டமளிப்புகளும் உண்மையாகவே அவர்கள் மீதுள்ள மரியாதை நிமித்தமாக நடத்தப்படுவதாகத் தெரியவில்லை. பலன் பெற்றவர்கள் நன்றிக் கடனுக்காக அல்லது ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்பதற்காக விழா நடத்துகிறார்கள். பாராட்டப்படுபவர்கள் புகழ்வெள்ளத்தில் நனைவதை விரும்புகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு அளிக்கப்பட்ட "தொல்காப்பியர் விருதும்" இதே வகையில் தான் வரும். ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் சென்னைக்கு விஜயம் செய்தார் என்பதற்காக அவருடைய நிகழ்ச்சிகளில் இன்னொன்றையும் சேர்த்து ஜனாதிபதியின் கையில் விருது பெற்றதாக செய்தியை உருவாக்கும் இன்னொரு உத்தியாகவே தெரிந்தது. இந்த விருதை வழங்கியது முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பன் நடத்தும் "ஆழ்வார் ஆய்வு மையம்" என்ற அமைப்பு. இவ்வமைப்பு வேறு சில விருதுகளை இதற்கு முன் சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. "தொல்காப்பியர் விருது" இந்த ஆண்டுதான் புதிதாக வழங்கப்பட்டிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலும் வழங்கப்படுமா என்பதைப் பொறுத்துதான் இவ்விருதுக்குரிய மதிப்பை கணிக்கமுடியும். இதுவும் "ஒரே முறை நிகழ்ந்த அற்புதம்" என்ற அளவில் நின்றுபோனாலும் ஆச்சரியப்பட முடியாது.
முதல்வருக்கு ஏற்கனவே இருக்கும் புகழும், பட்டங்களும் போதாதா? இன்னும் ஏனிந்த போதை?
http://kumizh.blogspot.com/2006/09/blog-post_24.html
|