குழந்தைகள் தத்தம் கோடை விடுமுறைகளைக் கழித்துவிட்டுப் பள்ளிகளுக்குத் திரும்புகிறார்கள். நாட்டுக்குத் தகுந்த மாதிரி விழாக்களும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்கின்றன. போரைப் பற்றிய கவலையோ, குண்டுகளைப் பற்றிய பயமோ இல்லாமல் பள்ளிக்குப் போக முடிவது ஒரு பெரும் பேறு. அது எத்தனையோ நாட்டுக் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் ஈழத்தில் நிலை அப்படியில்லை. குழந்தைகளின் இருப்பிடங்களைக் குறிவைத்து அரச பயங்கரவாதிகளால் குண்டு வீச முடிகிறது. அந்த அரசாங்கமும் எவ்வித விசாரணைக்கும் உட்படாமல் தப்பித்துக்கொள்ள முடிகிறது. எந்த அண்டை நாடும், அயல்நாடும் கேட்பதில்லை என்ற துணிச்சல் அரசுக்கு. பள்ளிக்குச் செல்லும் குழந்தை பள்ளிக்குச் செல்லுமா, திரும்ப வருமா என்பதெல்லாம் ஈழத்தில் அன்றாடக் கவலைகளில் ஒன்று. இந்நிலையைக் கண்டும் கண்டிக்காமல் இருப்பது, அல்லது அரைகுறையாகத் தெரிந்ததை வைத்து உளறிக் கொட்டுவது, அல்லது காண்பவற்றைக் குறித்து தன் நெஞ்சறிந்து பொய்யான தகவல்களை வஞ்சகமாகப் பரப்புவது என்பன யாவும் ஈழப் போராட்டத்தைக் குறித்த அனைத்துலக (தமிழ்) மக்களின் புரிதலில் இடைநுழைபவை. ஒன்று இவர்கள் தம் கயமையை நிறுத்திக் கொள்ளவேண்டும், அல்லது தங்கள் நீதிமான்/கல்விமான் முகத்திரைகளைக் கழற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் முகத்திரைகள் கிழிபட்டுத் தொங்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தில் அன்றாடம் நிகழும் ஆட்கடத்தல்களையும், கொலைகளையும், அரச பயங்கரவாதத்தையும், உள்ளீட்டு அரசியலையும் பன்னாட்டுச் சமூகத்தின் முன்னும், தோழமைத் தமிழர்களிடமும் தொடர்ந்து கொண்டுவரவேண்டிய கடமை பதிவர்களுக்கு உண்டு. அவ்விதத்தில் இவ்வாரப் பூங்காவில் தமிழ் சசியின் ஈழத்தில் "காணாமல் போதல்" தொடர்பான இடுகையும், பாஸ்போர்ட் எனப்படும் கடவுச் சீட்டினைக் குறித்த சயந்தனின் சிறுகதையும் இடம் பெறுகின்றன. கடவுச்சீட்டு பலருக்குச் சாதாரணமானதாக இருக்கலாம். பல கிராமத்தினருக்கு இது கையூட்டாகப் பணத்தையும், நேரத்தையும் மட்டுமே அழித்து பெறக்கூடியதாக இருக்கிறது, ஆனால் இனவாதப் போரினால் சீரழியும் ஈழத் தமிழருக்குக் கடவுச் சீட்டு என்பது சுலபமானதல்ல. "சொந்த" நாட்டிலேயே கடவுச் சீட்டு வாங்குவது என்பது உயிரை விலைவைத்துப் பெறும் விடுதலைச் சீட்டு. எந்த நாட்டுக் கடவுச் சீட்டு வைத்திருந்தபோதும், தமிழ் பேசும் ஒரே காரணத்திற்காக ஈழத்தமிழர் என்று கூறிக்கொண்டு மேலை நாடுகளில் அகதி நிலையைக் கோரும் எண்ணற்ற இந்தியத் தமிழர்களின் கதைகளை நாம் கண்டே வந்திருக்கிறோம். இந்நிலையில் போராட்டச் செய்திக் களத்தில் நுனிப்புல் மேய்ந்து, நுனிச் சாணமாய் இட்டுத் திரியும் மாடுகளுக்கு உள்ளே புதையுண்டு போயிருக்கும் குருதியும் சதையும் சயந்தனின் கதையூடாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது.
மெக் இயங்குதளத்தில் தமிழ் வருவதில்லை என்று பலர் குறைபடுவதைக் கேட்டுள்ளோம். அவர்களுக்கு ஒரு வழியைக் காட்டும் பகீயின் இடுகை. விடைகள் இல்லாதபோதும், நுட்பத்தைச் சொல்லிவருவதால் விஜியின் கிர்ச்சாப் இடுகை தொகுக்கப்பட்டிருக்கிறது. அணுசக்தியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பல நாடுகளில் சொற்ப சதவீதமேயானாலும், இயற்கை எரிபொருள்களின் முடிவில் அணுசக்தி ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றாக இருக்கும் என்கிறார் அருணா. அணுசக்தி குறித்த உரையாடல்களை ஏற்படுத்தும் நோக்கில் பூங்கா இவற்றைத் தொகுத்திருக்கிறது. மின்மினிப் பூச்சிகளின் ஒளியைப் பற்றிய அடிப்படை விளக்கமொன்றைச் சொல்கிறார் பிரதாப் குமார். இந்த லுசிபெரேஸ்-லுசிபெரின் வினையானது பல்வேறு உயிரியல் ஆய்வுகளில் தற்போது பயன்படுத்தப் படுகிறது. குமரி மைந்தனால் 1994 வாக்கில் எழுதப்பட்டதாகத் தெரியும் தமிழ் மருத்துவம் பற்றிய பதிவு இன்றுவரைக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது. மேலைநாடுகளில் அலோபதியின் பல்விதமான கோரமுகங்கள் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்கள் மாற்று வழிகளை நாடுவதை நாம் காண்கிறோம். இந்த நிலையில் நம்மிடமுள்ள பெரும் செல்வத்தைக் கொண்டு அதனைத் திறமையாகக் கண்டுகொண்டு பயன்பெற முயலவேண்டும்.பொன்ஸின் நிரல் துண்டு நிறுவும் முறை கோயிந்துக்கு நிச்சயம் புரிந்திருக்கும்போலத்தான் தெரிகிறது!
தொகுதி மறுசீரமைப்பில் பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணர்கிறது மக்கள் சட்டத்தின் இடுகை. இது மேலும் கவனம் பெறவேண்டுமென்ற நோக்கில் பூங்காவில் தொகுக்கப்படுகிறது. மேலும், வங்கி ஊழியர் திங்களிதழில் வெளிவந்ததாகத் தோன்றினாலும், யாதய்யாவின் மரணத்தையும், அதனையொட்டிய விசாரணையில் ஐசிஐசிஐ வங்கியின் குளறுபடிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பொருட்டும் மக்கள் சட்டத்தின் பதிவு தொகுக்கப்படுகிறது. இத்தகைய நிறுவனங்களைப் பெயர் சொல்லாமல் 'தனியார் வங்கி' என்று மூடி மறைப்பதுதான் பத்திரிகை தர்மமா என்ற கேள்வியின் நியாயத்தையும் உணரமுடிகிறது. இந்தியாவின் அறுபதாவது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில் இந்தச் சுதந்திரம் யாரை வளர்த்திருக்கிறது, யாரைப் புறந்தள்ளியிருக்கிறது என்பதை உணரவைக்கிறது ஸ்பாரடகஸின் செய்தி. எவ்விதக் கேள்வியுமின்றி ஒப்புக்கொள்ளப்படுவதாகப் பரப்பப்படும் மதவாதிகளின் கற்பிதங்களை நோக்கி எழுப்பப்படும் கோவி.கண்ணனின் கேள்விகள் கேட்பாருக்கும், வாசிக்கும் பிறருக்கும் மதம், ஆன்மீகம், இவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை உணரச் செய்கிறது. கூடவே மதத்துக்கும், தேசியவாதத்துக்கும், நாட்டுப் பற்றுக்குமான உறவுகளையும் தொடுவதாக இத்தகைய தொடர் விசாரணைகள் அமையும். நாளாந்தம் புதுப்புதுக் கதைகளோடு வரும் அரசியல் நாடகங்களினிடையே நம் நினைவுகளிலிருந்து மறைந்துபோகின்றவை பல. அவற்றிலொன்று தில்லையில் நாவலர் ஆறுமுகசாமி நடத்தும் போராட்டம். தமிழுக்காக, ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடத்தும் இப்போராட்டத்தில் பல முகங்கள் வெளிப்படுகின்றன. அவற்றினைத் தொகுத்திருக்கிறது தமிழரங்கம். இவ்வழக்கின் பல்வேறு கட்டங்களையும், பின்னணியில் நிகழும் அரசியல்களையும் விளக்கியிருக்கிறார்.
காவிரியின் மலையோங்கிய கரையொன்றின் எழிலில் நனைந்ததைக் குறிப்பிடும் இ.கா.வள்ளியின் இடுகை நம்மையும் நனைக்கிறது. சுதந்திரம் என்ற ஜெஸிலாவின் சிறுகதை உயிரோட்டமுள்ள நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்வின் சிக்கல்களிலிருந்து விடுபடத் துடிக்கும் ஒரு மனம் எவ்விதம் இயங்குகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மியாவின் (மாயா) இசை இறுவட்டான கலா வெளியீட்டைப் பற்றிய டிசேயின் இடுகை இவ்விறுவட்டினை வாங்கும் ஆவலைத் தூண்டுகிறது. வலைப்பதிவு குறித்த அறிமுக இடுகையில் சிந்தாநதி புதியவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையான அறிமுகத்தைத் தருகிறார். ஏறக்குறைய பூங்காவின் வலையகழ்வுக்கு எழுதப்படுவதைப் போன்றதொரு தோற்றத்துடன் இருக்கிறது மஞ்சூர் ராசாவின் இடுகை. இது பல நல்ல பதிவர்களை அடையாளங்காண உதவும். சங்க இலக்கியம் வாயிலாக அறியப்படும் வாழ்வுமுறை பெரும் அதிசய உலகங்களை நம்முள்ளே விரிப்பது. தனது மாணவப் பருவத்தில் தனது ஒரு வகுப்பில் நிகழ்ந்த உரையினை நம்முடன் பகிர்கிறார் சினேகிதி. உயிரெழுத்து என்ற புதிய சிற்றிதழைக் குறித்து சுரேஷ் கண்ணன் குறிப்பிடுவதைப் போல, பொருள் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கவர்ச்சிச் சந்தையில் தரத்தினை முன்னெடுக்க முனையும் சிற்றிதழ்கள் அவசியம் என்ற வகையில் பூங்கா உயிரெழுத்தினை வரவேற்கிறது. உயிரெழுத்துடன் சேர்த்து, கனடாவிலிருந்து வெளிவரவிருக்கும் கூர் என்ற இலக்கியத் தொகுப்பையும் வரவேற்கிறது பூங்கா.
முனைவர் மு. இளங்கோவன் இவ்வாரப் புதுப் பதிவராக அறிமுகமாகிறார். தமிழின் நலம் குறித்த சிந்தனையும், மொழி வன்மையும் ஓங்கியிருக்கும் இவரது பதிவு வாசிப்புக்கு உகந்தது. தமிழ் மொழியில் விரவிக் கிடக்கும் பிறமொழிச் சொற்களின் எடுத்துக் காட்டுப் பட்டியல், நாம் பயன்படுத்துவது தமிழ்தானா என்ற மலைப்பைத் தருகிறது. அடுத்ததாக பொன்னூர் மலையைப் பற்றிய குறிப்பு தமிழகத்தில் சமண சமயத்தின் இருப்பை அறிய உதவும். இப்புதுப் பதிவரை உங்களுடன் சேர்ந்து பூங்கா வரவேற்கிறது.
இவ்வார பூங்கா இதழுக்குப் படைப்புக்களை அளித்த அனைவருக்கும் பூங்காவின் நன்றி!
|