இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள். காந்தி என்றவுடன் சட்டென மனத்திரையில் ஓடும் வரிகள் இந்திய சுதந்திரம் என்பதாகவே பலருக்கும் அமையும். கிராமப்பொருளாதாரத்தை வலியுறுத்திய ஒரு பொருளாதார நிபுணராகவோ, பல்வேறு அரசியல் போராட்டங்களை நாட்டு சுதந்திரம் தவிர்த்த பல காரணங்களுக்காக நிகழ்த்திய ஒரு அரசியல்வாதியாகவோ, கள்ளுண்ணாமை, தீண்டாமை போன்ற சமூக ஒழுக்கங்களைப் பற்றிப் பேசி சமூக மாற்றத்தினை முன்னெடுத்த ஒரு தலைவராகவோ, தன் சுயபரிசோதனைகளை வெகுமக்கள் அரசியலுக்கு உரைகல்லாகப் பயன்படுத்திய ஓர் அரசியல் ஞானியாகவோ அவர் சட்டென நினைவு கூரப்படுவதில்லை; அப்படி அவரது பிம்பம் காட்சிப்படுத்தப்படுவதில்லை. காந்தி என்ற வார்த்தை 'இந்திய சுதந்திரம்' என்ற வார்த்தையை எப்படித் தூண்டுகிறதோ, அப்படி அது தூண்டும் இன்னொரு சொல் அகிம்சை என்பதாகும். காந்தியே குறிப்பிட்டபடி அகிம்சை என்பது அவரது கண்டுபிடிப்பல்ல என்றாலும் இந்த இந்திய சுதந்திரம்-அகிம்சை-காந்தி என்ற சொற்றொடர் உருவாக்கப்பட்டதன் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் மிகவும் நுட்பமானவையும், இன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுவனவும் ஆனவை.


இச்சொற்றொடரை உடைத்துப்பிரித்தால் உதிரும் கேள்விகள் பல. இந்திய சுதந்திரம் என்பது அவர் வலியுறுத்திய கிராமப்பொருளாதாரம், சுயசார்பு, தீண்டாமை அற்ற சமூகம் போன்றவை உள்ளடக்கியதா அல்லது காந்தியைப் படமாகக் கொண்ட ரூபாய் நோட்டுகளையும் அஞ்சல் தலைகளையும் அச்சடிக்கும் உரிமை மட்டும் பெற்றதா என்பது ஒரு முக்கியமான கேள்வி. "அகிம்சை என்பது போராட்ட முறையா? எல்லா இடங்களிலும், களங்களிலும் அது பொருந்துமா?" எனும் கேள்விகள் இன்றைய சமூக, அரசியற்களங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அகிம்சையை வெற்றி உறுதி செய்யப்பட்ட போராட்ட முறையாக அங்கீகரிக்கும், உபதேசிக்கும் சமூகம் ஒன்று அப்படியான போராட்டங்களை இதுவரை எப்படி எதிர்கொண்டுள்ளது என்பதைப்பார்க்கும் போது, நமக்குக் கற்பிக்கப்பட்டவை குறித்துக் கேள்விகள் எழும்புகின்றன. இந்தக் கேள்விகள் பல்கிப்பெருகும் போதும், காந்தி என்ற சொல்லும் ஆளும் அடையக்கூடிய இடம் எது? மக்கள் பிரச்சனைகள், சமூக மாற்றங்கள், பொருளாதார நிலைப்பாடுகள் ஆகியவற்றில் அரசும், சமூகமும் இப்போது எடுக்கும் நிலைப்பாடுகள் காந்தியின் கோட்பாடுகள் வழக்கிழந்துவிட்டதையும், வெறும் வழிபாட்டு உருவமாக படச்சட்டங்களிலும், சிலைகளாகப் பீடங்களிலும் உறையவேண்டிய நிலையை காந்தி அடைந்துவிட்டதைக்காட்டுகிறனவா, அல்லது, அவரும் அகிம்சையும் மக்களுக்குத் தருவதற்காக அரசு வைத்திருக்கும் அனேக கற்பிதங்களில் இரண்டா என்பன போன்ற கேள்விகள் இந்நேரத்தில் எழுப்பப்படுதல் பொருத்தமாக இருக்கும்.


தமிழ்சசியின் திலீபன், காந்தி, அகிம்சை கட்டுரை அகிம்சை வழியான போராட்டமொன்றுக்குக் காந்தியின் தேசம் அளித்த பதிலை முன்வைத்து அகிம்சை என்பது ஒரு செயல்படுத்தக்கூடிய போராட்ட வடிவமா, எல்லாக்களங்களிலும் அது வெற்றியளிக்கக்கூடியதா என விரிகிறது. "திலீபன் மட்டுமல்ல, பொட்டி ஸ்ரீராமுலு, சங்கரலிங்கனார், மேதாபட்கர் போன்ற அகிம்சைப்போராளிகள் இந்தியாவிடமிருந்து பெற்ற பதில்கள் நமக்குச் சொல்வன என்ன? பொருளாதாரக்காரணிகள் கட்டுப்படுத்தும் அரசியற்சூழல் பற்றிய மேம்பட்ட அறிவும் பார்வையும் கிடைக்கப்பெறும் சூழலில் அகிம்சை என்பது எத்தகு இடத்தைப்பெறுகிறது?" என்ற கேள்விகள் பிறக்க, இந்தக்கட்டுரை ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.


இந்தக் கட்டுரையைப்போல மேலும் சில கேள்விகளை முன்வைக்கிறது ராஜாவனஜின் கட்டுரை. இந்தியாவின் இன்னொரு புனிதப்பசுவாக, பிச்சை எடுக்கும் கோயில் யானையாகக் காட்டப்படுவது ஜனநாயகம். மக்களாட்சி என்ற நடைமுறையின் அடிப்படையான மக்களை அரசியற்படுத்துதல் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது கட்டுரை.


புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் அறிவுப்பரவலாக்கப்பட்ட சமூகம் எத்துணை முக்கியம் என்பதைக் கலாம் போகும் இடமெல்லாம் பேசிவருகிறார். அறிவு சார்ந்த சமுதாயம் என்பது கிராமப்புற சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெறுவதும், கிராமங்கள் அடிப்படை சுகாதாரம், தொலைத்தொடர்பு, பொருளாதார நிறைவு பெறுதல் இவற்றை உள்ளடக்கியது. ஊழலை, அதிகார துஷ்பிரயோகத்தை, சாதி, பால் அடிப்படையில் மிகவும் பின் தங்கிய விழுமியங்களைப் பெருமையுடன் தாங்கி நிற்கும் சமூகமும், அரசியல், ஊடக நிறுவனங்களும் கலாம் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் திட்டக்கூறுகளை எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றன என்பது கேள்விக்குரியதுதான். கலாமின் பூண்டி புஷ்பம் கல்லூரி வருகையையும் உரையினையும் சுருக்கமாகவும், சுவையாகவும் தருகிறது இராமநாதனின் மழை, பசி, கலாம் என்ற கட்டுரை.


அறிவுப்பரவலாகப்பட்ட சமூகம் பற்றி பேசும் போது தமிழ்நாட்டில் கல்விப்பரவல் நிகழ்தலைச் சாத்தியமாக்கிய காமராஜரை நினைவிற் கொள்ளுதல் மிகவும் இயல்பான ஒன்று. அக்டோபர் 2 ம் தேதி காமராஜர் நினைவுநாளுங்கூட. கல்வி மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்கு கல்வி பெறச் செய்வதில் அவர் முனைப்பாய் இருந்தார். அப்படி ஒரு சிந்தனையே அதுவரை ஆட்சியாளர்களாய் இருந்தவர்களுக்கு உவப்பாய் இருக்காதபோது காமராஜரின் இம்முனைப்பு அவரால் படிக்க வாய்ப்பளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களால் நன்றியுடன் நினைவுகூறப்படுகிறது. ஏழை எளிய மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதுதான் தம்முடைய ஆட்சியின் கொள்கை என்பதைக் காமராஜ் இவ்வாறு கூறினார். "நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் குச்சியை வைத்துக் கொண்டு மாடு மேய்க்க போய்க் கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏண்டா பள்ளிக்கூடம்  போகவில்லையென்று. கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை என்கிறான். அவனுக்குச் சாப்பாடு இருந்தால், அவன் பள்ளிக்கூடம் போக மாட்டானா என்ன? அவன் அப்பன், அம்மாவுக்குத் தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பிப் படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன?. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்குப் போகக் கூடாதென்று? அவன் சொல்லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்கப் பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேலி செய்வார்களாம். ஒரு சட்டை வாங்கப் பணமில்லை. அவனுக்குத்தான் பணமில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா? அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா? இல்லையா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா? நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய், உன் தலையெழுத்து அப்படித்தான் இருக்கிறது என்னு சொல்லி விட்டுவிடலாமா? இது எப்படி நியாமென்று கேட்கிறேன்." இவர் தான் காமராஜ்.


இப்படியான சமூகமாற்றத்தைச் சாதித்தற்கு காரணம் அவரது கையில் இருந்த அதிகாரம் அல்ல. ஏனெனில் அதிகாரம் எப்போதும் ஆளுவோர் கைகளிலிருந்தது. மாறாக சமூக மாற்றத்தைப்பற்றி அவருக்கு இருந்த அக்கறையும், விழிப்புணர்வும் தான் அதற்குக்காரணம். அவரது நினைவுநாளை ஒட்டி பூங்கா பதிவர்களின் காமராஜர் பற்றிய சிறந்த அரசியல் பதிவுகளை அடுத்த இதழுக்காகத் தொகுக்க இருக்கிறது.


இது தவிர, 'சென்னை நமது பெருமை', 'சிலிக்கான் சமவெளி சென்னை', மற்றும் 'சென்னையின் பண்பலை வரிசைகள்' போன்ற சென்னையை மையமாகக் கொண்ட கட்டுரைகள் இவ்விதழிற் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் தொடர்பான கட்டுரைகளாக 'மீன் உண்ணலாம்', 'RNA உலகம்', 'கற்றாழையில் இருந்து சர்க்கரை' போன்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. செல்வநாயகியின் அழகான கவிதை இயல்பாக வாழ்க்கையை அணுகுவதைச் சொல்லுகிறது.


இன்றைக்கு ஈழம் சர்வதேசத்தின் கண்முன்னாலேயே பட்டினிச்சாவுக்கு ஆட்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உணவுப்பற்றாக்குறை தலைவிரித்து ஆடுவதாகவும், மக்கள் பட்டினியால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதாகவும் செய்திகள் வருகிற நேரத்தில் பேரினவாத அரசு உணவு இருப்பு பற்றிய அறிக்கையினால் வேடிக்கை காட்டுகிறது. தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடியவனின் இனம் பட்டினியாற் கொல்லப்படும் அவலத்தைப் பத்திரிக்கைகள் மறைக்கின்றன. இவ்விதழில் மூனாவின் கருத்துப்படம் இக்கொடுமையைப் பேசுகிறது.


இதுதவிர நன்கு அறியப்பட்ட பதிவர்களின் பதிவுகள் மட்டுமல்லாது பல புதிய பதிவர்களின் சுவையான படைப்புகளும் இவ்விதழில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விதழ் உங்கள் திரைகளையும் நெஞ்சங்களையும் நிறைக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.


நன்றி.


 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)