|
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் ! |
|
|
|
கோவி.கண்ணன்
|
மண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா ? தத்து(வார்த்தமாக) பொருளில் பார்த்தால் அது ஓரளவுக்கு சரிதான். ஏனென்றால் இங்கே எடுத்துக் கொண்ட பற்றியம் (விடயம் - விசயம்) அப்படி. மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் என்ற தமிழ் இமயத்தை கடுகு அளவுக்கு சுருக்கி அந்த இமயத்தின் நிழலையாவது காட்ட முடியும் என்று நம்புகிறேன்.
****************
பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
- இராமலிங்க அடிகளார் அருளிய அருட்பாவில் ஒரு பாடல்
இதைப்பற்றி மறைமலை அடிகளார், தன் மகள் நீலாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, 'தேகம்' என்ற இடத்தில் 'யாக்கை' என்ற தனித் தமிழ்ச் சொல் இருந்தால் எவ்வளவு சொல் இனிமை இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அந்த ஆர்வமே பின்னாளில் தமிழ் அறிஞர்களுடன் அவர் சேர்ந்து தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்க காரணமாக இருந்தது. இன்றைய நிலையில் 95 விழுக்காட்டு தூய்மையை அடைந்துவிட்டது.
தமிழின் தொன்மையை உலகுக்கு அறிவித்தவர் ஐரோப்பியர் கால்டுவெல் ஐயர், தமிழ் மொழி பற்றினால் சூரிய நாராயண சாஸ்திரி (பிராமனர்) என்ற வைதீக பெயரை துறந்து தனித்தமிழுக்கு வித்திட்டு தமிழ் திருப்பெயர் தாங்கிய பரிதிமார் கலைஞர். உரமிட்டு செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார். அந்த செடியை மரமாக ஆக்கி நமக்கு நிழல் கொடுக்க வைத்தவர் செந்தமிழ் செல்வர் தேவ நேயப் பாவாணர்.
தேவ நேய பெருந்தகை பிறப்பினால் கிறிஸ்துவராக இருந்தாலும் தம் பிள்ளைகளுக்கெல்லாம் தனித்தமிழ் பெயரையே சூட்ட்டினார். தமிழுக்கென்று அகரமுதலி( வேர்சொல் அகராதி)யை அமைக்க தம் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.
மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் என்று சொல்லப்படுவதை மொழியாளர்கள் மறுக்கவே செய்வார்கள். பண்பாடுகளின் உருவகமாகத்தான் மொழிகள் இருக்கிறது. மொழிகளை ஆராய்ந்தாலே முழு உலக வரலாற்றையே கண்டு கொள்ளலாம். தேவ நேயப் பாவாணர் தம் மொழியறிவால் மாந்தன் தோன்றிய இடம் கடல் கொண்ட லொமுரியா எனப்படும் குமரிக்கண்டமே என்றும் உலகின் முதல் மொழி ஆதித் தமிழே என்றும் தக்க சான்றுகளுடம் பல ஆராய்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்..
கால்டுவெல் அவர்கள் திராவிட மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை, அவற்றின் இலக்கண அமைப்புக்கும் வடமொழிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வடமொழிக் கலப்பினாலேயே திராவிட மொழிகள் வடமொழி வழியாக தோன்றியதாக தவறான தகவல்களை இதுகாறும் நம்பி இருந்தோம் என்றும், மற்ற திராவிட மொழிகளைவிட வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்துவிட்டு தமிழ் தூய்மை அடைய முடியும் என்றும் அதற்கான வேர்சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியங்கள் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன என்றும், வடமொழிச் சொற்களில் நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழை வேர் சொல்லாகவும், தனித் தமிழ் சொற்களை அப்படியே கொண்டாதாகவும் இருக்கிறது என்று சொல்லி மேலும் அவர் இந்திய மொழிகளை பிரித்து மேய்ந்து சென்றார். அவருக்கு முன்னோடியான ஐயு போப் வடமொழி இந்தியாவில் தோன்றிய மொழியே அல்ல என்றும் அது கிரேக்கத்தை ஒத்து இருக்கும் ஐரோப்பிய மொழி குழாமை (குடும்பம்) சேர்ந்தது என்று சான்றிச் சென்றார்.
இந்து இரு வெளிநாட்டு மேதைகளின் ஆராய்ச்சியை வைத்துக் கொண்டதுமின்றி, பரிதிமார் கலைஞர் ஒருமுறை 'பெரும்பாலான வடமொழி இலக்கியங்களின் மூலம் தமிழே' என்றும் 'அவை மொழிமாற்றம் செய்தபின் தமிழ் இலக்கியங்கள் பண்டைய காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டது' என்ற பற்றியத்தையும் பிடித்துக் கொண்ட தேவநேயர் தம் தமிழாராய்சியை அதன் அடிப்படையிலேயே துவங்கினார்.
பொதுவாக வளர்ந்த நாகரீகத்திலிருந்து பின்னோக்கி சென்று வரலாற்றை தேடுவது உலக இயல்பு, அதன் அடிப்படையில் வடமொழி இலக்கியங்களை கருத்தில் கொண்டு ஐயு போப்புக்கு முன்பு இருந்த ஆராய்சியாளர்களும், பல இந்திய ஆராய்சியாளர்களும் இந்திய வரலாற்றை வடமொழியுடன் தொடர்ப்பு படுத்து வேதகாலத்திற்கு பின்பட்டவையே என்றும் இந்திய நாகரீகம் என்பது ஆரிய நாகரிகமே என்று சொல்லி வந்தனர்.
கால்டுவெல் அவர்களின் வடமொழி தோற்றம் பற்றிய துணிபுக்கு பிறகு மொழி ஆராய்ச்சிகள் திராவிட மொழிகளை ஆராய்ந்து செலவதால் மட்டுமே இந்திய நாகரிகத்தின் தொன்மையை கண்டு அறிய முடியும் என்று உணர்ந்தனர்.
இந்திய மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு பாவாணர் பல ஆராய்சி நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் அவர் எழுதிய வடமொழி வரலாறு 1 & 2, தமிழ்மொழி வரலாறு 1 & 2 பல உண்மைகளை காட்டுகிறது. அவர் ஆராய்ச்சி எடுத்துக் கொண்ட காலங்கள் தொல்காப்பியத்துக்கும் முந்தியது. ஏறத்தாள தொல்காப்பியருக்கும் முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர் தொல்காப்பிருக்கு ஆசிரியர் அல்ல வென்றும் தக்க சான்றுகளுடன் விலக்கியுள்ளார். மொழியை, பண்பாட்டை ஆராய்வதற்கு தொல்க்காப்பியத்தை சான்றாகக் கொள்ளக் கூடாது ஏனென்றால் தொல்காப்பியம் இலக்கண நூலேயன்றி சொல் அகராதியல்ல என்றார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் வடமொழிக்கு எழுத்தோ, இலக்கணமோ இருந்தது இல்லை என்றும் அப்படி ஒருவேளை எழுத்து இருந்தால் வடமொழியில் இருந்து தோன்றியதாக சொல்லப்பட்ட தமிழுக்கு அதைவிட குறைந்த அளவுக்கு எழுத்துக்கள் இருப்பது கூறுகளே இல்லை. மேலும் தமிழ் இலக்கணம் வடமொழிக்கு பிந்தியதாக இருந்திருந்தால் எழுதும் சொற்றொடர் முறைகள் தலைகீழாக இருப்பதற்கான கூறுகளே (சாத்தியம்) இல்லை என்று நிறுவினார்.
தமிழ் எப்படி திராவிட மொழிகளின் தாய் என்பதை 'திராவிடாத் தாய்' என்ற நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். பெரும்தகையின் துணிவுபடி தமிழர்கள் வடமொழியில் இருந்து பெற்றுக் கொண்டது என எதுவும் இல்லை என்றாலும் அந்த போர்வையில் இழந்தது, மறைந்தது, மறைக்கப்பட்டவை மிக்கவையே என்பது அவரின் வாதம்.
நான் இதுவரை அவருடைய 10 விழுக்காட்டு எழுத்துக்களை மட்டுமே படித்து இருக்கிறேன். தேவ நேயப் பாவாணரின் தமிழ் தொகுப்பு நூல்களைப் தேடிப் பிடித்து படியுங்கள் அதன்பின் பெருமிதப்பின் வியப்பின் எல்லைக்கே செல்வீர்கள், அதன் பிறகு எவரேனும் தமிழ்பற்றி தாழ்வாகவும், தமிழின் குறையென்று எவரேனும் அறியாமையால் சொன்னால் ஒரு 'ஏளன பார்வையை வீசிவிட்டு பதில் சொல்லாமல்' அவர்களை கடந்து செல்வீர்கள். :)
பாவணரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டவை எவர் வேண்டுமானலும் அதிலிருக்கும் கருத்துக்களை வெளியிட முடியும். நானறிந்த தமிழ்யாவும் அவர் ஆக்கி வைத்த நூல்கள் தந்தவையே !
வாழ்க பாவாணர் புகழ் !!!
***********
இந்த இடுகையில் நம் பெருமதிப்புக்குறிய வளவு இராமகி ஐயாவைப் பற்றி நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கிறேன். இணையத்தில் இப்படி ஒரு தமிழ்மேதை ஒருவர் இருந்து கொண்டு 'அபிஷேகம்' போன்ற வடமொழிச் சொற்களுக்கு மூல (அப்பும் இழிதலும்) வேர்சொல்களை தக்க காட்டுகளுடன் (ஆதாரங்கள்) விளக்கியிருப்பதை நினைக்கையில் நெஞ்சம் உவகை கொள்கிறது.
தமிழ்மேதை இராமகி ஐயா அவர்கள் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
அன்புடன்,
கோவி.கண்ணன்
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_23.html
|