|
தொகுப்பாளரின் மேசையிலிருந்து |
|
|
|
பூங்கா ஆசிரியர்குழு
|
வரும் செப்டம்பரில் பூங்கா இரண்டாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது. இப் பயணம் இதுவரை சாத்தியமாகியதற்கு முழுமுதற் காரணம் பதிவர்களாகிய நீங்கள்தான் . வலைப்பதிவு என்பது பொழுது போக்குக்காக ஊதித் தள்ளுகிற இணையப்புகையாக மட்டுமாகவே இருக்கமுடியும் என்று பூங்கா நம்பவில்லை. மாறாக, தமிழ் வாழ்வுக்கு அருகில் முகிழ்க்கும் கலையிலக்கிய வெளிப்பாடாகவும், நிறுவப்பட்ட கருத்துக்களைக் கடந்து செல்ல எடுக்கிற முயற்சியாகவும் பக்கத்திருப்பவர் துன்பம் பார்க்கப்பொறாத ஓர் அறச்சீறலாகவுங்கூட வலைப்பதிவு இருக்கமுடியும் என்று நம்புகிறது. சமூக , பொருளாதார வசதிகளை முன்வைத்து கட்டி எழுப்பப்பட்ட தமிழ் ஊடகவெளி மிகச்சாதாரணமாக, தமிழ்வாழ்வையும் அதன் பிரச்சனைகளையும் பெரிதும் புறக்கணிக்கிற விதத்தில் இருக்கிறது . ஒரு திரைப்பட வெளியீட்டுக்காக வருடம் முழுக்க எழுத்தில் யாகம் வளர்க்கும் ஊடக உலகத்தில் , ஏறக்குறைய, தினமும் அந்நியநாட்டுக்கடற்படையிடம் அல்லற்பட்டு உயிரிழக்கும் தமிழக மீனவர்களைப் பற்றிய செய்தி அலசல்களோ , கட்டுரைகளோ விபரமாக காணக் கிடைப்பதில்லை . இப்படி மக்களின் வாழ்வாதாரமான பிரச்சனைகள் முன்னி று த்தப்படுவதிலும், அது குறித்த துறை சார்ந்த வல்லுனர்களின் விவாதங்களை, அணுகுமுறைகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் ஊடகங்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை .
இஃது எவ்விதம் நிகழ்ந்தது?
சமூகத்தின் பல அடுக்குகளிலும் பிரிவுகளிலும் இருந்து மக்கள் பிரச்சனைகளை எழுப்பும் பலருக்கு ஊடகவெளி அணுக முடியாதிருப்பதும் ஒரு முக்கிய காரணம். இவ்வாறு ஊடங்களால் புறக்கணிக்கப்பட்ட மக்களே நம்மைச் சுற்றி அதிகமாக இருப்பதை உணரலாம். கட்டறு ஊடகம் என்று கருதப்படும் இணையத்திலேகூட, முழுக்க முழுக்க நிறுவனம் சார்ந்த செய்தியமைப்புகளின் செய்திகளையே நாம் தகவல்களாகப் பெறும் அவலம் இருப்பதையும் காணலாம் . இந்த இடத்திலேதான் வலைப்பதிவுக ளும் பதிவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் இப்பணியைச் செய்யமுடியும் என்று பூங்கா நினைக்கிறது. இதுவரை வெளிவந்த பதிவுகளில் காத்திரமானவை என்று கருதத்தக்க பல பதிவுகளை இயன்றவரை பூங்கா தொகுத்து வந்திருக்கிறது . இந்நிலையில் இதன் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வை இவ்வரும் ஆண்டில் பூங்கா முன்னெடுக்க விரும்புகிறது . இதன் முதற்காலடியாக, உலகின் பல பகுதிகளில் இருந்து பூங்காவுக்கான சிறப்புச்செய்தியாளர்களை அங்கீகரிக்க விரும்புகிறோம். இதன்படி சிறப்புச்செய்தியாளராக அமையும் பதிவர்கள் அவர்களின் பகுதி மக்களின் பிரச்சனைகளை / செய்திகளை / கட்டுரைகளை / கலைப் படைப்புகளைப் பூங்காவுக்கு அனுப்ப வேண்டும் ; அல்லது, அவர்களது கூர்மையான நடையில் அதைச் சுருக்கித் தரலாம். நல்ல பதிவுகள் என்று எண்ணுகிற பதிவுகளைப் பூங்காவுக்கு அனுப்பவேண்டும் . குறிப்பாக , பூங்கா என்பதை அவர்களது மக்களது , வாழிடத்தினது களமாகக் கையாள அவர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதவேண்டும். இந்த ஊடகவெளியை எப்படியும் அம்மக்கள் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முனையும் அரசியற்கூர்மை இருக்கவேண்டும் .
இத்தோடு சில மாற்றங்களோடும் வருமாண்டிலே பூங்கா வெளியாகும்.
.
|