|
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில் |
|
|
|
ஆசாத்
|
"ஏய்! என்னை என்ன பொட்டு வச்சுக்கினு பொங்கல் சாப்புர்ரவன்னு நெனச்சியா. பழைய போலீஸ் ரெக்கார்ட எடுத்துப் பாரு. ஆதிடா! காசி மேடு ஆதி! சொர்ருவிடுவேன்" இதுதான் அவர் (சுமன்) ரஜினியிடம் வெடிக்கின்ற அதிகபட்ச வில்லத்தனம். ரஜினிக்கு இருக்கும் ரசிக அங்கீகாரங்களுக்கு முன் இந்த அதிகபட்ச வில்லத்தனம் குழந்தைத்தனமாகத் தோன்றுகிறது. இத்தனை அங்கீகாரம் ரஜினிக்குக் கிடைப்பதற்கு முன்பே அவருக்கு திரைப்படங்களில் கிடைத்த சில வில்லன்களை நினைத்துஒ ஒஆர்க்கத் தோன்ருகிறது.
கராத்தே மணி (அன்புக்கு நான் அடிமை):
என்டர் த ட்ராகனின் பாதிப்பில் அங்கங்கே இளைஞர்கள் கராத்தே மோகத்தில் இருந்த நேரம். அந்நேரத்தில் தமிழகத்தில் காவல்துறைக்கு தற்காப்புப் பயிற்சிகள் அளித்த கராத்தே மணி என்னும் ஆர்.வி.தமிழ்மணி அவர்களை தேவர் ஃபிலிம்சார் திரைக்கு அழைத்து வந்தார்கள். பல பரிசுகள், கராத்தேயில் இந்திய அளவில் சாதனைகள், சர்வதேச அளவில் கராத்தே வீரர்கள் பட்டியலில் இடம் இப்படியாக தற்காப்புக் கலையில் பெயர்பெற்ற கராத்தே மணி திரையில் வில்லனாகத் தோன்றினார்.
வழமையான கதாநாயகன் - வில்லன் தன்மையிலிருந்து மாறுபட்ட அமைப்பில் பல தமிழ்படங்கள் வெளிவரத் துவங்கிட்ட (1980) சமயத்திலும் முன்னணிக் கதாநாயகர்களின் படங்கள் ஒன்றிரண்டைத் தவிர மற்றையவை ஒரு கனமான வில்லன் கதையமைப்பில் கொண்டுதான் வெளிவந்தன. சும்மாவேனும் வந்து விழிகளை உருட்டி, மாயாண்டிக்குக் கட்டளை இட்டு, பண்ணையில் வேலை செய்யும் பெண்களை மானபங்கப்படுத்தி, சிகப்பு விளக்கொளியில் வெடிச் சிரிப்பு சிரித்து எல்லா வில்லத்தனங்களையும் செய்து மனதில் நிற்காமல் போகும் வில்லன்களைப்போலத்தான் கராத்தே மணியும் தோன்றினார். ஆனால், அவரது சண்டைக்கலை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
ரஜினி - கராத்தே மணி மோதூம் அந்த கடைசி சண்டைக் காட்சியானது ரஜினியின் சண்டைக் காட்சிகளுள் முக்கியமானவற்றைப் பட்டியலிட்டால் அதில் இடம்பெறக்கூடியது.
இந்த தனித்தன்மையால் கராத்தே மணி என்னை ஈர்த்திருக்கிறார்.
சிரஞ்சீவி (ராணுவ வீரன்):
எஸ்.பி.முத்துராமன் - இளையராஜா - பாபு கூட்டணி எஸ்.பி.முத்துராமன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - பாபு என்றானதற்கு முக்கியமான காரணம் இந்தப் படம் சத்யா மூவீஸ் தயாரிப்பு என்று சொல்லலாம். இந்தப் படத்தில் சிரஞ்சீவி வில்லனாக நடித்தார்.
தீவிரவாதி, கான்டாக்ட் லென்ஸால் விழிகளின் நிறத்தை மாற்றி, ஜீன்ஸ் பரட்டைத் தலை, ஸ்போர்ட்ஸ் ஷூ என அறிவுஜீவித்தனம் கலந்த வில்லன் அப்போதைய (1981) தமிழ்த்திரைக்குப் புதிது. சண்டைக்காட்சிகள், வசனங்கள், கதையமைப்பு என எல்லாவற்றிலும் வில்லனுக்கு கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் இருந்தது. இது சத்யா மூவீஸின் பாணியோ என்னும் எண்ணமும் தோன்றுகிறது.
தேஜா டிவியில் பளப்பளா சட்டையுடன் நடனமாடும் மெகாஸ்டார் சிரஞ்சீவிகாரு ராணுவ வீரனில் வில்லனாக என்னை ஈர்த்திருக்கிறார்.
செந்தாமரை (மூன்று முகம்):
இன்னும் ஒரு சத்யா மூவீஸ், இன்னும் ஒரு வில்லன். ரஜினியை கடப்பாரையால் முதுகில் குத்திக் கொல்லும்போது முகத்தில் இவர் காட்டிய குரூரமும் வெற்றியும் கலந்த பாவம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அது என்டர் த ட்ராகனில் (இந்தப் பதிவில் இரண்டாம் முறை இதனை இழுக்கிறேன்) ஜிம் கெல்லியை இரும்புக் கரத்தால் அறைந்து கொன்றதும் கையுறையக் கழற்றி ஒரு குரூரமும் வெற்றியும் கலந்த பாவத்தை வில்லன் காட்டுவதை ஒத்தது.
அலெக்ஸ் பாண்டியனுக்கு எதிரான வில்லனாக மட்டுமே செந்தாமரை சிறப்பாகச் செய்தார் என்பது எனது பார்வை. அதே படத்தில் வருகின்ற மற்ற ரஜினி பாத்திரங்களுடன் செந்தாமரையின் வில்லன் பாத்திரம் வழமையான சவசவதான். ஒருவேளை அலெக்ஸ் பாண்டியன் பாத்திரப்படைப்பின் கனம் வில்லனின் பாத்திரத்தையும் கனமாக அமைக்கத் தூண்டியிருக்கலாம்.
மனிதர் ஒப்பனை செய்துகொண்டுதான் கேமராவின் நிற்கிறாரா இல்லை அப்படியே வந்துவிடுகிறாரா என்னும் நினைப்பை எப்போதும் உண்டாக்கும் செந்தாமரை மூன்று முகத்தில் வில்லனாக என்னை ஈர்த்திருக்கிறார்.
ஜெய்சங்கர் (முரட்டுக் காளை):
நன்றாக கதையை ஆராய்ந்தால் முரட்டுக்காளையில் ஜெய்சங்கர் வில்லனே கிடையாது எனலாம். 'போயா விட்டுட்டுப் போலாம்' என்பதாகவே பாத்திரத்தின் அணுகுமுறை இருக்கும். கதாநாயகியை மானபங்கப்படுத்த முயற்சி செய்யும் நடிப்பில் கூட அவள் வேறொரு காரணத்தைச் சொன்னதும் அமைதியாக விட்டு விலகிச் செல்லும்படியான காட்சியமைப்பு இருக்கும். சுருளிராஜனின் பாத்திரப்படைப்பின் தூண்டுதலாலேயே பண்ணையார் தவறு செய்வதாகக் காண்பித்து கொஞ்சம் கொஞ்சமாக ஜெய்சங்கரை வில்லனாக மாற்றுவார்கள், கதையில்.
கதாநாயக நடிகர் வில்லனாக நடிக்க வந்ததால் பரபரப்பாக பேசப்பட்டது. சண்டைக் காட்சிகளை அமைத்தது ஏ.வொ.எம்மின் அப்போதைய ஆஸ்தான சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம். இரண்டு அடிகள் ரஜினி அடித்தால், அதே பாணியில் இரண்டி அடிகளை ஜெய் அடிப்பார். கதாநாயகன், வில்லன் இருவருக்கும் கதையமைப்பில் சமபங்கு முக்கியத்துவம் இருந்தது.
நாயகனாக இருந்து அப்படியே நகர்ந்து ஓய்வெடுத்துக்கொள்ளாமல், வில்லனாக மறுஅவதாரம் எடுத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குணச்சித்திரப் பாத்திரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஜெய், முரட்டுக்காளையில் என்னை ஈர்த்திருக்கிறார்.
(அதே ஜெய் பாயும் புலியில் ரஜினியுடன் ஷாவோலின் பாணியில் வில்லனாக குருகுலம் இத்தியாதி இத்தியாதிகளில் நம்மை வதைத்தது...வேணாம் சார் இப்ப).
ரகுவரன் (பாட்ஷா):
ஹம் படத்தின் உல்டாதான் பாட்ஷா என்றால், டேனி டென்சொங்கப்பாதான் ரகுவரன். வடக்கே டேனி, இங்கே ரகுவரன். நெஞ்சம் மறப்பதில்லையில் ஜென்மம் ஜென்மமாகத் தொடரும் நம்பியாரோ என நினைக்கும்படி இரண்டாம் பாதியில் ஒப்பனை. துறைமுக தாதாவாக முதல் பாதியில். இரண்டிலும் அற்புதமான நடிப்பு.
சிறையிலிருந்து தப்பிய செய்தி அறிவிக்கபட்ட பின் எதிர்பார்த்த திருப்பங்களையே திரைக்கதை பெற்றிருந்தாலும், கடைசி நேர வசனங்களில் இழையோடும் எள்ளல் கலந்த வில்லத்தனம், ரகுவரன் பாணி அரைக்குரல் - தலைசாய்ப்பு - கண்ணசைப்பு இவற்றால் ரகுவரன், பாட்ஷாவில் என்னை ஈர்த்திருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் (படையப்பா):
தமிழ்த்திரையில் வில்லி என்றால் அது மாமியாராக இருக்கவேண்டும் (அடிமைப் பெண் திரைப்படம் விதிவிலக்கு). அப்படியல்லாமல் கதாநாயகனுக்கு இணையான பாத்திரபடைப்பென்ன, நடிப்பென்ன, வசனங்களென்ன? ரஜினி கதாபாத்திரத்தின் வெற்றியை உயர்த்திக் காட்டியது ரம்யா கிருஷ்ணனின் பாத்திரப்படைப்பு என்றால் அது மிகையானதன்று. கதையின் துவக்கத்தில் பிடிவாதக்காரப் பெண் என்பதான அமைப்பே கதையில் இருந்தாலும், இரண்டாம் பாதியில் திரையில் தோன்றி ரஜினியின் பாணிகளைத் தானும் செய்து காட்டி ரஜினியை எரிச்சலூட்டி வெல்ல முயற்சி செய்யும் பாத்திரமாக, அவர் வந்ததும்தான் கதையே சூடு பிடிக்கும் அமைப்பு.
நீலாம்பரியாக படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் என்னை ஈர்த்திருக்கிறார்.
சுமன் (சிவாஜி):
மேலே சொல்லப்பட்ட வில்லன் வில்லி கதாபாத்திரங்கள் உண்டாக்கிய தாக்கத்தை சுமன் உண்டாக்கவில்லை. கதையமைப்பிலும் வில்லனுக்கு முக்கியத்துவம் இல்லாமற்போனது, கதாநாயகனுடன் நேருக்கு நேர் விவாதிக்கும் காட்சிகளிலும் வசனங்களில் தீப்பொறி பறக்கவில்லை.
'போட்டுத்தள்ளிடவா'
'கிட்டத்தட்ட' என அடியாள்களை அனுப்பியதும் படத்தத இரண்டாவது முறையாகப் பார்த்தாலும் அரங்கத்தில் பரபரப்பு உண்டாக வேண்டும். அதல்லாமல், நகைச்சுவையாகத் தொடரும் கனல் கண்ணனின் வசனங்கள் அந்தக் காட்சியமைப்பிற்கு என்ன வேகமும் உணர்வும் தேவையோ அதனைத் தரவில்லை.
நகைச்சுவை + சண்டைக் காட்சிகள் என தனி பாணியில் சென்றுகொண்டிருக்கும் கனல் கண்ணனைக் குறை கூறவில்லை. அவரது பாணி சண்டையை வேறு எங்காவது நகைச்சுவைக்காக செருகியிருக்கலாமே தவிர, தீவிரமாக வில்லன் தனது பழிவாங்கும் படலத்தைத் துவக்கும் காட்சியில் அவரை விட்டது வில்லனின் பயங்கரத்தைக் குறைத்துவிட்டது.
தொடரும் எல்லா காட்சியமைப்புகளிலும் அப்படித்தான்.
துவக்கத்தில் சொன்ன, "ஆதிடா! காசிமேடு ஆதி! சொர்ருவிடுவேன்" வசனத்தை சுமனாலும் இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும், ஷங்கராலும் இன்னும் நன்றாக காட்சியை அமைத்திருக்க முடியும், சுஜாதாவாலும் இன்னும் இரண்டு மூன்று வரிகளைச் சேர்த்து காட்சியின் உக்கிரத்தை அதிகப்படுத்தியிருக்க முடியும். முதல் காட்சியிலேயே 'ம்' என்ற ஒரு கர்ஜனையை வைத்து அரங்கத்தை அதிர வைத்த கூட்டணியால் இதனசி செய்திருக்க முடியாதா? முடிந்திருக்கும்.
எப்படியோ, ஆதியாக சிவாஜியில் சுமன் என்னைக் கொஞ்சமும் ஈர்க்கவில்லை.
அன்புடன்
ஆசாத்
http://ennam.blogspot.com/2007/08/blog-post_5839.html
|