ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையின் முழுமையான வடிவம்
கலகம் பிறந்தால்தான் நியாயம் கிடைக்கும் என்பார்கள். 'ஓர வஞ்சனை' உல்லாசமாக உப்பரிகையில் ஏறி அமர்ந்து கொண்டு மற்றவர்களை உதாசீனப் படுத்தும்போது கலகத்தை யாரும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டாம். அது தானே முளைக்கும். இந்தியக் கிரிக்கட்டில் அதுதான் சம்பவித்திருக்கிறது.
இந்தியாவில் எத்தனையோ திறமையான விளயாட்டு வீரர்கள் ஆதரிக்க அனுசரணையாளர்கள் (ஸ்பான்சர்ஸ்)இல்லாமல் மொட்டிலேயே கருகி இருக்கிறார்கள் அவர்களை நிர்வகிக்கும் விளையாட்டு சங்கங்களும் அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் கிரிக்கட் மாத்திரம் இந்த விதிக்குவிலக்கு.
என்றாலும் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் உல்லாசமாக இருந்தார்களே தவிர அடிமட்டத்தில் இருந்தவர்கள் ஆடிப்போய்த்தான் கிடந்தார்கள். இந்தியாவின் தலை சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரங்காச்சாரியார் நாற்பதுகளில் லாலா அமர்நாத் தலைமையில் ஆஸ்த்ரேலியா சென்றபோது அவருக்கு ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கப் படவில்லை. அது மட்டுமல்ல காவல்துறை அதிகாரியான அவர் சம்பளமில்லா விடுப்பு பெற மேற்கொண்ட ஜகஜ்ஜால வித்தைகளை என்னோடு தமிழ் வர்ணனையில் ஈடு பட்டிருந்த காலங்களில், வாய் நிறைய வெற்றிலையை குதப்பிக் கொண்டே கதை கதையாகச் சொல்வார்.
அவர் கதை மட்டுமில்லை சமீப காலம் வரை ரஞ்சி விருதுப் போட்டிகளில் கலந்து கொண்ட பல வீரர்களின் நிலை இதுவாகத்தான் இருந்தது. ஆனால் கலகம் பிறந்த பின் நிலை என்ன ? போட்டியின் ஒவ்வொரு நாளைக்கும் 25,000 பெற்றவர்கள் இனி 35,000 பெறுவார்கள். இது போக தினசரிப் படி 4,000 ரூபாயிலிருந்து 10,000 ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது. முன்னாள் வீரர்களுக்கு, சில நிபந்தனைகளுக்குட்பட்டு, மாதா மாதம் ஓய்வு ஊதியம் 25,000 வீடு தேடி வருகிறது.
ஒருகாலத்தில், ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணியை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்றால் அந்நியச் செலாவணி அனுமதிக்காக டெல்லியில் நிதி அமைச்சகத்தின் முன் கையேந்தி காவல் கிடக்க வேண்டிவந்தது. ஆனால் தொலைகாட்சி செய்த மாயம், காசு கோடிகணக்கில் வந்து கல்லாப் பெட்டியை நிறைக்க, "ஆறெல்லாம் பாலாக ஓடுகிறது ஐயா குடி, அம்மா குடி" என்கிற கதைதான். இதனாலெல்லாம் கிரிக்கட் வீரர்களுக்கு ஆதாயமா என்று கேட்டால் மேல்மட்டத்தில் ஆம். கீழ் மட்டத்தில் இல்லை என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த பதில்.
கிரிக்கட் வாரியத்தின் காசு எவ்வளவு தூரம் வீண் விரயமாகியது என்பதற்கு ஓர் உதாரணம். 1999 உலகக் கோப்பையின்போது நிகர லாபம் பதினாறு கோடி, இதில் கிரிக்கட் தொடர்பாகச் செலவழிக்கப்பட்ட தொகை 17 லட்சம். அதாவது கிரிக்கட்டால் நூறு ரூபாய் வருமானம் வர கிரிக்கட்டுக்காக செலவழிக்கப்பட்ட தொகை வெறும் ஒரு ரூபாய் பத்து பைசா. அதே சமயம் அந்த ஆண்டின் நிர்வாகச் செலவு எட்டரைக் கோடி ரூபாய் அதாவது தோட்டத்தில் பாதி கிணறு..அதென்ன அவ்வளவு செலவு ?
வேறொன்றுமில்லை. எத்தனையோ கமிட்டிகள் இருக்கின்றன. அவை அத்தனையும் அவ்வப்போது ஏதாவது ஒரு நகரிலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும். நாளை கமிட்டி என்றால் இன்றே வந்து விடுவார்கள். அடுத்த நாளோ அல்லது அதற்கடுத்த நாளோதான் புறப்படுவார்கள். விமானச்சீட்டு, அறை வாடகை, சாப்பாடு இத்தியாதி - இத்தியாதி செலவு எட்டரைக் கோடியோடு நின்றதே என்பதுதான் இதிலுள்ள ஆச்சரியம் அதே சமயம் ரஞ்சி வீரர்கள் முன்பதிவு செய்யப்படாத ரயில்களில் இராத்தூக்கம் முழித்து இலக்கை அடைவார்கள்.
பிறகு ஒரு காலம் வந்தது. தொலைக்காட்சிகள் கோடிகளை கொண்டுவந்து கொட்டின. வாரியத்தின் கணக்கு வழக்குகள் ஸ்ரீ மான் பொது ஜனத்திடம் காட்டப் படுவதில்லை.வாரியத்துக்கு வருமான வரி கிடையாது. மொத்தத்தில் கிரிக்கட் வாரியம் ஒரு பணம் காய்ச்சி மரம். எனவே அதில் ஏறி தொற்றிக் கொள்ள நடந்த ஆதிக்கப் போட்டிகள் அநாகரீகத்தின் உச்சம்.அதனால் என்னாயிற்று ? முன்னால் கிரிக்கட் வீரர்கள் தங்கள் அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தத் தக்க வண்ணம் வாரியத்தின் ஆட்சி அதிகாரங்களில் அமர விடாமல் ஓரம் கட்டப்பட்டார்கள். கபில் தேவ் மட்டும்தான் இந்திய கிரிக்கட் பயிற்சி கழகத்தின் தலைவராக இருந்தார். இந்த வாரத்தோடு அதுவும் காலி. ஏன் புதிதாகத் துவங்கப் பட்டுள்ள இந்தியன் கிரிக்கட் லீகுக்கு அவர்தான் தலைவர். இளம் வீரர்களுக்கு வலையை விரித்து விட்டு மிதப்புக் கட்டையில் கண்ணுமாக அமர்ந்திருப்பவர். கிரிக்கட் வாரியத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவர்.
இந்திய கிரிக்கட் லீகைப் (ICL) அறிந்து கொள்வதற்கு முன் நாம் சற்றுப் பின்னோக்கி பயணிக்க வேண்டும். ஆஸ்த்ரேலிய வர்த்த உலகில், Channel 9 தொலைக்காட்சி அதிபர் கெர்ரி பெக்கர் என்றால் பலருக்கு சிம்ம சொப்பனம். இவர் ஆஸ்த்ரேலியாவில் நடக்கும் கிரிக்கட் விளயாட்டுகளின் ஒளிபரப்பு உரிமையை ஆஸ். வாரியத்திடம் கோரினார். கிடைக்கவில்லை - நடக்கவில்லை. விட்டாரா பெக்கர்?. அன்று உலகமெங்கும் கிரிக்கட் வீரர்களின் நிலை 'பேரு பெத்த பேரு தாக நீலு லேது' என்கிற கதைதான். எனவே, அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகைகளை அள்ளிக் கொடுத்து ஒவ்வொருவராகப் பிடித்து தன் பெட்டிக்குள் போட்டார்
சிவப்புப் பந்தை வெள்ளைப் பந்தாக மாற்றினார். சம்பிரதாயமான வெள்ளை உடைகளை வண்ண உடைகளாக மாற்றினார். இதுவரை கேள்விப்பட்டிராத வகையில் ஒளி வெள்ளத்தில் இரவு பகல் ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். உலகிலுள்ள அத்தனை வாரியங்களும் குதியோ குதியென்று குதித்தன. அதனால பெக்கருக்கு ஒன்றும் நட்டமில்லை. வாரியங்கள் தான் நாட்டுக்கு ஆட வேண்டிய நல்ல வீரர்கள் பெக்கரை நோக்கிப் படை எடுக்க, பல நாடு அணிகள் எலும்பும் தோலுமாகக் காடசியளித்தன. அவர்கள் சந்தித்த தோல்விகள் மக்களைக் கொந்தளிக்க வைத்தன. கடைசியில் வாரியங்களே கீழிறங்கி வரவேண்டிய கதிகேடு ஏற்பட்டது. நிற்க.........
கிரிக்கட் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதில் இன்று உலகளாவிய நிலையில் பல முன்னணி நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது அரையங்குலமும் கேட்டுப் பெறாத கால் அங்குலமும் விட்டுக்கொடுக்காத கழுத்தறுக்கும் போட்டி. Sony, ESPN-Star,Neo Sports, Ten Sports, Zee TV என்று இந்தப் பட்டியல் நீளுகிறது. இந்திய வாரியம் இந்தியாவில் நடைபெறும் போட்டி ஆட்டங்களுக்கான உரிமம் வழங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்றது.
இதில் பல குளறுபடிகள் ஏற்பட்டு, பல மரபுகளும் காற்றில் பறக்க விடப் பட்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்து, வழக்கு வம்புகள் என்றாகி ZEE Tvக்கு கிடைக்க வேண்டிய உரிமம் கிடைக்கவில்லை. வெகுண்டெழுந்தது அந்த நிறுவனம். இந்திய கிரிக்கட் வாரியத்துக்கு போட்டி அமைப்பல்ல என்று கூறிக் கொண்டாலும் போட்டி அமைப்பு போலவே அது உருவாகியுள்ளது. மிகப் பொருத்தமாக அதன் தலைமைப் பதவியை கபில் தேவிடம் துக்கிக் கொடுத்தார்கள். அவருக்குத் தோள் கொடுக்க முன்னாள் இந்திய விக்கட் கீப்பரும், சமீபகாலம் வரை இந்திய அணித் தேர்வுக் குழுவுக்கு தலைவராக இருந்தவருமான கிரண் மோரே, முன்னாள் சுழற்பந்து மாயாவி எர்ரபள்ளி பிரசன்னா, முன்னாள் ஆல்-ரவுண்டர் மதன் லால் ஆகியோர் முன் வந்துள்ளனர்.
இவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வீரர்களைச் சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர். மே.இ.தீவுகள் அணியின் தலைவனாக சமீப காலம் வரை இருந்த பிரயன் லாரா, தென்னாப்பிரிக்காவின் "தோனி" லான்ஸ் குரூஸ்னர், பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் இன்ஸமாமுல் ஹக், முகம்மது யூசுப், அப்துல் ரஸ்ஸாக், ஃபர்ஹத் ஆகீயோரும் இந்தியாவில் முன்னாள் இந்நாள் இளம் வீரர்கள் 45 பேரும் இதில் தங்களை இணைத்துள்ளனர்.
லாராவுக்கு மாத்திரம் சம்பளம் எண்பது லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது . ஏனைய வெளிநாட்டு வீரர்களுக்கும் ஏறக்குறைய அவ்வளவு சம்பளம் இருக்கும். இந்திய வீரர்களுக்கு அவர்களது தகமை - திறமைக்கேற்ப வருடத்துக்கு 20 அல்லது 30 லட்ச ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோக அவர்கள் கலந்து கொள்ளும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் Match-fee ஒவ்வொரு ஆட்டக் காரருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் என்கிற வகையில் வழங்கப்படவிருக்கிறது. இதில் ஒரு சிலர் இந்திய அணியில் ஆடி இருக்கிறார்கள். ஒரு சராசரி இந்தியக் கிரிக்கட் வீரர் மூன்று ஆண்டுகளில் ஒரு கோடிக்கு அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயம்.
மேலும் இவர்களுக்கு அதை விட மேலான வகையில் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பாக இந்திய அணியில் இடம் கிடக்குமா அப்படியே கிடத்தாலும் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதெல்லாம் விடை கிடைக்காத கேள்விகள். அத்துடன்,இந்தியக் கிரிக்கட்டில் உங்களுக்கு என்ன தெரியும் என்பதைவிட யாரைத் தெரியும் என்பது முக்கியம். சில இளம் வீரர்களை இந்திய அணியில் சேர்த்து வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அவர் அங்கு ஓர் ஆட்டத்தில் கூட கலந்து கொண்டிருந்திருக்கமாட்டார். ஆனால் இந்தியா வந்ததும் தூக்கி விடுவார்கள். பல வீரர்கள் ஒன்றிரண்டில் சரியாக விளையாடி இருக்க மாட்டார்கள். அவ்வளவுதான் அவர் காலி.
ஆனால் அதே சமயம் பாருங்கள் அகர்கர் தொடர்ந்து சரியாக விளையாடுவதில்லை அவருக்கு தொடர்ந்து சந்தர்ப்பம். அது எதற்கு, 2003 உலகக் கோப்பை போட்டி ஆட்டங்களுக்கு அகர்கரும், 'வெண்ணை விரல்' பார்திவ் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்படிருந்தனர். அவர்கள் எந்த விளையாட்டிலும் விளையாடவுமில்லை ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடவில்லை. கிடைத்த சம்பளமோ சுளையாக தலா 92 லட்ச ரூபாய்.
இத்தகைய ஓரவஞ்சனைகள், பல மாநில சங்கங்களில் மட்டுமல்ல வாரியத்துக்குள்ளேயே பல்வேறு கோஷ்டிகள் - பூசல்கள். இதனாலேயே ஒருநாள் கிரிக்கட் வாரியம் வெடித்துச் சிதறும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியாக இந்தியன் கிரிக்கட் லீக் தோன்றியிருப்பது எதிர்பாராதது. எங்கள் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால தாராளமாகச் சென்று ஆடலாம் என்கிறார் கபில். கிரிக்கட் வாரியமோ அங்கு போய்ச் சேர்ந்தீர்களோ தொலைந்தீர்கள். பெற்றுவரும் - எதிர்காலத்தில் பெறப்போகும் அத்தனை சலுகைகளையும் இழக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது
கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்த கதையாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள எந்த மைதானத்தையும் தர மாட்டோம் என்று பூச்சாண்டி காட்டுகிறது. வாரியம்.ஆனால் அரசியலில் எதிரியும் கிரிக்கட் வாரியத்தின் தலைமைப் பதவியில் ஒரு கண் வைத்திருப்பவருமான ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே மைதானங்களை இந்திய கிரிக்கட் லீக் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் போவதாக வைத்திருக்கிறார் ஓர் ஆப்பு - அசைக்க முடியாத ஆப்பு
அதைவிட, பல நகரங்களிலுள்ள நகரசபை மற்றும் கல்லூரிகளின் விளையாட்டு மைதானங்கள் ஏனோதானோ என்கிற நிலையில்தான் உள்ளன. அவற்றை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தித் தருவதாகக் கூறி அவற்றை வளைத்துப் போட இந்தியன் கிரிக்கட் லீக் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
எப்படியோ ஆதிக்கப் போட்டி ஒரு சுவையான கட்டத்தை எட்டியுள்ளது. மாற்றத்தை விரும்பாதவர்கள் இந்தப் புதிய வரவை எதிர்க்கின்றனர். மாற்றங்கள் மூலம் எப்போதும் நன்மையே விளையும் என்று எண்ணுபவர்கள் இதை வரவேற்கிறார்கள். இதில் யார் நிற்பார்கள் - நிலைப்பார்கள் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி.
|