தலைநகர் தில்லிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு, என்னத்தச் சொல்ல நான் இன்னும் இந்தச் சூழ்நிலைக்கு முழுசா மாறல. இதுல எனக்கு பெருசா வருத்தமில்லை. ரொம்பவே சந்தோசம்னு வேணுன்னா சொல்லிக்கலாம். தனியா ஒரு பெண் இங்கு வந்து குப்பகொட்றது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு தெரிஞ்சும், கிடைச்ச வாய்ப்பை நழுவவிட மனசில்லாம, 'தில்லியில் இல்லாத தமிழர்களா'ன்னு நினைச்சுதான் இங்கன வந்தேன். வந்தப்புறம்தான் தெரிஞ்சது, தலைநகரத் தமிழர்கள் எந்த அளவுக்கு உதவியா(?) இருக்காங்கன்னு.. ஏறத்தாழ ஒரு வருஷம் தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை..
சரி, இப்ப தில்லித் தமிழர்களின் தமிழ்மொழிப் பற்றை மட்டும் இங்க அலசுவோம்.
பஸ்சுல போறப்போ இறங்க வேண்டிய இடம் தெரியாம, தமிழர்னு தெரிஞ்சு உதவி கேட்டா, பதில் ஒன்னு ஆங்கிலத்துல வரும் இல்லைன்னா இந்தியில சொல்லுவாங்க.... நமக்கு வர்ற ஆத்திரத்துல நல்லா நாலு போடலாமுன்னு தோணும். தாய்மையும் ஊர்பாசம் ஒன்னா தலைதூக்கி தொலையட்டும்னு விட்டுறச் சொல்லும். ஆனா என் பொண்ணு இப்படியான சந்தர்ப்பங்கள்ள தமிழ்ல எதாவது விவகாரமா திட்னப்புறம் அந்தபக்கம் reaction தமிழ்ல வரும்.
நம்மள மாதிரி புதுசா இறக்குமதி ஆகறவங்கள ஏளனமா பார்க்கிறதும்,முகத்தை திருப்பிக்கறதும் இங்க ரொம்ப சகஜம். நம்மை தெரியாவங்கதான் இப்படின்னா, கல்லூரியில வேலை செய்யிற சகதமிழர்கள் அதைவிட ஒரு படி மேலே, "ஐயோ எதுக்கு இங்க எல்லாம் வந்தீங்க.இங்க adjust பன்றது ரொம்ப கஷ்டம்.. அதுவும் நம்ம ஊர்ல வளர்ந்து பொண்ணுக இந்த cultureக்கு ஒத்து வரமாட்டாங்க."இங்க இருக்குற பொண்ணுக எல்லாம் ரொம்ப modern and stylish. கோயமுத்தூர்ல இருந்துட்டு இங்க எப்படி?...(கோவைய இவங்க பார்த்திருக்கக் கூட வாய்ப்பில்லை) எதுக்கு வீணா ரிஸ்க் எடுக்குறே, வேண்டாம்..... பொண்ண இங்க கூட்டீட்டு வரவேண்டாம்னு" ஒரே brain washing.. இந்த CBSE Syllabus படிக்கிறதும் கஷ்டம்.. பேசாம உங்க ஊரிலேயே எதாவது ஹாஸ்டலில் விட்டுறுன்னு" ஆளாளுக்கு advice வேறு.. எதோ நம்ம மேல ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி..
இதையெல்லாம் என் பெண்ணிடம் சொல்லப்போக அவளும் முதல்ல பயந்துட்டா!.. அனால் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே அவள் சொன்னது எனக்கு வியப்பா இருந்துச்சு.."என்னம்மா எந்த subjectம் லேயும் யாருக்கும் basics கூட தெரியவில்லை.. இதுக்கு போயி நீ அந்த அலட்டு அலட்டுனே"., எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இத்தனைக்கும் அந்த பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு,நம்ம ஊரின் கல்வித்தரம் பத்தி பெருமையா உணர்ந்த தருணம் அது.
இந்தப் பதிவ எழுத ஆரம்பிச்ச பின் நடந்த Intresting matter ஒன்ணு.. என் பொண்ணு வகுப்பில ஒரு தமிழ்ப் பெண்... இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்.. school prayer ல ஒவ்வொரு வாரமும், ஒரு வகுப்பு பிரார்த்தனை பாடல் பாடவேண்டும்.. இந்த 'நலம் விரும்பி' யாருக்கும் தெரியாமல் வகுப்பு ஆசிரியரிடம் போய் இன்றைக்கு, என் பெண்ணோட பேர் சொல்லி , 'இவ இன்னைக்கு Prayer Song பாடுவான்னு' சொல்ல, அதையும் அறிவிச்சுட்டாங்க. அந்த நலம் விரும்பியும் சக மாணவிகளும் சேர்ந்து இவ முகம் போற போக்க பார்த்து சிரிச்சுட்டு இருந்திருக்காங்க.. இவ உடனே சமாளிச்சுட்டு, நாங்க கோவை நிறுவணத்துல எப்போதும் பாடற பாட்டு நினைவுக்க வர மேடையேறி பாடி முடிசுட்டா.. அந்த பாட்டு இதோ
''அன்பே தெய்வம்
அறிவே தெய்வம்
ஆனந்தமே தெய்வம்
பண்பே தெய்வம்
பரிவே தெய்வம்
பணியே நம் தெய்வம்
நற் பணியே நம் தெய்வம்''
இதுல இரண்டு வரிகள் மறந்துட்டாலும் ஒரு வழியா பாடி முடிச்சுட்டா. இதுல என்னனா, ஒவ்வொரு வரியும் பாடி முடிச்ச பின்.. மாணவர்களையும் ஆசிரியர்களையும் சேர்ந்து பாடச் சொல்லி இருக்கா..இதற்கு முடிந்த அளவுக்கு ஆங்கில விளக்கமும் கொடுத்துட்டு வந்துட்டா,
நம்ம நலம் விரும்பி மூச்சு விடலை அதுக்கு அப்புறம்..
மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவங்க பெரும்பாலும் அவங்க மொழியிலேயே பேசுறாங்க... ஆனா நம்ம தமிழ் மக்கள் தான் பந்தா.. இங்க இருக்கிற "தமிழ்த்தாயெல்லாம்" அவங்க குழந்தைகள் இந்தி சரியா படிக்கலைன்னு தவிக்குற தவிப்பிருக்கே...அவங்களை பார்த்தா ஹிந்தித்தாய் ஆனந்தக்கண்ணீர் விட்டு கேவிக்கேவி அழுவா. அத்தனை சுவாரசியமான காட்சி அது....அதே குழந்தைகளுக்கு நம்ம தாய்மொழியான தமிழ் எழுத படிக்க வரலைன்னு இவங்க வருத்தப்படாதப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கு.
எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழிக் கல்வியென்பது அவர்களது வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதுனு உளவியல் வல்லுனர்களினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கு. அனா இங்க தாய் மொழில பேசறதே கஷ்டம்னு நினைக்கறவங்க கிட்டே எங்க போய் தாய் மொழிய படிக்க சொல்றது. இதுல குழந்தைகளை சொல்லி தப்பு இல்லை.. வேறு வழி இல்லை அவர்கள் பள்ளியில் இந்தியில தான் பேசனும்..அனால் குறைந்தபட்சம் வீட்ல தமிழில் பேசினா அவர்களுக்கும் ஒரு மொழிப்பற்று வரும்..தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது (அல்லது பார்ப்பதாகச் சொல்வது) கூட கேவலம் என்று நினைப்பவர்கள் இக்குழந்தைகள்..
ஓரு முறை எய்ட்ஸ் விழிப்புணர்வில மதத் தலைவர்களை ஈடுபடுத்துற ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொலைபேசினேன்.. அந்தப் பக்கம் இருந்த பெண்.." are you a tamilian?" னு கேட்டா...நான் எப்படி கண்டுகண்டுபடிச்சீங்கன்னு கேட்டதற்கு.."from your pronounciation" என்றார்.. தமிழர்கள் பேசும் ஆங்கிலம் தனியா தெரியுமாம்..அரைகுறை ஆங்கிலம் தெரிந்த அந்தப் பெண் சென்னையை சேர்ந்தவர்.. 10 வருடமாக அங்கு வேலை பார்க்கிறாள்.. நேரில் சென்றபோது தான் விஷயம் தெரிந்தது..அப்ப கூட அவள் தமிழில பேசல..இந்தியில் தான் பேசினா..நான் பிடிவாதமா தமிழில பேச அவளும் பிடிவாதமா இந்தியில பேச.. நல்ல காமெடி... நமக்கு பொறுமை இல்ல அதுக்கு மேல பேச "எனக்கு இந்தி தெரியாது.. உங்க பாஸ பார்க்கனும்.. நீங்க சொல்ல நினச்சத அவர்கிட்டே சொல்லுங்க, நான் அவர்கிட்டே ஆங்கிலத்துல பேசிக்குறேன்" னு சொல்ல..பயந்துட்டா.. அப்புறம் வருது அழகான தமிழ்..
பொதிகை தொலைகாட்சியில் உலக தமிழர்களை பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிகிழமையும் இரவில் ஒளிபரப்பாகிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. பல தலை முறைகளாக அங்கு இருக்கும் தமிழர்கள் தமிழை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வம், நம் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கும் பண்பு, மனம் நெகிழச்செய்கிறது. அவர்கள் நடை, உடை ,வாழ்க்கை முறை வீட்டின் அமைப்பு எதுவும் மாறவில்லை. 3 , 4 தலை முறைகளாக வெளிநாட்டில் இருப்பவர்களா இவர்கள் என வியப்படையச் செய்கிறது அவர்களின் மாறாத பண்பாடு.
வரலக்ஷ்மி விரதம் எல்லாம் போட்டி போட்டுகொண்டு கும்பிடுகிறார்கள்.. அதிலும் innovation எல்லாம் பண்ணி...எல்லாவற்றிலும் ஒருவரை விட ஒருவர் மிஞ்சவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. ஆனால் அதே போட்டி தாய்மொழி கற்பதிலும் இருந்தால் நன்றாக இருக்கும்..."தாய் எவ்வளவு முக்கியமோ அது போலவே தாய்மொழி மிகவும் அவசியம்" என்பதை புரிய வைத்தால் போதும்...குழந்தைகள் தமிழை பக்தியுடனும் சிரத்தையுடனும் படிக்க ஆரம்பிப்பார்கள்
தமிழைத் தமிழனே புறக்கணிக்கும் அவல நிலை மாறும்...
|