இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் Print E-mail
பத்மா அர்விந்த்   

 சமீப காலமாக வலைப்பதிவுகளில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொட்டிக்கிடக்கிறது. எந்த தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம் என்பது போல யார் வேண்டுமானாலும் பெண்களுக்கு அறிவுரை சொல்லலாம். எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று. கம்பனின் சீதையாய் இரு, இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாய் இரு என்றெல்லாம் ஒரே அறிவுரை மயம்.


மண்பார்த்து நடக்காவிட்டால் தடுக்கி விழுந்துவிடுவார்கள் பெண்கள் என்று எத்தனை கவலை.
 
ஓட்டமாய் ஓடும் இந்தக் காலத்தில் அடுத்தவர் பற்றி இப்படி கவலைப் பட்டு சமுதாயத்தின் சீரழிவை தடுக்கும் இத்தகைய மாமனிதர்களைப் பெற இந்த வலைப்பதிவுலகம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்.


வானும் காற்றும் கூட சுத்தமாய் இல்லாத நாட்களில் பெண்களின் சுத்தம் பற்றியும், அந்த நிர்மலமான சுத்தத்திற்கு தீங்கு வரக்கூடாதென்று கவலைப்படும் நல்ல உள்ளங்களின் தன்னலமற்ற தன்மையை எதைச்சொல்லி பாராட்டுவேன்.


எது சுத்தம் என்பதை யார் வரையறுத்தது?ஆண் வரையறுத்தான் என்றால் அவனின் அளவுகோல் கொண்டு பெண்ணை அளக்கும் வன்முறையை யார் சொல்லித்தந்தது? சுத்தமாக நீரும் காற்றும் கூட இல்லாத போது, ஏன் பெண்கள் மட்டும் கண்ணுக்கு தெரியாத எதுவோ ஒன்றை காப்பாற்றி பூமியின் நிதர்சனத்தை தாண்டி இருக்க வேண்டும். பூமியில் வாழ வேண்டும், ஆனால் ஆசைகள் அடக்கி இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆண்கள் எழுதிய விதிகளுக்கு உட்பட்டு, இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு பாரத்தை சுமக்க மாட்டாமல் சுமந்து திரியவேண்டும்?


இந்திரா நூயியைப் பாராட்டக்கூட இவர்களுக்கு அவருடைய நிர்வாகத்திறனோ இல்லை ஆளுமையோ கிடைக்காது. தன் குழந்தைகளுக்குத் தானே தயிர்சாதம் தருவது தான் திருப்தி தரும் என்றார், இன்னமும் பாரம்பரியங்களை விடாமல் இருக்கிறார் என்று தேடி காரணங்கள் அடுக்குகிறார்கள்.


யோசிக்க ஆரம்பித்ததும், கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் பெண்களின் தப்பு, பெரியவர் சொன்னது பெருமாள் சொன்னது மாதிரி என்று கேட்காமல், நுகத்தடி மாடாய் உழன்று கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நிறையப் பேருக்கு தன் வீட்டு பெண்ணும் விழித்து கொண்டால் என்ன செய்வது என்ற பயம், வேளைக்கு ராஜாவாய்ச் சாப்பிட்டு, காலாட்டி படுத்துக்கொள்ளும் சுகம் போய்விடும் என்ற பயம், இத்தனை நாளாய் கேள்விகேட்காத தன் ராஜாங்கம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பயம் அடிவயிற்றை கலக்குகிறது.


கம்பனின் சீதையாகவோ இல்லை பாரதியின் புதுமைப்பெண்ணாகவோ இருக்க வேண்டுமா என்ன? பெண்கள் பெண்களாய் இருந்துவிட்டுப் போகட்டும் அவரவர்க்கு பிடித்தமாதிரி அவரவர்க்கு ஏற்ற மாதிரி. நீங்கள் சொல்ல வேண்டாம்; வேண்டும் போது கலவி கொள்ளுங்கள் என்று, நீங்கள் சொல்ல வேண்டாம் பார்த்து நட என்று. எதையுமே நீங்கள் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பை விட்டுவிட்டாலாவது நிம்மதியாய் இருக்கும். பிறந்த உடன் சுவாசிக்கும் காற்று போல நாங்கள்  தன்னிச்சையாக இருந்துவிட்டுப் போகிறோம்.


இங்கே இருக்கும் தலைவர்களுக்கும் அது அரசியல் ஆகட்டும் மதமாகட்டும், பெண்களுக்கு புத்தி சொல்வதென்றால் பாயாசம் சாப்பிடுவது மாதிரி.மடாதிபதியாட்டும் இல்லை மந்திரியாகட்டும், குழந்தைத் தொழிலாளிகள் பற்றியோ பெருகிவரும் வன்முறைகளைப் பற்றியோ இல்லை. தேவைக்கும் அதிகமாக பெருகிவரும் சுற்றுப்புற மாசு பற்றியோ கவலை இருக்கிற மாதிரி தெரியவில்லை. ஆனால் எல்லாருக்கும் பெண் என்ன செய்துவிடுவாளோ என்ற கவலை மட்டும் அடிமட்டத்தில் இருக்கிறது.


உடல் நிலையில்லை,அழியக்கூடிய ஒன்று என்றால் இத்தனை கவலை ஏன்? பெண்களின் நிலையில்லா உடம்பைப் போற்றி பாதுகாக்க பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர, அடியில் புரையோடிப்போன சீழும் சகதியுமாய் இருக்கிற தங்களின் மன அழுக்கைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.ஒவ்வொருமுறை பேசும் போதும் எழுதும் போது இந்த சீழ் வெளிப்பட்டு "உன் மனம் அடியில் எப்படி புரையோடி போயிருக்கிறது என்று"  அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.  கவலைப்படத்தான் ஆளில்லை.

 

 

 

 

http://sakhthi.blogspot.com/2006/09/blog-post_11.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)