இந்தியாவும் இந்த விரைவுப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதை இப்பொழுது காண முடிகிறது. ஆனால், கேள்வி மட்டும் ஒன்றே, எதனை இழந்து எதனைப் பெறுவதற்கு? இப்பவே சொல்லிடறேன், நான் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளன் அல்ல, நான் இங்கு குப்பை கொட்ட ஆரம்பித்து பல வருடங்கள் உருண்டோடி விட்டன. எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுவது, எனக்கு நானே தருவித்துக் கொண்ட வாய்ப்புகள் அவற்றினூடே எனது பயணம். அதனைச் சார்ந்து நான் பார்க்கும் விசயங்களை இந்திய (அதுவும் #2 இந்தியாவிருந்து) மற்றும் அமெரிக்க கலாச்சாரக் கண்ணோட்டத்துடன் எவ்வாறு ஒன்றிலிருந்து பிரிதொன்று முரண்பட்டு நிற்கிறது என்பதனை நான் கண்டுணர்ந்த வரையில் இந்த வாரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளித் தூவலாமென்று எண்ணியிருக்கிறேன்.
ஒகே, இப்பொழுது விசயத்துக்குள் போவோம். எப்பொழுதும் போல அரக்கப் பரக்க ஒரு 1 மணி நேரத்துக்கு முன்னாடி ஏர்போர்டில் எனது நண்பர் ஒருவரும், எனது தம்பியும் கொண்டுவந்து என்னைத் தள்ளிவிட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.
இந்தத் தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும் காட்டாற்று வெள்ளம் போல் பல சலுகைகளை வழங்கியிருக்கிறது.
உதாரணத்திற்கு பயண டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கி, ஒரு துண்டுக் காகிதத்துடன் உள்ளே போய், ஏர்போர்ட் நுழைவாயிலில் உள்ள தானியங்கி போர்டிங் பாஸ் வழங்கும் எந்திரத்திடம் (Kiosk) சில நொடிகள் தொட்டுவிட்டு, அது துப்பும் நுழைவுச் சீட்டை பொருக்கி எடுத்து விட்டால் பயணத்திற்கு ரெடியாகி விட்டோமென்று பொருள்.
எனினும், என்னுடைய பயணத்திற்கு மீதம் 30 நிமிடங்களே இருக்கிறது என்பதால் இந்த அணுகுமுறை கூட எனக்கு துரிதமாக இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அடியேன் எவ்வளவு தொலைவு வந்துவிட்டேன் என்று. இந்தியாவில் நான் கரண்ட் பில் கட்ட அரைநாள் க்யூவில் நின்றது நினைவிலிருந்து தொலைந்தது போனது, இந்த அவசரத்தில். ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக ஒரு 10 நிமிடத்திற்கு முன்பு நானே கடைசி ஆளாக, பேண்டையும் சட்டையையும் தவிர எல்லாத்தையும் அவிழ்த்து செக்யூரிட்டி திரையில் என்னை காமித்து விட்டு வந்து ப்ளேனில் ஏறி கடைசி சீட்டுலையும் வந்து உட்கார்ந்தாச்சுங்க, ஒரு வழியா.
அந்த மிசினுக்குக் கூட தெரிஞ்சுருக்கும் போல நான் ஒரு கிராக்குன்னு, கரெக்டா ரெண்டு பசங்க ஐந்து வயசில ஒருத்தன் பேரு ஜெரிமி அப்புறம் ஒம்பது வயசில ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்க பையன் பேரு மைக்கேல். இந்த ரெண்டு பசங்களும் தனியா என் கூட அட்லாண்டாவிலிருந்து மினியபாலிஸ் பறக்கிறானுங்க, ஒரே ரோ சீட்டுல அமர்ந்து.
எதுக்காக தனியாக அப்படின்னு கேளுங்க, பசங்கள்ள ஒருத்தன் அப்பாவோட கொஞ்ச நாள் கோடை விடுமுறையை கழிச்சுப்புட்டு அம்மாவீட்டுக்கு போறான், அடுத்தவன் அம்மா வீட்டிலிருந்து அப்பாவீட்டுக்குப் போறான்.
இந்த அஞ்சு வயது ஜெரிமி கொஞ்சம் பாவம ஒரு 10 நிமிஷம் தலையை கீழே போட்டுகிட்டு உம்னு வுட்கார்ந்து இருந்தான், ஏர்கோஸ்டஸ் கொண்டு வந்து உட்காரவைச்சுட்டு பெல்ட் போட்டுட்டு அப்புறம் வாரேன்னு சொல்லிட்டு போயிட்டா. நான் கையிலே வச்சுருந்த புத்தகத்தோட தேமேன்னு வெரிக்க, புத்தகத்த தான் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கேன்.
பையன் மெதுவா ஆராய்ச்சில இறங்க ஆரம்பிச்சுட்டான், கொடுத்த ஹெட் செட்ட, அவுக்க முயற்சி பண்ணான் முடியல... நிமிர்ந்து ஒரு முறை பக்கத்து சீட்டு பயல பார்த்தான் அவன் தேமேன்னு ஐபாட்லெ பாட்டு கேட்டுகிட்டு ஜன்னல் வழியா எதையோ தேடிக்கிட்டு இருந்தான், என்ன தேடி இருப்பான்னு உங்களுக்கு தெரியும் தானே.
பிறகு நம்ம ஜெரிமி என்ன பார்த்தான் நானும் அவன என் ஒன்றைக்கண்ணெ காமிச்சு பய முறுத்திப்புடமா பக்குவமாப் பார்த்துக் கேட்டேன்... "டூ யு நீடு மை ஹெல்ப்"ன்னு, தலைய ஆட்டி வச்சான், அப்புறம் அந்த ஹெட் செட்டை எங்க சொருவி என்ன பண்றது அப்படிங்கிறதில ஆரம்பிச்ச எங்க நட்பு, அந்த முழு ப்ளைட் மக்களும் அந்த இரண்டரை மணி நேரம் எப்படா முடியும்ங்கிற அளவிற்கு, கேள்வி பதில் நேரத்திலிருந்து, அவன பூச்சி ஒண்ணு கடிச்சது, அப்புறம் நேத்தைக்கு அடிச்ச சுரம் அப்படின்னு ஒரே கதையாப் போச்சு.
நான் என் 'காட்டு'த்தனமான அணுகு முறையெல்லாம் சொல்லப் போகி, எப்படி பறந்து வட்டமிடும் பூச்சிகளிடமிருந்து கடி வாங்காமல் தப்பிக்கிறதுன்னு சொல்லப் போக அது பக்கத்து சீட்டு மைக்கேலுக்கும் ஆர்வத்தக் கொடுக்க அப்புறமென்ன. ஒரே ஜாலிதான் ப்ளைட் போங்க.
நான் கேட்டேன், தம்பீ, அந்த பூச்சி பறந்து வரும் பொழுது நீ என்ன பண்ணே, பயந்து ஓடுனீய, இல்லே விரட்டப் பார்த்தீயா, இல்லெ அத கண்ணுக்கு கண்ணு நேர பார்த்தீயாடன்னு. கொஞ்ச நேரம் தீவிரமா யோசிச்சான், கார்டூன்ல வர்ற அவன் ஃபேவரைட் கேரக்டர்ஸ் செய்ற அத்துனை முகபாவங்களையும் செய்துட்டு, ஹீம்... நான் அந்த பூச்சியெ நேரா பார்த்தேன் அப்படின்னான்.
நம்ம உடனே "நேசி" யாகி, கூடு விட்டுக் கூடு பாஞ்சி, நம்ம பூச்சி மனோ தத்துவ ரீதியா யோசிச்சு வைச்சுருக்கிற ஒரு விசயத்தை எடுத்து விட்டேன். என்னவா அது, நீ அது மாதிரி ஒரு ஜந்துவை இனிமே பார்த்த கண்டுக்காதெ, சும்மா பார்க்காத மாதிரி எந்த சலனமுமில்லாம இருந்தியன்ன உன்னை ஒண்ணும் பண்ணாம அவனுங்க போயிடுவானுங்கன்னு.
சரின்னு கேட்டுகிட்டவன், அடிச்சான் பாருங்க இன்னொரு கேள்வி, அப்பா யானை வந்தா என்ன பண்றது, அடடா, பெரிய கேள்விய கேட்டுப் புட்டானே, அப்படின்னு முழிச்சு ஏதாவது ஏடாகூடம சொல்லி வைக்காம நீ பெரியவான ஆனாவுடன் பதில் கிடைக்கும் அப்படின்னு சொல்லி வைச்சேன்.
இதற்கிடையில் அப்பப்ப ஸைலண்ட் ஆகி திடீர்னு இருந்தாப்புல இருந்து கண் கலங்கி அம்மாவைப் பார்க்கணுமின்னு ஒரு ரெண்டு மூணு தடவை கேட்டான், அப்புறம் அதிலிருந்து மீட்டு கொண்டார வேற எதாவது ஒரு டாபிக், இப்படியே போயி கிட்டு இருந்தது நேரம். இதற்கிடையில் மக்கள் எல்லாம் எழுந்துருச்சு எழுந்துருச்சு எங்க சீட்ட நோக்கி பார்க்க ஆரம்பிச்சுங்க, ஏன் அப்பிடின்னு உங்களுக்கு தெரியும்தானே.
எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வச்ச மாதிரி, பாத்ரூம் வருதுன்னு சொல்லிப்புட்டான்... சரின்னு கூட்டிக்கிட்டும் போனேன் பாத்ரூம் வரைக்கும், நண்பனாகிப் புட்டானேன்னு, அங்க வைச்சு அவன் கொஞ்சம் பெரிய விசயமய்யா இதுன்னு சொன்னான். இது சரிப்பட்டு வராதுன்னு தூரத்திலெ செவனேன்னு தூங்கி வழிஞ்சுகிட்டு இருந்த ஏர் கோஸ்டஸ் அம்மணியை கூப்பிட்டு கிட்டு வாறேண்ட இருடான்னு, பிடிச்சு கொண்டுவந்து ரெண்டு பேரையும் அந்த டீலிங்க பாக்க வுட்டாச்சு.
இப்ப க்லோசிங்கு வந்தாச்சு, சரிங்க அமெரிக்கர்கள் ரொம்ப ப்ரைவேசி வேணுங்கிற ஆட்கள், ஒருத்தன் தோள்பட்டை இன்னொருத்தன் தோள்பட்டை மேல உரசக் கூடாது, எல்லாம் உலகத்த காப்பாத்திரதுக்காக எப்பொழுதும் சதா படிச்சிக்கிட்டும், அதப் பத்தி சிந்திச்கிட்டும், கோட்டும் சூட்டுமா வேலைன்னு வந்துட்டா ரொம்ப சீரியஸா இருக்குங்க.
இப்ப இந்த ஜெரிமி மாதிரி பசங்கள் கிட்டதட்ட 42% ஒரே பெற்றோருடன் (single parent) வாழும் சூழல், பாசம் பங்கு போடப்பட்டு இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப்பட்டு வருதுங்க. பொற்றோர்கள் யாரு நாம முன்னமே சொன்ன அந்த உலகத்தை காப்பத்துறவங்கள்ளெ ஒண்ணுதான். அப்படி இருக்கும் பொழுது, இந்த மாதிரி குழந்தைகள் எல்லார் மனசிலும் என்னங்க எண்ணங்கள் ஓடும், எதைப் பார்த்து, கேட்டு வளர்ந்து வருதுங்க.
இந்தமாதிரி முதல் முறையா அப்பாவும் சரி அம்மாவும் சரி ஒருத்தரும் பக்கத்தில இல்லாமல் ப்ளைட் எடுத்துட்டு வரும் பொழுது அதுகளோட மனசில ஒரு இனம் புரியா தவிப்பு, இந்த இன்செக்யூரிட்டின்னு சொல்லுவாங்களே அது எட்டிப் பார்த்துவிட்டு அனுபவம அதன் சுவடுகளை அடி மனதில் விட்டுச் செல்லுமா, செல்லாதா?
ஒரு "வால் ஸ்ட்ரீட் ஜார்னல்" படித்துக் கொண்டு வரும் மோரான், ஜெரிமியின் பக்கத்தில் அமர்ந்திருக்க நேரிட்டு, அந்த மோரானுக்கு குழந்தைகள் என்றாலே அலர்ஜி எனும் பட்சத்தில், கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, இல்லையா?
இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகளின் "கலெக்டிவ்" மனப் பாங்கு இந்த உலகத்தைப் பொருத்து எதுவாக இருக்கும். வீட்டிலும் அருதி பெரும்பாண்மையான நேரம் டிவியின் முன்பு செலவழிக்க நேரிட்டு, அதில் காட்டப்படும் வன்முறைகள், பாசத்திற்கு ஏங்கிய ஒருவன் ஈவில்-ஆக பின்னால் முரடணாக மாறுவது போன்ற காட்சிகள், கண்களின் வழியே வாங்கி, மனத்தில் இறக்கி, பின்னாலில் அவனும் இதே சமூதாயத்தில் வாழும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.
அப்படிப் போகும் பட்சத்தில் நாளை அவன் தனது காதலை துப்பாக்கியின் வழியில் வெளியிட எத்தனித்தால், அமைதிக்காக எனும் போர்வையில், இதில் இன்று யாரை குற்றம் கூறுவது? உங்களுக்கு நான் சொல்ல வருவது புரிகிறதா?
நாம் அடிப்படையிலேயே தவறு செய்து வருகிறோம். குழந்தைகளை எங்கு சென்று சந்தித்துப் பழகினாலும் அவர்கள் இனிமையானவர்கள்தான், சூதுவாதற்று, ஆனால் ஒரு சமுதாயம் தனது சொந்த வெருப்பு விருப்புக்களுக்காக அவர்களைப் பகடைக் காய்களாக ஆக்குவது. உண்மையிலேயே வருத்தத்துக்குறியது.
இந்தியாவும் இந்த விரைவுப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதை இப்பொழுது காண முடிகிறது. ஆனால், கேள்வி மட்டும் ஒன்றே, எதனை இழந்து எதனைப் பெறுவதற்கு?
http://thekkikattan.blogspot.com/2006/11/blog-post_12.html