|
கார்த்திக்வேலு
|
தேக்கி வைத்த பேரன்பு
பதப்படுத்திய பாலாய்
தூய்மையை வெண்மையில் கரைத்து
பேரங்காடி அலமாரிகளில்
தன் பயன்கெடு நாளை நோக்கி ...
உணர்வுகள் தொட்டிழைத்த வார்த்தைகள்
முறுக்கிக்கொண்ட இரும்புக்கம்பிகளாய்
பாரம் தாங்கும் பாவனையில்
துருவேறிக்கொண்டு...
உச்சி முதல் சிலிர்த்த கணங்கள்
கண்ணீரின் குளுமையிலும்
கவிதை இடுக்குகளிலும்;
ஆழங்களில் அமைதியுற்று...
நாளை -
கொத்துவதைத் தள்ளிப்போட்ட ஒரு நல்ல பாம்பு
எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட ஒரு தனி வீடு
கடக்க முடியாத்துயரங்களின் மைல்கல்.
ஆதலின் அன்பே
உனக்குரிய முத்தங்களை வாங்கிச்செல்
இன்றே
இப்பொழுதே
இவ்விதமே.
http://intamil.blogspot.com/2006/09/blog-post_14.html
|