பெரியாரைப் பற்றி எல்லோரையும் போலவே நானும் மேலோட்டமான கருத்துக்களையே கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் என்னை பாதித்த ஊடகங்களின் கருத்து அவ்வாறிருந்ததும், அவரது வழி வந்தோரின் நடவடிக்கைகளுமே ஆகும். நான் அவரை ஒரு வறண்ட நாத்திகவாதியாகவும், கறுப்பு வெளுப்பில் சிந்திப்பவராகவும் (அப்படி ஒரு குற்றச்சாட்டு அவரை மலினப்படுத்தவும், அவரது சிந்தனைகளை தூற்றவும் பலகாலமாகச் செய்யப்பட்டது; இப்போதும் செய்யப்படுகிறது) மட்டுமே வெகுகாலம் அறிந்திருந்தேன். பின்னர் எனது வழக்கமான வழியில் (அதாவது ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அவர் என்னவாக இருக்கிறார் என்பதைக்கொண்டே நான் அவரை மதிப்பிடுவது வழக்கம்) அவரை அணுகினேன். அவர் இவர்கள் காண்பிப்பதுபோல எந்த இனத்தின் மீதும் வன்மம் கொண்டிருக்கவில்லை, அவரது உள்மைய்யம் வன்முறையின் சுவடற்று இருந்தது; இன்னும் நான் கண்டு வியப்புறும் விதத்தில் அவருக்கு எந்தக் கருத்தின் மீதும் நம்பிகை (வெற்று நம்பிக்கை) இல்லை; ஏனெனில் எல்லா கருத்துக்களும் கருத்துக்கள் என்ற அளவைத்தாண்டி அவர் அதன் மீது பற்றுதல் எதையும் வைக்கவில்லை. அவைகளுக்கு வாழ்வில் தேவையான இடங்களில் யாரையும் பாதிக்காத விதத்தில் பயன்படுத்தப்படுவதைத் தவிர வேறு நோக்கங்கள் எதுவும் இருப்பதாகக் அவர் கருதவில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் மோசடியில் கருத்தும், கருத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகளும் இருப்பதைக் கண்டார். மனிதன் நம்பிக்கைகள், கற்பனைகள், ஒழுங்குகள், புனிதங்கள், உன்னதங்கள் என்ற பெயரிலெல்லாம் கருத்துகளின் அடியில் நசுங்கிக் கிடப்பதைக் கண்டார். இது நாய் வாலை அசைப்பது போலல்லாமல், வால் நாயை அசைப்பது போன்றது. இன்னும் வால் நாயை நசுக்கிக் கொண்டுமிருந்தது. இந்த நிலையில் எத்தனையோ உண்மையை உணர்ந்த ஞானியர்களைப் போல அவரும் கருத்துகளின் /நம்பிகைகளின் இயல்பான இடத்தையும் அதன் தனிமனித/சமூக பயன்பாடுகளுக்கு மீறி அவை பெறும் தகுதியை சற்றும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் உடைத்தெறிந்தார். அவர் எதன் பொருட்டு அஞ்ச வேண்டும்? அவர் தம்மைப் பற்றிய புரிதலுக்கும், தன்னையறிதலுக்கும் கருத்துக்களை/நம்பிக்கைகளைச் சார்ந்திருக்கவில்லை. அவர் எந்த நம்பிக்கைகளின் ஊடேயும் அல்லாமல் தன்னை தானே நேரடியாக தரிசிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார். இதற்கு மிகுந்த நேர்மை வேண்டும். அதில் இருந்தே அவரது மிக அற்புதமான தன்மானம் என்கிற பார்வை உண்டாகிறது. இந்த தன்மானம் என்பது கடவுள் என்பது போன்ற கருத்துவாக்கம் அல்ல. இது ஒரு தரிசனம். இத்தன்மானம் கடவுள் நம்பிக்கையைப் போல வெறும் நம்பிக்கையாகும் பொழுது அகங்காரம் ஆகலாம்; ஆனால் தரிசனமாகும் போது அதுவே ஆன்மீக விடுதலையின் நுழைவாயிலாகிறது. ஆனால் கடவுளைக் காப்பற்ற இருப்பதுபோல தன்மானத்தை ஒரு நம்பிக்கையாக பரப்ப, காப்பாற்ற எந்த கற்பிதங்களையும் அவர் சமைக்கவில்லை. இது மிகவும் முக்கியமானது.
அவர் எந்த நம்பிகைகளையும் பயன்படுத்தவில்லையா என்று கேட்டால், பயன்படுத்தினார், ஆனால் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல ஒரு நம்பிக்கையை உடைப்பதற்கு இன்னொரு நம்பிக்கையை பயன்படுத்தினார். பிறகு இரண்டையும் கடந்து செல்ல வழியுறுத்தினார். இது உண்மையை தெளிந்த ஞானிகள் மட்டுமே கையாளும் வழி. அதனால் தான் அவரால், மொழி, இனம், ஒழுக்கம், நாட்டுப்பற்று, ஏன் பகுத்தறிவையும் கூட கடந்து நிற்க முடிந்தது. அவர் குறிப்பிட்ட சுயமரியாதை (தன்மானம்) என்பது மிக மிக முக்கியமான ஒன்று; அதுவே தன்னை அறிவதற்கான வழியில் ஒரே பற்றுக்கோடு. ஆனால் அவர் இந்த ஆன்மீக மொழியினை மிகவும் கவனமாகத் தவிர்த்திருக்கிறார். இது இன்னும் வியப்பைத் தருவது. ஏனெனில் எல்லா ஆன்மீக பரிசோதனைகளும் வெறும் கடவுளிலும், வழிபாட்டிலும் போய் உறைந்து விடுவதையும், மக்களைச் சுரண்டுபவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வதையும் அவர் மிகச் சரியாக உணர்ந்திருக்கிறார். எல்லா நம்பிக்கைகளையும் கடந்த ஒருவரே நம்பிக்கைகளை கடப்பதைப் பற்றி சொல்லமுடியும். அவர் அதைச் செய்தார்.
அவர் கடவுளுக்கு எதிரானவராக, பார்ப்பனத் துவேஷியாக, இந்திய தேச விரோதியாக இன்னும் பலவிதமான அவதூறுகளால் அவர் வாழ்ந்த போது மட்டுமல்லாமல், இப்போதும் தூற்றப்படுகிறார். உண்மையில் அவர் இவை எவற்றுக்கும் விரோதியல்ல, ஆனால் இவைபற்றின கற்பிதங்களை, கருத்துக்களை முற்றிலுமாக உடைக்கத் தயங்காதவர். இது ஒன்றே உண்மையைக் கண்டுணர்ந்த அத்தனை ஞானிகளின் பொதுவான இயல்பாக இருப்பதைக் காணலாம்.
நான் பாரதியையும், பெரியாரையும் படித்தபொழுது அவருக்கும் பாரதிக்கும் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களை புரிந்து கொள்ள முயலும் போது எப்படி அவர்களது ஜாதகம் குறிப்பிடப்படுகிறதோ அப்படி ஒரு சங்கடமான நிலை பெரியாருக்கும் உண்டு என்பதை பலர் நினைவில் கொள்ளுவதில்லை. பாரதி எதைக் கண்டித்தானோ அதையேதான் பெரியாரும் தனது வழியில் செய்தார். ஆனால் பாரதியை பார்ப்பனத் துவேஷியாக பலர் கருதவில்லை (சிலர் கருதவே செய்தனர், அதனால் தான் அவரை ஒரு மகா கவியென அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை). ஆனால் பெரியார் கருதப்பட்டார். ஆனால் எனக்கு இருவரும் அவர்களது வார்த்தைகளால் மட்டுமல்ல, அவர்களது உள்மையத்தால் ஒன்றானவர்களாகவே தெரிவர். இதற்கு ஒரு புறநிலைச் சான்றாக பாரதியின் தாசனாக தன்னை இறுதிவரை கருதிக்கொண்டவரும், பாரதி பக்தர்களில் முதன்மையானவருமான பாரதிதாசன் பெரியாரின் சீடருமாக இருந்தது. இதை அவரும் ஒரு முரணாகக் கருதவில்லை, நானும் கருதவில்லை. அதைத் தவிர வேறுவிதமாக இருக்கமுடியாதென நான் அறிவேன்.
எனவே இவ்விருவரையும் பற்றிய எனது பார்வையை எழுதவேண்டும் என வெகுநாட்களாக எண்ணம். அதை மெதுவாகச் செய்யவேண்டும்.
பெரியாரைப் பற்றிய புத்தகங்கள் என்றால் நானறிந்தவரை ‘தமிழர் தலைவர்’ என்ற புத்தகத்தை ஆரம்பமாகக் கொள்ளலாம். இது பெரியாராலேயே சரிபார்க்கப்பட்டது. ஆனால் அவரது இறுதிக்காலம் வரை இது செல்லாதது. பிறகு அவரது எந்தப் புத்தகமும் சரியே, அ.மார்க்ஸ் எழுதிய ‘பெரியார்’ என்ற புத்தகத்தையும் மிக முக்கியமானதொரு புத்தகமாக நான் சொல்லுவேன். இது பெரியாரைப் பற்றி அவரை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் வைத்திருக்கும் நம்பிக்கைகளுக்கும் மேலாக (அப்பாலாக) பெரியாரைப் பற்றிச் சொல்லமுயன்ற புத்தகம். ஆனால் திண்ணையில் வரும் கட்டுரைகளுக்குப் பின் உள்ள நோக்கத்தை நான் சந்தேகிக்கிறேன். அது வெளிவரும் விதத்தில், வரிசையில், பாங்கில் அது பெரியாருக்கு நேர்மையாய் இல்லை. பெரியாரை வெறும் ஒரு கருத்தியலாளராக அது பயன்படுத்தி தனது மறைமுக அடிப்படைவாத நோக்கங்களைச் அக்கட்டுரைகள் சொல்லமுயல்வதாக நான் உணருகிறேன்.
http://bhaarathi.net/ntmani/archives/53
http://www.oviarpugazh.com/gallery/thisaimugam/aap
|