தமிழகத்தின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு ஆளரவமற்ற இரவுப்பொழுதில் நெற்றிப்பட்டை, மாலையிட்டு, திரி கொழுத்தி வைத்து மகிழ்ந்திருக்கிறது வக்கிர செயல் பிடித்த கூட்டமொன்று அவரவரது வக்கிரங்களின் அளவிற்கேற்ப இந்த இழிசெயலை ஆதரித்து தன் மன வக்கிரங்களை பதிவிலேற்றி. சக வலைப்பதிவாளர்களும் மகிழ்கின்றனர். பெரியார் மீது ஏன் இந்த வக்கிரம்?
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள், வேதம், சாத்திரம், ஆச்சாரம், ஆகமம், பூசணிக்காய் என மக்களை அடிமைப்படுத்திய கூட்டத்தை, அதன் கருத்தியலை துணிந்து எதிர்த்து உடைத்தெறிந்தவர் தந்தை பெரியார். கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்று வெளிப்படையாக பேசி தான் தனது உரையையே துவக்கியவர் அந்த அறிவு மேதை. கடவுள் என்ற பெயரில் காட்டுமிராண்டி உலகத்தை விட கேவலமான சாதி அடிமைத்தனத்தை வகுத்து, அதை கட்டிக்காத்து மக்களை அடிமையாக்கிய பார்ப்பனீயத்தையும் அதன் ஆணிவேரையும் அசைத்தன பெரியாரின் வைக்கம் கோவில் நுளைவு போராட்டம்.
நம்பூதிரி என்று அழைக்கப்படுகிற கேரள பிராமணர்களால் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதியாது தடுத்து, வீதிகளில் கூட மனிதனாக நிமிர்ந்து நடக்க விடாமல் அடக்குமுறை நடத்திய அவல நிலையை அகற்ற ஈரோட்டு சிங்கம் தந்தை பெரியார் கிழர்ந்தெழுந்தார். போராட்டம் வலுபெற்றதும் அதன் முடிவில் பார்ப்பனீயம் ஆட்டம் கண்டது. அதனால் தான் வைக்கம் வீரர் பெரியார் என அழைக்கப்பட்டார். இன்றும் அந்த கேரள வாழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரியார் தலைவர் என்பது வரலாறு.
அதன் தொடர்ச்சியாக அவர் கண்ட களங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மகக்ளின் விடுதலையை, விடியலை, சமூக சமநிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு சுழன்றது. இறப்பிற்கு முந்தைய நாள் வரை தான் கொண்ட கருத்தை, கொள்கையை உறுதியாக உரக்க உரைத்து தமிழர்களின் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் கூட மூத்திரப்பையை ஒரு கையில் சுமந்த படி நோயிலும் சுழன்று சூரியனாய் மூடக்கருத்துக்களை எதிர்த்து அடக்குமுறையாளர்களுக்கு சவாலாக இருந்து பார்ப்பனரல்லாத மக்களின் காப்பரணாக விளங்கிய மாமனிதர் அவர். தனது சொந்த பணம் சொத்து அனைத்தையும் அறிவுக்கருத்துக்களை பரப்ப செலவிட்டவர். தனது பயணங்களை மிக மிக சிக்கன செலவில் நடத்தி அடித்தட்டு மக்களின் பள்ளிக்கூடங்களாக அறிவு மிகுந்த சொற்பொழிவுகளால் மாலை நேர பொதுக்கூட்டங்கள், பாசறைகள், பத்திரிக்கைகள் என பன்முக பிரச்சாரத்தை சொந்த பணத்தில் நடத்திய உன்னத மனிதர்.
பார்ப்பனீய திமிர் பிடித்து இன்றும் சாதி அடைமொழியிட்டு தான் மனிதனை அழைப்போம் என்பவர்களை என்னவென்பது? என்ன படித்து என்ன பயன்? பார்ப்பனீயம் இரத்த நாளமெங்கும் சுரக்கும் வரை இவர்களது சாதி வெறி அடங்கப்போவதில்லை. பெரியாருக்கு சிலை வைப்பது அவரது கருத்துக்களுக்கு எதிரானது என இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து புதையல் கிடைத்ததோ? இது விடயத்தில் பெரியார் கருத்துக்களுக்கு காவல்காரர்கள் போல முகமூடியணிவது இவர்களது பார்ப்பனீய சாயம் வெளுக்கிறது என்பதன் அடையாளமே. கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை வைக்க காரணமாக இருந்தது தந்தை பெரியார் என்பதும், அறிவு மேதை சாக்கிரட்டீஸ் சிலை அருகில் நின்று தன்னை படம் பிடித்து, தானும் சாக்கிரட்டீஸ் போல அறிவுக்கருத்துக்களை பரப்புபவர் எனபதை அறிவித்ததும் இவர்களுக்கு புரியுமா? ஊர்வன, பறப்பன என பல வடிவங்களில் சிலை வடித்து கட்டுக்கதைகளை உருவாக்கி மக்களை விலங்குகளை விட கேவலமாக்கிய மூடத்தனத்தை எதிர்த்தவர் பெரியார். ஒட்டு மொத்தமான சிலைகளின் எதிர்ப்பாளரல்ல என்பதை பெரியாருக்கு சிலை சரியானதா என வினவுபவர்கள் சரிவர புரிந்து கொள்ளட்டும்.
இராமன் சிலைக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார் இது ஒன்றும் இரகசியமல்ல. நீதிமன்ற வழக்காகி, பெரியாரே அந்த வழக்கில் வாதாடினார் எதற்காக இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் என நீதிமன்றத்திலேயே தெளிவுபடுத்தினார். தான் செய்த செயலை ஒப்புக்கொண்ட வல்லமை படைத்தவர் பெரியார். எதற்காக இராமனுக்கு செருப்புமாலை? தமிழ் மக்களை அடிமைப்படுத்திய பார்ப்பனர்களது ஆரிய் அடையாளமான இராமனுக்கு செருப்பு மாலையிட்டார் பெரியார். தமிழ் மன்னர் இராவணனை கொடியவனாக சித்தரித்த கட்டுக்கதையான ஆரிய படைப்பான இராமாயணத்தையும் அதனுள் இருக்கும் ஆரிய சூழ்ச்சியையும் எதிர்த்தவர் பெரியார். இராவணனை பொம்மை உருவாக செய்து இழிவுபடுத்தி கொழுத்தி மகிழ்ந்த ஆரிய லீலா கூத்தை எதிர்க்கும் விதமாக இராமனுக்கு செருப்பு மாலையணிந்தார் பெரியார். இது ஒன்றும் இரகசியமல்ல. நாட்டார் வழக்கியல் தெய்வங்களுக்கு பெரியார் செருப்பு மாலையிட்டாரா? இல்லையே ஏன்? பார்ப்பனீய எதிர்ப்பின் ஒரு அம்சமாகவே பெரியாரின் செருப்பு மாலை போராட்டம் அமைந்திருந்தது.
பெரியார் இந்துக்களை அவமதித்தார் என கூக்குரலிடுபவர்கள் பதில் சொல்லுங்கள், ஆதிக்க சாதியினரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் சமமா? அப்படியெனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு ஆணை வந்ததும் ஏன் இவ்வளவு ஆர்ப்பட்டம்? கோயிலில் நீ உயர்சாதியா, மற்றவர்கள் இழிந்த சாதியினரா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகி வழிபாடு நடத்தினால் சாமிக்கு கோபம் வந்து கைலாயத்துக்கு போய் விடுமா? இறைவன் முன் அனைவரும் சமம் என்கிற தத்துவங்கள் பிறந்த உலகில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதி மட்டுமே கோயிலில் வழிபாடு நடத்தலாம் என்கிற வெங்காயங்களை என்ன என்று சொல்வது? இப்படி இருக்கையில் நீயும் நானும் அவனும் இந்து என்பது மோசடி இல்லாமல் வேறு என்ன?
பெரியார் சிலைக்கு வணக்கம் தானே செய்திருக்கிறார்கள் மகிழுங்கள் என்கிற அடக்கமான நடுநிலைவாதிகளுக்கு; சரித்திரத்தில் பார்ப்பனீயம் இப்படி சீர்திருத்தத்திற்காக போராடியவர்களை கடவுளின் அவதாரம் என பார்ப்பனீய தத்துவத்தில் உள்ளடக்கி நீர்த்து போக வைத்த வரலாறு மறந்திருக்கலாம். புத்தர், நந்தனார், நாராயணகுரு, முத்து குட்டி சாமி என அந்த மாமனிதர்களின் பட்டியல் நீளமானது. தனக்கு எதிராக புரட்சி செய்பவர்களை அவதாரமாக்கிவிட்டால் அவர்களது கொள்கை, போராட்டம் மறைக்கப்படும் என்பது பார்ப்பனீய தந்திரம். அந்த தந்திரத்தை பெரியார் விடயத்தில் சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்த முயல்கிறார்களா? அது பெரியார் விடயத்தில் வெற்றியடைவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை காலம் உணர்த்தும்.
எந்த கருத்தியலை பெரியார் எதிர்த்தாரோ அந்த கருத்தியல் கொண்ட அடக்குமுறையாளர்களின் பாசிச் வக்கிரங்கள் தான் இன்று திண்டுக்கல்லில், வலைப்பூக்களில் என எதிரொலிக்கின்றன என்பதில் வியப்பில்லை. பகுத்தறிவு இயக்கம இப்படிப்பட்ட 'வேடமிட்டு அலைகிற அதிமேதாவிகளை' சந்தித்து தான் வளர்ந்தது. இந்த இழிசெயல் புரிபவர்களையும் அவர்களுக்கான இடத்தில் அனுப்பி வைக்குமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வக்கிரத்தையும் பகுத்தறிவு இயக்கங்கள் சந்திக்கும். சிலையாகியும் பார்ப்பனீயத்தை பதற வைக்க பெரியாரால் முடிகிறது. அந்த விதத்திலும் அய்யா பெரியார் தான்!