|
|
|
மறுகாலனியாதிக்கம் - மயக்கத்தில் மக்கள் |
|
|
|
ராஜாவனஜ்
|
நீங்கள் மது மயக்கத்தில், சாலையோரம் வேட்டி அவிழ்ந்து போனது கூட அறியாமல் உளறியவாறே கவிழ்ந்து கிடக்கும் ‘குடிமகனை’ கடந்து போகும் போது பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு அப்போதெல்லாம் ஒரு வித அருவெறுப்பு ஏற்படுமல்லவா? அதே அருவெறுப்பும் அதனினும் மேலான ஒரு ரௌத்திரமும் எனக்கு உங்களில் சிலரைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.
நாம் அந்தக் குடிகாரனைக் கூட மன்னித்து விடலாம்; ஏனெனில் அவன் தன்னிலை உணரமுடியாத ஒரு நிலையில் கிடக்கிறான் ஆனால் அதனினும் ஆழ்ந்த மயக்கத்தில் - உணர்வு ரீதியிலானதொரு கிறக்கத்தில் - இருக்கும் இந்த மக்கள்? இந்த நாடே கொள்ளை போகும் நேரத்தில், இதன் வளங்களெல்லாம் இவர்கள் தேர்ந்தெடுத்த அதே அரசு கூறுகட்டி விற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் அரிசியை விதைத்தவன் வாழ்க்கையில் நொந்து கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டு சாகும் தருணத்தில், உங்கள் உடையை நெய்தவன் வீட்டில் ஒப்பாரிச் சத்தம் கேட்கும் நேரத்தில், உங்கள் கார் வழுக்கிச் செல்ல வழவழப்பான சாலை போட்டவன் அதே சாலையோரத்தில் அனாதையாய் நாதியற்று பிள்ளை குட்டிகளோடு அலையும் நேரத்தில், உங்கள் பெண்டாட்டியின் தாலிக்கு தங்கம் வெட்டியவன் நசுங்கிச் செத்த அதே கணத்தில் - உங்களில் சிலர் களிவெறியோடு இன்னும் இன்னும் இன்பம் எங்கேயென்று அலைகிறீர்கள்.
இன்று அவர்களுக்கு வழிதெரியவில்லை. தங்கள் வாழ்வாதாரம் சீரழிக்கப் பட்டதற்கு யார் காரணம் என்று தெரியாது. ஓட்டுப் பொறுக்கிகளின் வஞ்சனையான வாக்குறுதிகளை நம்புகிறார்கள். எவன் எதிரியென்று தெரியவில்லை. எது தங்களை அடிக்கிறது என்று புரியவில்லை. - அதனால் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறார்கள் அல்லது இதுவே தமக்கு ‘விதிக்கப்பட்டது’ என்று சகித்துக் கொள்கிறார்கள் - ஆனால் நாளையும் இன்று போலவே இருக்காது..
அட என்னங்க சொல்றீங்க? அதான் டீவில நாடு முன்னேறுதுன்னு சொல்றாங்களே? போன வாரம் கூட பங்கு மார்க்கெட்டுல பதிமூனாயிரம் புள்ளி ஏறிடிச்சாமே? நீங்க என்னடான்னா அவன் சாகறான் இவன் சாகறான்னு ஒரே அமங்கலமா பேசரீங்க? இன்னிக்குப் பாருங்க எத்தன வண்டி வாகனம்... பளபளன்னு காரு... நீங்க இன்னும் பழைய காலத்துலயே இருக்கீங்களே? நாடு முன்னேறுது சார்... நீங்களும் முன்னேற வழியப் பாருங்க.. - என்பது போன்ற உங்கள் கேள்விகளும் அறிவுரைகளும் கேட்கிறது.. நீங்கள் சொல்லும் அந்த முன்னேறும் நாட்டின் ஒவ்வொரு பிரிவின் லட்சனத்தையும் நீங்களே பாருங்கள் .. புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்னும் இந்த மறுகாலனியாதிக்க ஆயுதம், பெரும்பான்மையான மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாகிய சோகத்தை பாருங்கள்.. எவன் நாட்டைக் கூட்டிக் கொடுக்கிறான் என்று பாருங்கள்... கருங்காலிகளின் தேசபக்த முகமூடி கிழிந்து தொங்குவதைப் பாருங்கள்... முக்கியமாக, நீங்கள் இதுவரை காணாத - கற்பனை கூட செய்து பார்த்திராத - ஒரு இந்தியாவைப் பாருங்கள்
நீங்கள் மூன்று வேளை அள்ளி அள்ளித் தின்கிறீர்களே சோறு... எப்போதாவது அதை விதைத்தவன் என்னவானான் அறுத்தவன் இன்று எங்கே போனான் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதோ கேளுங்கள் உங்கள் அரிசியை விதைத்தவனின் சோகத்தை...
தாராளமயம் மற்றும் உலகமயத்தின் ஒரு பகுதியாக நாட்டின் பொதுவினியோகத் துறையை ஒழித்துக் கட்டும் நாசவேலையை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது இந்த அரசு.. இந்திய தானிய சந்தையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிக்குத் தடையாக பொதுவினியோகத் துறை இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் கண்களை உறுத்தியது.. தங்கள் தானியங்கள் தடையில்லாமல் இந்நாட்டுக்குள் நுழைய வேண்டும் என்றால் இங்கே விவசாயமும் விவசாயியும் சீரழிய வேண்டியது அவசியம் என்று கருதியது அந்நிய மூலதனம்.. ஒரு நாட்டின் சுயசார்பை ஒழித்துக் கட்டுவதென்பது மறுகாலனியாக்கத் திட்டத்தின் ஒரு அங்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!
தங்கள் பரம்பொருளின் உள்ளக்கிடக்கையை குறிப்பால் புரிந்து கொண்டு நிறைவேற்றத் துவங்கியது இந்திய அரசு.. ரேஷன் அட்டைதாரர்களை மூன்றாகப் பிரித்தது வருமைக்குக் கீழ், நடுத்தர குடும்பம், உயர்தரக் குடும்பம் என்று.. இதற்கு ஒரு வினோதமான ஒரு அளவுகோலையும் கடைபிடித்தது.. அதாவது 1200க்கு மேல் வருமானமுள்ள குடும்பங்களை நடுத்தர குடும்பம் என்று வகை பிரித்து அவர்களுக்கான விலையை மூன்று மடங்காக உயர்த்தியது.. (1200 ரூபாய் எதற்குக் காணும்? ) ‘வறுமைக் கோடு’ என்று அவர்கள் தீர்மானித்த அளவுகளின் உள்ளே வருபவனும் தப்பவில்லை அவர்களுக்கான அரிசியின் விலையும் உயர்ந்தது.. பொதுவினியோகத் துறையின் மூலம் கால் வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருந்தவனையெல்லாம் பட்டினி போட்டது அரசாங்கம்..
மேலே சொன்னபடி குளறுபடிகள் செய்தபின் அவர்கள் எதிர்பார்த்தபடியே பெரும்பான்மையான மக்களால் ரேஷன் அரிசியை வாங்க முடியவில்லை. விளைவு அரசாங்கக் கிடங்குகளில் தானியங்களின் கையிருப்பு உயர்ந்தது. இதையே காரணமாகக் காட்டி நெல் கொள்முதலைக் குறைத்தது அரசு. இதையே நம்பி பயிரிட்ட விவசாயிகள் வாழ்வில் - மண்! ஒரு புறம் அரசின் இந்த தாக்குதல் என்றால் இன்னொறு புறம் பொது சந்தையில் வெளிநாட்டு அரிசி ரகங்கள் வெள்ளமென பாய்ந்தது.. உள்நாட்டு அரிசிக்கு விலை இல்லாமல் போனது. இந்த நாட்டு மக்களுக்கு காலம் காலமாய் சோறு போட்டவன் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டான். லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளினார்கள் இந்த ஆட்சியாளர்கள்..
தாராளமயத்தால் மலிவு விலையில் வெள்ளமெனப் பாய்கிறது சோயா என்னையும் பாமாயிலும்.. விளைவு தேங்காய்க்கு விலையில்லை; கடலை விவசாயம் அழிவின் விளிம்பில். திறந்து விடப் பட்ட சந்தையில் பெரும் மானியம் வாங்கும் அந்நிய விவசாயிகளின் பஞ்சு நூல்கள் இறக்குமதி - விளைவு உள்நாட்டுப் பருத்திக்கு விலையில்லை. பருத்திச் செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்துகள் எமது விவசாயிகளின் உயிரைக் குடிக்கிறது.
நொந்து போன விவசாயியை வஞ்சனையாய் அரவணைக்கிறது மான்சாண்டோ என்ற பன்னாட்டு விதைக் கம்பெனி. மரபீனித் தொழில்நுட்பத்தால் மலடாகிப் போன தங்கள் விதைகளைக் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் விவசாயிகள் தலையில் கட்டுகிறார்கள். இதில் ஒரு ‘சிறப்பு’ உண்டு. சாதாரணமாக நம் விவசாயிகள் தங்கள் விளைச்சலின் அறுவடையில் இருந்து ஒரு பகுதியை அடுத்த பட்டத்திற்கு விதைப்பதற்காக விதை நெல்லாக எடுத்து வைப்பார்கள். ஆனால் மரபீனித் தொழில்நுட்பத்தால் ஆன இந்த மான்சாண்டோ விதைகள் ஒரு முறை மட்டுமே முளைக்கும் மீண்டும் விதை வேண்டுமானால் அவனிடமே போய் கையேந்தி நிற்க வேண்டும். கற்பனை செய்து பாருங்கள் பின்னொரு நாள் இந்த நாடே விதைகளுக்காக ஒரு அந்நிய கம்பெனியிடம் கையேந்தி நிற்க வேண்டும் விதைகளுக்காக. அவன் அரசாங்கம் அட்டுவித்த படியெல்லாம் ஆட வேண்டும். இல்லை என்றால் எப்படி மருந்துகளை தடைசெய்து கோடிக்கணக்கான இராக்கிய குழந்தைகளைக் கொன்றார்களோ அதே போல் விதைகளை தடை செய்து மொத்த விவசாயத்தையும் அழித்து விட முடியும். மொத்த மக்களையும் பட்டினியால் சாகடிக்க முடியும்.
ஆறுகளையும் குளங்களையும் கூட விட்டு வைக்கவில்லை இவர்களின் இரத்த வெறி. வளமான பிளாச்சிமடா கோக்கின் அரக்கத்தனமான தாகத்திற்கு பலியாகி இன்று வறட்சியான தரிசு நிலமாகிப் போயுள்ளது. தாகமெடுத்த ஏகாதிபத்திய அரக்கன் அடுத்து தாமிரவருணியின் மேல் கண் வைத்துள்ளான். எதிர்த்துப் போராடும் எவருக்கும் பரிசு - போலீசு மிருகங்களின் அடி உதை!
தண்ணீர் தனியார்மயத்தால் உலகமெங்கும் தாகத்தால் செத்த மக்கள் ஏராளம். பொலிவியாவில் தென் ஆப்பிரிக்காவில் பிலிபைன்ஸில் என்று சொல்லிக் கொண்டே போகலாம். தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தாராளமயமாக்கப் பட்டதால் உள்ளே நுழைந்த சூயஸ், விவெண்டி மற்றும் பைவாட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறியாட்டத்தால் அந்நாட்டின் கால் பங்கு மக்களின் குடிநீர் இனைப்பு துண்டிக்கப் பட்டது. மக்களிடம் காசு பிடுங்க இனைப்புகளில் மீட்டர் பொருத்தி பீரிபெய்டு கார்டு முறையைக் கையாண்டது. அதாவது ‘கையில் காசு - வாயில் தண்ணீர்’ என்று சொல்லாமல் சொன்னது. உலகமயத்தின் இந்த விளைவுகளைத் தடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கோ அதிகாரம் கிடையாது. வேறு வழியில்லாத ஏழை மக்கள் குளம் குட்டைகளில் இருந்து மாசுபட்ட தண்ணீரைக் குடித்து கொள்ளை நோய் தாக்கி கொத்துக் கொத்தாய் செத்துப் போனார்கள்.
கோவையில் 98ம் ஆண்டில்(என்று நினைவு) ஆற்றுப் பாலத்தைக் கட்டும் பணியை ஒரு பன்னாட்டு நிறுவனம்(L&T) ஏற்றது. ஏற்கனவே இருந்த பாலத்தை அப்படியே வைத்துக் கொண்டு நகரில் இருந்து வெளியே செல்வதற்காக மட்டும் புதிதாக ஒரு பாலத்தைக் கட்டினார்கள். உள்ளே நுழையும் வாகங்கள் அதே பழைய பாலத்தை பயன் உபயோகப் படுத்தின. கடைசியில் என்னவானது? வேலை முடிந்து சுங்கம் வசூலிக்கும் போது வெளியே போகும் வண்டிகள் மட்டுமல்லாது பழைய பாலத்தின் வழியே உள்ளே நுழையும் வண்டிகளுக்கும் கட்டாய சுங்க வசூல் நடந்தது.. ஓட்டுனர் சங்கங்களும் மக்களும் கொதித்தெழுந்து போராட்டத்தில் இறங்கினார்கள். அதன் பின் என்னவானது?
போலீசு மிருகங்களை விட்டு காசு தராத வண்டி உரிமையாளர்களை மிரட்டி அடித்து வசூல் செய்தது அந்த நிறுவனம். மக்களைக் காக்கவேண்டிய போலீசு..!
மக்கள் பணத்தில் சோறு தின்னும் போலீசு... அதே மக்களை நடுத் தெருவில்
நாயை அடிப்பதைப் போல் அடித்த அவலம் அன்று எங்கள் கண் முன்னே
கண்டோம்..! அத்தனை வருடங்களாக நாங்கள் கொடுத்த சாலை வரியையும் இன்னபிற வரிகளையும் கொண்டு கட்டிய பாலத்துக்கு எவனோ ஒருவன் அராஜகமாக அடித்து காசு பிடுங்குகிறான்; கொள்ளை அடிக்கிறான். தொழிற்சாலைகளிலும் சேற்று வயல்களிலும் வேர்வையை ரத்தமாகக் கொட்டி எமது மக்கள் சம்பாதித்த காசு எங்கோ ஒரு நாட்டுக்குப் போகிறது. ஏனென்று கேட்ட மக்களுக்குப் பரிசு போலீசு அடி!
யாரிடம் போவது? எவரிடம் சொல்லியழுவது இந்த அரக்கத்தனத்தை? இங்கே தலைக்குப் பின் ஒளி வட்டம் முளைத்த ஒருவர் வந்து சொல்கிறார் "சட்டத்தைக் கையில் எடுக்காதே போலீசிடம் போ" என்று!
ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களாகத் தனியாருக்குத் தாரைவார்த்து கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வில் மண்ணைப் போட்டுள்ளனர் இந்தப் பன்றிகள்.
ஏன் இந்த அரசாங்கம்? என்ன செய்வதற்கு இந்த அரசாங்கம்? சொல்லாமல் சொல்கிறார்கள் - நாங்கள் நாட்டைக் கூட்டிக் கொடுக்கவும் காட்டிக் கொடுக்கவுமே உங்கள் ஓட்டுகளைப் பொறுக்கி இந்த அரசைக் கட்டியெழுப்பியுள்ளோம் என்று. ஜஹாங்கிர் ஒரு வகையில் நேர்மையானவன் சொல்லிவிட்டுச் செய்தான். இவர்களோ நம்ப வைத்து கழுத்தறுக்கிறார்கள். இவர்கள் காயடிக்கப் பட்ட நாய்களைப் போல. ஏகாதிபத்திய அந்நிய எஜமானர்களின் காலை நக்கிப் பிழைக்கும் இழிமக்கள். அடிமைத்தனம் இவர்களுக்கு ரத்தச் சொத்துரிமை. அறுப்புக்குப் போகும்
ஆடுகள் போல் மக்கள் இன்னும் இந்த நயவஞ்சகர்களை நம்புகிறார்கள்.
இந்த அரசும் ஒட்டுப் பொறுக்கிகளும் இவர்களின் அதிகாரிகளும் போலீசும் இன்னபிற இயந்திரங்களும் சுற்றிச் சுற்றி தன் சொந்த மக்களுக்கே ஆப்பு வைக்கிறது.
ஏகாதிபத்தியங்களின் இந்த சுரண்டல்கள் நீடித்து நிலைக்க வேண்டுமென்றால் உள்நாட்டுக் கருங்காலிகள் அவசியம். காலனிய இந்தியாவில் காங்கிரசு எப்படி கருங்காலிக் கூட்டத்தால் கட்டியமைக்கப் பட்டதோ அதே போல் மறுகாலனிய இந்தியாவில் பார்ப்பனவாதிகள் ஏகாதிபத்தியங்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு எதிர்ப்புகளை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்..
ஆப் டிராயர் அரை லூசுகளான RSS காரர்கள் பேசுவதோ சுதேசியம். பிரச்சாரக் வாஜ்பேயின் அரசிலோ பொதுத்துறையை தாரை வார்க்க தனியாக ஒரு அமைச்சர். அத்தனை ஆண்டுகளாக இவர்கள் மாட்டிக் கொண்டு திரிந்த சுதேசி முகமூடி ஆறாண்டுகள் வாஜ்பேயி அரசாண்டதில் கிழிந்து தொங்கியது. ஒரு பக்கம் சுதேசி பொருட்களுக்கான பட்டியலை குருமூர்த்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பார் இன்னொரு புறம் ஒவ்வொரு பொதுத்துறையையும் உள்நாட்டுத் தொழில்களையும் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களும் கபளீகரம் செய்து கொண்டே இருக்கும். குருமூர்த்தியின் வேலை ரொம்ப சிம்பிள் - அருண்ஷோரியிடம் கேட்டு விட்டு அடுத்த வருடம் புதிதாக ஒரு பட்டியலைத் தயார் செய்து விடுவார். அவ்வப் போது சுதேசி ரதம் ஒன்றை ஓட்டி பிலிம் காட்டினால் போதும் - மக்கள் மடையர்கள் தானே நம்பி விடுவார்கள்.
சில வருடங்கள் முன் இரண்டு ரூபாய் விலையில் பாரத மாதா படத்தை ஸ்டிக்கர்களாகப் போட்டு வீடு வீடாக விற்றுக் கொண்டிருந்தார்கள் RSS லூசுகள். அப்போது நடந்து கொண்டிருந்தது வாஜ்பேயி அரசு. அவர்கள் சிம்பாலிக்காக தங்கள் தொண்டர்களிடம் சொன்னது இது தான் - “நாங்கள் பாரத மாதாவை ஹோல்சேலாக ஏகாதிபத்தியங்களிடம் விற்றுக் கொண்டிருக்கிறோம்; நீ ரீடைலாக ஸ்டிக்கரை மட்டும் விற்றுக் கொள்” - என்று.
இந்தத் துரோகிகள் தான் தேசபக்தர்களாம்!.. இந்த நாய்கள் தான் இடதுசாரித் தனத்தை மீட்டெடுக்கப் போகிறார்கள் என்று இங்கே ஒருவர் கிச்சுக் கிச்சு மூட்டுகிறார்.
எதிரி யாரென்றும் தெரிந்து விட்டது. துரோகிகள் வேஷமும் கலைந்து விட்டது.. ஆனால் இன்னும் உங்களில் சிலர் மட்டும் உறக்கத்தில், நுகர்வுக் கலாச்சார களிவெறியாட்டத்தில் திளைத்துக் கிடக்கிறீர்கள். நம் தலைக்கு மேல் வெள்ளமல்ல ஒரு கடலே நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
-
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
http://vanajaraj.blogspot.com/2006/11/blog-post_26.html
|
|
|