வாசகர்களுக்கு வணக்கம்!
பூங்கா - இணையத்தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் உங்கள் திரைகளில் ஒளிர்கிறது.
பூங்கா - வலையிதழ்இணையத்தமிழின் முதலாவது தானியங்கித்திரட்டி என்ற ஆரம்பநிலையைக் கடந்து, அடுத்தபடியிலே தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் நோக்குகிறது. இக்கவனிப்பினூடாக தமிழ்ப்பதிவர்களின் பல்வேறு துறைநிபுணத்துவத்தை அடையாளங் கண்டு பதிவு செய்யத்தூண்டவும் மொழிவெளிப்பாட்டின் பல்வேறு கலைப்பரிமாணங்களைப் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கவும் சமூக அக்கறையுள்ளவர்களை ஒன்றிணைக்கவும் வேண்டிய தொடர்ச்சியான தேவையை நிறைவேற்றலாமெனத் தமிழ்மணம் திடமாக நம்புகிறது.எக்கோணத்திலிருந்தும் வரும் கருத்துகளுக்கும் பேதமின்றி, தமிழ்மணவிதிகளுக்கு முரண்படாத வகையிலே இடமளிப்பதனால், பூங்கா மூலம் நடையொழுங்கு, உள்ளடக்கம், வடிவ நேர்த்தி, தகவல் புதுமை, வெளிப்பாட்டு உத்தி போன்றவற்றைப் பதிவர்கள் மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தரமான எழுத்துக்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு அத்தகைய பதிவுகளைச் சுலபமாக அடையும் வழியாகவும் பூங்கா விளங்குமென உறுதியாக நம்புகிறோம்.தமிழ்மணமும் பூங்காவும்தமிழ்மணம் என்பது அணையில்லாப் பேராறு. தமிழ்ப்பரப்பில் உலகெங்கும் பெய்கின்ற சிந்தனைத்துளிகள் அத்தனையும் ஒன்றிணைந்து பிரவகித்து வருகிற இணையத்தின் பொன்னி. கரை மோதிப் புரண்டசைந்து ஆர்ப்பரித்து வரும் ஆடிப்பெருக்கு; மனிதக்கரங்களும் கறைகளும் படாதது.பூங்கா வலையிதழ் நதியின் ஆழமும் அமைதியுங் கொண்ட ஆடுதுறை. மூழ்கிக் குளிப்பதற்கும் நீந்திக் களிப்பதற்குமாய் வெட்டப்பட்ட செய்குளம். வேண்டின், இதன் வழி நீந்தி தமிழ்மணம் என்ற ஜீவநதியையும் அடையலாம்; உங்களைத் தடுப்பவர் எவருமிலர்.பதிவுகளைப் பூங்காவிலே சேர்க்கத் தருதல்பூங்கா, இலாபநோக்கற்ற, சமூக, இலக்கிய விழிப்புணர்வு கருத்துகளை உள்ளடக்கிய ஒரு மாற்றூடக இதழ். இதில் வெளிவரும் படைப்புகளுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படுவதில்லை.பூங்கா ஆசிரியர் குழு பதிவுகளை தமிழ் மணத்தின் விதிமுறைக்கு உட்பட்டு, தமிழ்மணத்தினால் திரட்டப்படும் பதிவுகளிலிருந்து தெரிவு செய்யும். பூங்கா ஆசிரியர் குழுவின் பதிவுத்தேர்வுகளே இறுதியானவை.தமிழ்மணத்தில் வெளிவரும் அனனத்து வகை பதிவுகளிலிருந்தும் ஆசிரியர்குழுவுக்குச் சிறந்ததெனத் தோன்றும் பதிவுகள் தெரிவு செய்யப்படும். தற்சமயம் இருக்கும் வகைப்பாடுகளில் அனைத்திலுமிருந்து தரமான பதிவுகளை பூங்கா வலையிதழ் உள்வாங்கும். இதற்கான ஒப்புதல் வலைப்பதிவர்களிடமிருந்து பெறப்படும். வலைப்பதிவர்கள் தங்கள் பதிவுகள் பூங்காவின் தேர்வுக்கு உள்ளாகி வெளிவர விருப்பம் கொண்டால், பதிவுகளைத் தமிழ்மணத்திலே திரட்ட அறிவிக்கும்போதே ஒப்புதல் தரும்வகையிலே தமிழ்மணம் மாறுதலைத் தற்போதைய அமைப்பிலே செய்யும்.
வலைப்பதிவர்கள் தமக்கே உரிமைகொண்ட, தாமாகவே எழுதிய, படம்பிடித்த, வரைந்த, ஒலித்த ஆக்கங்கள்மட்டுமே தேர்வுக்குக் கவனிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் பதிவருக்குச் சொந்தமற்றவையென அறியப்படுமிடத்து அறிவித்தலுடன் விலக்கப்படும். பதிவர்கள் இவ்வகையான சொந்தப்பதிவுகளை தமிழ்மணத்திற்கு அறிவிக்கும்போது பயன்படுத்தும் “வகைப்படுத்தல்” பக்கத்திலே பூங்காவிலே சேர்க்க அனுமதி கேட்கப்படும். அங்கே உங்கள் பதிவை பூங்காவிற் சேர்த்துக்கொள்ளச் சம்மதம் என்றால் நீங்கள் தேர்விலே எந்த மாற்றத்தினையும் செய்யாமல் அப்படியே அனுப்பினால் போதுமானது. உங்களுக்குச் சம்மதமில்லை என்றால் மட்டும் “சம்மதமில்லை” என்பதைத் தெரிவு செய்து அனுப்பவேண்டும்.
பூங்காவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எப்பதிவின் உரிமையும் அதனை ஆக்கிய வலைப்பதிவரிடமே எப்போதுமிருக்கும். எதிர்காலத்தில், ஆண்டின் மிகச்சிறந்தபதிவுகளைத் தேர்ந்தெடுத்து, அச்சுநூலாக்கும் திட்டமும் கருத்தளவிலே தனக்கு உண்டென்பதை இங்கே தமிழ்மணம் குறிப்பிட விரும்புகிறது. பூங்காவில் வெளியிட விருப்பம் தெரிவிக்காத பதிவர்களின் பதிவுகள் பூங்காவில் வெளிவரா.
பூங்காவின் உள்ளடக்கம் :
நிகழ்வுகள், அரசியல், அறிவியல்,செய்தி விமரிசனம், தொழில்நுட்பம், பொருளாதாரம், இலக்கியம், நூல் அறிமுகம்/விமர்சனம், வரலாறு மற்றும் பலவேறுபட்ட விடயங்கள் தொடர்பான நல்ல பதிவுகளையும் பூங்கா வெளியிடும். ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் பதிவுகளுக்கு எண்ணிக்கை வரையறை எதுவும் இல்லை. பதிவரினாலே அனுமதி தரப்பட்ட தரம்வாய்ந்ததெனத் தோன்றும் படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பெறும்.
பூங்கா இதழில், தேவைக்கேற்ப புதிய பிரிவுகளை சேர்க்கவோ, முன்பிருந்த பிரிவுகளை விலக்கவோஆசிரியர் குழுவிற்கு முழு உரிமையுண்டு.
பூங்காவுக்குப் பதிவுகளினைத் தேர்ந்தெடுத்தல்:
ஒரு வாரத்தின் வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரத்தின் வியாழக்கிழமை வரை தொகுக்கப்படும் பதிவுகள், தேர்ந்தெடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று பூங்காவிலே வெளியிடப்படும். சிறந்த படைப்புகள் என ஆசிரியர் குழு பரிந்துரைக்கும் படைப்புகள் குறித்த வாரத்திற்கு முன்னதாக வெளிவந்திருந்தாலும், அவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்காவிடின், காணப்பட்ட வாரத்து இதழில் இடம்பெறும்.
தமிழ்மணம் நட்சத்திரங்களின் பங்களிப்பின் தடங்கள் பூங்காவிலும் இருக்க வேண்டுமெனத் தமிழ்மணம் உணர்வதால், நட்சத்திரங்கள் தாம் சேவை செய்யும் வாரத்துக்கு முந்தைய வாரத்திலிருந்து தேர்வு செய்யும் பதிவுகளும் அவர்கள் மின்னும் வாரத்திலே வெளிவரும் பூங்காவில் இடம்பெறும். நட்சத்திர தெரிவுகள் இடம்பெறும் சிறப்புப்பக்கங்கள் “நட்சத்திர தேர்வு” என குறிப்பிடப்படும். நட்சத்திரங்கள் பல துறைகளிலிருந்தும் துறைக்கு ஒன்று என, தாம் சிறந்ததெனக் கருதும் ஐந்து பதிவுகளை ஆசிரியர் குழுவிற்கு அவர்கள் அனுப்பினால் அவற்றிலிருந்து இரண்டு பதிவுகளைப் பூங்கா வெளியிட விரும்புகிறது.
இதுவரை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட பதிவுகளிலிருந்து மிகச் சிறந்த இடுகை என வாசகர்கள் எதையேனும் எண்ணினால் அதை தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்கலாம். வாசகர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும் தமிழ்மணத்தைப் போன்றே பூங்காவும் ஒரு பாலமாகச் செயற்படும். எனவே இதழ் பற்றிய கருத்துக்கள், பதிவுகள், மேம்பாட்டு உத்திகள் அனைத்திலும் உங்கள் பங்களிப்பையும் அன்புடன் தமிழ்மணம் கோருகிறது.
பூங்கா பக்கமும் தொடர்பும்
பூங்காவின் முதல் இதழ் இன்று, செப்டெம்பர், 18 2006 ல் வெளியாகிறது. தமிழ்மணம் தளத்திலே பூங்கா இதழ்ப்பக்கத்தின் முகவரி விரைவிலே வெளியிடப்படும். பூங்கா ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ள
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி.
|