தஞ்சைநிலப்பரப்பிற்கும் சாதியமைப்பின் இயங்கியலுக்கும் பாரிய தொடர்புகள் உள்ளன. நந்தனாரின் ரத்தம் படிந்த சரித்திரம் அதைச்சொல்லும். வெண்மணியின் ஓலமும் அதை எதிரொலிக்கும். சாணிப்பால், சவுக்கடி போன்ற தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராக பி.சீனிவாசராவ் போன்ற தோழர்கள் களமிறங்கியதும் இங்குதான். இப்போது அந்த வரிசையில் தற்போது திருச்சி மாவட்டத்திலிருக்கும் சிறீரங்கத்தில் சாதியொழிப்பிற்காய்த் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அய்யா பெரியாரின் சிலை இந்துமத வெறியர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக பூணூல் அறுப்பு, சிலை உடைப்பு, சென்னை அயோத்தியாமண்டபத்தின் மீது குண்டுவீச்சு போன்ற எதிர்வினைகள் நடந்திருக்கும் சூழலில் இவற்றுக்கெல்லாம் காரணமாகக் குற்றம்சாட்டப்படும் பெரியார்திராவிடர்கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணியைச் சந்தித்தோம்.
பெரியார் சிலை உடைப்புக்காக இவ்வளவு கடுமையான சம்பவங்கள் நிகழவேண்டுமா?
முதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். இப்போது நடந்தவைகள் எதிர்வினைகள்தான். முதல்வினையைத் தொடங்கிவைத்தவர்கள் இந்துத்துவவாதிகள்தான். நாகையில் பெரியார்சிலைக்கு செருப்புமாலை போட்டார்கள். காஞ்சியில் காவி வேட்டி கட்டினார்கள். போரூரில் திராவிடர்கழகம், த.மு.எ.ச ஆகிய அமைப்புகள் நடத்திய கூட்டங்களில் கலாட்டாசெய்தார்கள். திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு சந்தனப்பட்டை அணிவித்தார்கள். இப்படித் தொடர்ந்த வினைகளின் எதிர்வினையாகவே இப்போதைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
எப்போதும் வன்முறையை ஆரம்பித்துவைப்பவர்கள் அவர்கள்தான். ஆனால் அதற்கெதிராக எதிர்வினை நிகழும்போது மட்டும் அவர்களைப் பயங்கரவாதிகளாக்கிவிடுவார்கள். இப்படித்தான் முஸ்லீம்கள் 'பயங்கரவாதி'களாக்கப்பட்டார்கள். இப்போது நாங்கள்.
மேலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி வந்தவுடனே பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் பல இடங்களில் இனிப்பு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இடங்களில்தான் இதுமாதிரியான எதிர்வினைகள் நிகழ்ந்திருக்கின்றன. காந்தியார் கொல்லப்பட்டபோதும் இந்துமத வெறியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
பெரியார்சிலை என்பது வெறும் கல்தானே, அதற்காக பகுத்தறிவுவாதிகள் உணர்ச்சிவசப்படலாமா என்ற கேள்வி எழுகிறதே?
பெரியார் சிலை வழிபாட்டிற்குரியதல்ல, அது வழிகாட்டுவதற்குரியது. ஆனால் இந்துத்துவவாதிகள் சாதிக்கும் பார்ப்பனீயத்திற்கும் இந்துத்துவத்திற்குமெதிரான அடையாளமாக உள்ள பெரியார் சிலையை உடைத்து மகிழ்கிறார்கள். தங்கள் சுயமரியாதையை உறுதி செய்த, தங்களுக்காய்ப் போராடிய தங்கள் தோழருக்காக, ஒரு மாபெரும் போராளிக்காக காட்டப்படும் அன்பு, மரியாதை ஆகியவற்றின் விளைவாகவே எதிர்வினைகள் நிகழ்ந்திருக்கின்றன.
ஆனால் பெரியார் சிலையை உடைக்கும்போது அவர்கள் கருப்புச்சட்டை அணிந்துவந்து நயவஞ்சகமாக சிலையை உடைத்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் தோழர்களோ வெளிப்படையாகவே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முதல்வினை வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. எங்களுடைய எதிர்வினையோ அறச்சீற்றத்தின் விளைவாய் எழுந்தது.
"ஏன் கோயில் ராஜகோபுரத்தின்முன் பெரியார்சிலையை வைக்கவேண்டும், மசூதி சர்ச்களின் முன் இவர்கள் வைப்பார்களா என்கிற கேள்வியை பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் முன்வைகிறார்களே?
1975லேயே பெரியார்சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. பிறகுதான் ராஜகோபுரம் வந்தது. எனவே இந்த கேள்வியே அர்த்தமற்றது.
மேலும் தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு கோயில் இருந்துகொண்டுதானிருக்கும். அதையெல்லாம் பார்த்துக்கொன்டு இருக்கமுடியாது. இங்கேயுள்ள பல இந்துக்கோயில்கள் புத்த விகாரங்களையும் சமண வழிபாட்டிடங்களையும் அழித்து உருவானவைதான். எனவே இந்த கேள்வியை எழுப்புவதற்கு இந்துத்துவவாதிகளுக்கு சிறிதும் தகுதி இல்லை. பாபர்மசூதியை இடித்தவர்களுக்கு இதைப்பற்றிக் கேள்வி எழுப்ப என்ன யோக்கியதை இருக்கிறது? முதலில் பாபர்மசூதியைக் கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் பெரியார் சிலை பற்றிப் பேசட்டும்.
இப்போது எங்கள் தோழர்கள் பலர் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பெரியார் சிலையை உடைத்தவர்களும் கூட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறர்கள். கைது நடவடிக்கைகளுக்கு சாதாரண சட்டப்பிரிவுகளே போதுமானவை. தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கருப்புச்சட்டங்கள் தேவையில்லை. பெரியார் சிலையை உடைத்தவர்களுக்கும் சேர்த்துத்தான் இதைச் சொல்கிறோம்" என்கிறார் கொளத்தூர்.மணி.
இசைஞானி இளையராஜா சிறீரங்கம் ராஜகோபுரம் கட்டுவதற்காக லட்சக்கணக்கான பணம் அளித்தும் அவரைக் குடமுழுக்கில் கலந்துகொள்ள அனுமதி மறுத்து அவமானப்படுத்தியது பார்ப்பனியம். 90களில் நடைபெற்ற கருவறை நுழைவுப்போராட்டத்தின்போது அரங்கநாதன் சிலை மீது அம்பேத்கர், பெரியார் படங்களை வைத்து கணக்கு தீர்த்தார்கள் ம.க.இ.க தோழர்கள். இப்போது பெரியார் சிலையை வஞ்சகமாய் உடைத்ததற்கான விலையையே பார்ப்பனர்களும் இந்துமத வெறியர்களும் தமிழ்நாடு முழுக்க தந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே பெரும்பான்மைத் தமிழ்மக்களின் கருத்து.
சந்திப்பு : கவிஞர் சுகுணா திவாகர்
பூங்காவிற்கான தனித்த பேட்டி.
|