|
FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY |
|
|
|
தருமி
|
ஒரு சீரியஸான கேள்வியைப் பற்றித்தான் இந்தப் பதிவு.
தெக்கிக்காட்டான் 'புதைக்கணுமா? எரிக்கணுமா?' அப்டின்னு கேட்டு ஒரு பதிவு போட்டார். எரிக்கணும் அப்டிங்கிறதுக்கு ஓட்டுப் போட்டாச்சு. அது எல்லாம் முடிஞ்ச பிறகு நடக்கிறதுக்கு உள்ள விஷயம். இப்போ அதுக்கு முந்தி நடக்கிற விஷயம் பத்தினது.
கொஞ்ச நாளைக்கு முன்பு என் வயதொத்த ஒருவர், இன்னும் இரு இளைஞர்களோடு எனக்கு ஒரு விவாதம். அதப் பத்தி உங்க கிட்டயும் சொல்லி, உங்க கருத்தையும் தெரிந்து கொள்ளலாமேன்னு ஒரு நினப்புல இந்தப் பதிவு.
வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாமா கூடாதா என்பதுதான் விவாதப் பொருள். ஒரு இளைஞர் மட்டும் என்னோடு கொஞ்சம் உடன்பட்டார். ஆக 50:50 கூட இல்லை; ஒரு 75:25 -ன்னு வச்சுக்குவோம்.
*
* உங்களைப் பெத்து, சீராட்டி, வளர்த்து, ஆளாக்கின பெற்றோரை கடைசிக் காலத்தில் கூடவே வைத்திருந்து காப்பாத்துறத விடவும் பிள்ளைகளுக்கு வேறு என்ன பெரிய கடமை இருக்கு?
* பெத்தவங்களை இல்லங்களுக்கு அனுப்புவது செய்நன்றி கொல்றது இல்லியா?
* அப்படி அனுப்பிச்சா அந்த வயசான காலத்தில அவங்க மனசு என்ன பாடு படும்?
* இதே மாதிரி நீங்க பொறந்ததும் உங்கள அனாதை விடுதியில் சேர்த்திருந்தா நீங்க என்ன ஆயிருப்பீங்க?
* பெத்த குழந்தைகளை நல்லா வளர்க்கிறது பெத்தவங்களோட கடமைன்னா, பெத்தவங்களை கடைசிக் காலத்தில் மனங்கோணாம நல்லா வச்சுக்கவேண்டியது பிள்ளைகள் கடமையில்லையா?
-- இப்படியெல்லாம் ஒரு கட்சி.
*
இன்னொரு கட்சியில் --
* பெத்தவங்க பிள்ளைகளை உருவாக்கணும் அப்டிங்கிறதையும், கடைசிக் காலத்தில் பெத்தவங்களை பிள்ளைகள் தங்களோடு வைத்துப் பராமரிக்கணும் அப்டிங்கிறதும் ஒன்றல்ல. வெறு செண்டிமென்ட் வச்சுக்கிட்டு இதைப் பேசக்கூடாது.
* பிள்ளைகளை வளர்க்கிறது, அதுவும் அவங்க சின்ன வயசுல அவங்கள சுமக்கிறதில் பெற்றோருக்கு வலியிருப்பதில்லை; சந்தோஷம்தான். படுத்துக் கொண்டு பிள்ளையை தன் நெஞ்சின்மேல் வைத்துக் கொண்டிருக்கும்போது பிள்ளை அசிங்கம் செய்தாலும் எந்தப் பெற்றோரும் முகம் சுளிப்பதுண்டா என்ன? அதை நினைவில் வைத்து பிள்ளை வளர்ந்த பிறகு அதை சந்தோஷமாய் பிள்ளையிடம் பகிர்ந்து கொள்ளாத பெற்றோர் யார்? ஆனால் வயதான தாயோ, தகப்பனோ படுக்கையே எல்லாமுமாய் ஆகும்போது அதை சாதாரணமாய் - சந்தோஷமாக இல்லாவிட்டாலும் - எடுத்துக் கொள்ள முடியுமா? எடுத்துக் கொண்டாலும் எத்தனை நாளைக்கு அந்தப் பணியை முகம் சுளிக்காமல் செய்ய முடியும்?
* பிள்ளைகளைக் கூட விடுங்கள்; பேரப் பிள்ளைகளை நல்லாயிருக்கும்போது கொஞ்சி விளையாடிய தாத்தா, பாட்டி நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானால் எந்த பேரப்பிள்ளை இப்போதும் தாத்தா பாட்டியைக் கொஞ்சும்?
* அதைவிடவும் அவர்கள் காலத்துக்குப் பிறகு தாத்தா பாட்டி நினைவு வந்தாலே அந்தக் கஷ்டமான காலங்கள் அதற்கு முந்திய நல்ல இனிய நினைவுகளைக் கூட அழித்து விடுமே?. தாத்தா பாட்டி என்றாலே பின்னாளில் அந்தக் கஷ்டப் படுத்திய நாட்கள்தானே பேரப்பிள்ளைகளின் நினைவில் வரும். அது தேவையா? அதைவிடவும் இனிய நினைவுகளை மட்டுமே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மனதில் தங்க வைக்கவேண்டியது பெரியவர்களின் கடமையல்லவா?
* வயதான காலத்தில் எதற்காக மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டும்? காசு கொஞ்சம் கொடுத்து இல்லங்களில் இருந்தால் நாம் பிள்ளைகளுக்குப் பாரமாக இல்லை என்ற நினைவே சந்தோஷம் கொடுக்காதா?
* பிள்ளைகள் சிறுசுகளாக இருக்கும்போது அவர்களுக்காகப் பெற்றோர்கள் பல 'தியாகங்கள்' செய்திருக்கலாம். அதற்காக இன்று பிள்ளைகளும் அதேபோல் தியாகங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் வாழ்க்கையும், பாசமும் வெறும் வியாபாரமாகி விடாதா? நேற்று உனக்குக் கொடுத்தேன்; இன்று நீ எனக்குக் கொடு என்பதா வாழ்க்கை. நேற்று உன்னைத் தாங்கினேன்; இன்றும் நான் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன் என்பது தானே நல்ல பாசமாக இருக்க முடியும்?
* இல்லத்தில் இருந்து கொண்டு பிள்ளைகளோடு பாசமாக இருக்க முடியாதா, என்ன? படிக்கிற காலத்தில் பிள்ளைகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் பிள்ளைகளை விடுவதைப் போலத்தானே இதுவும்.
* ஒரு காலத்தில் நம் சமூகத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. அப்போது வயதான பெற்றோரை வீட்டோடு வைத்திருப்பது எளிதாயுமிருந்திருக்கும். அப்போது அதுதான் சரியானதாயிருந்திருக்கும். ஆனால் இன்று nuclear family என்றான பிறகு, வாழக்கை ஒரு விரைந்த ஒன்றான ஆன பிறகு என்னையும் உன் தோளில் தூக்கி கொண்டே போ என்று பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் சொல்வது எந்த அளவு சரி? மாறி வரும் காலத்திற்கு ஏற்றாற்போல் மக்கள் மனநிலையும் மாற வேண்டாமா?
* உண்மையிலேயே பிள்ளைகள் மேல் பாசம் உள்ள பெற்றோர் முதியோர் இல்லங்களில் தங்குவதற்கு தாங்களாகவே பிள்ளைகளக் கட்டாயப்படுத்தியாவது தயாராக வேண்டாமா?
*
இதில் நான் இரண்டாவது கட்சி..
இப்போ சொல்லுங்கள்.. நீங்கள் எந்த கட்சி?
*
http://dharumi.blogspot.com/2006/12/192-for-eyes-of-senior-citizens-only.html
|