|
ஆழியூரான்
|
உலக மயமாக்கம் என்ற பிணம்திண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக நம் மண்ணையும், வளங்களையும் சூறையாடியதுபோக, இப்போது நேரடியாகவே உயிர்குடிக்க ஆரம்பித்து விட்டது. நெல்லை கங்கைகொண்டானில் அமைந்திருக்கும் கோக் ஆலையின் கழிவு நீரை பருகி ஐநூறுக்கும் அதிகமான ஆடுகள் மடிந்துபோயிருக்கின்றன. வாழ்வின் கடைகோடியில் இருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரம் நிர்மூலப்படுத்தப்பட்ட கொடுமைபற்றி எந்த அக்கரையுமின்றி, மதுரையில் டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.
கங்கைகொண்டான் - பஞ்சாயத்தில் வரும் ராஜபதிக்குள் நுழைந்தாலே வேலிகளிலும், தெரு முற்றங்களிலும் இறந்துகிடக்கும் ஆடுகள் ரத்தம் கொதிக்க வைக்கின்றன. கோக் தொழிற்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது இந்த ராஜபதி கிராமம். அமெரிக்க அடிவருடிகளுக்கான 'கழிவு நீரை' தயாரிக்கும் கோக் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறது. இவை அனைத்தும் கோக் ஆலையை ஒட்டி செல்லும் வாய்க்காலில்தான் கலக்கிறது. இத்தனை நாட்களாய் அந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் ராஜபதி கிராமத்தைச் சென்றடையவில்லை. தற்போது பெய்த மழையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கோக், தனது கழிவு நீரையெல்லாம் அந்த வாய்க்காலில் திறந்துவிட்டுவிட்டது.
வழக்கமாக விவசாயிகள் தங்களின் ஆடுகளை அந்த வாய்க்காலை ஒட்டிய ஏரியாவில்தான் மேய்ப்பார்கள். அந்த ஆடுகள் வாய்க்கால் தண்ணீரை குடித்துவிட்டன. விளைவு... வரிசையாக ஆடுகள் செத்து மடிந்துவிட்டன. இதுவரைக்கும் செத்திருக்கும் ஆடுகளின் எண்ணிக்கை மட்டும் ஐநூறுக்கும் மேல் இருக்கும். இந்த எண்ணிக்கை இப்போது இன்னும் அதிகமாகியிருக்கும். ஒவ்வொரு ஆடும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போக கூடியது. அதை நம்பிதான் பிள்ளைகளுக்கு திருமணம்,படிப்பு என்று இவர்களின் மொத்த வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது.

செத்துமடிந்த ஆடுகளை; தங்கள் வாழ்வை இதுவரைக்கும் செழிக்க செய்த ஜீவன்களை அப்படியே வேலியோரங்களில் தூக்கிப்போட்டுவிட்டு நெஞ்சு கணக்க வீடு திரும்பும் அனைத்து விவசாயிகளின் மனதிலும் கங்கு எரிந்துகொண்டிருக்கிறது. "அந்த கோக்குக்காரன் வந்துதாம்யா எல்லாத்தையும் கொன்னுபுட்டான்.. அவன் வந்து இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகலை.. அதுக்குள்ள ஆடுகல்லாம் செத்துப்போச்சு.. இன்னும் ரெண்டு வருஷத்துல மனுஷ மக்களையும் சுடுகாட்டுக்கு அனுப்பிட்டுதான் ஓய்வான் போல.." என்று மனம் வெதும்பி புலம்புகின்றனர் அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மைக்குள்ளான எளிய மக்கள்.
எப்போதும் எளியவர்களையும், கிராமங்களையும் கொஞ்சமும் மதிக்காத அரசு அதிகாரிகள் ஆடுகள் இறந்தவுடன் பதறிக்கொண்டு ராஜபதிக்கு ஓடிவந்தார்கள். வந்து 'இது நீலநாக்கு நோய். கோக் கழிவிற்கும் இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை..' என்று அவர்கள் சொன்னது யாருடைய தூண்டுதலில் என்பதை கிராம மக்கள் அறிந்தே இருக்கின்றனர்.
''எல்லாம் காசு பொறுக்கி பயலுவொ... எலும்பு துண்டு கிடைக்குமான்னு அலையுதானுவொ.. டாக்டர் பயலுவலாவது நீலநாக்கு நோய்ன்னு சொன்னதோட விட்டான். இந்த போலீஸ்காரப்பயலுவொ இருக்கானுவொ பாருங்க.. ரவை பன்னெண்டு மணிக்கு கதவைத் தட்டி, 'ஆடு செத்ததுக்கு பணம் தர்றோம்'னு சொல்லி, வெத்து பேப்பர்ல கையெழுத்துக் கேக்கான். யாரும் கையெழுத்துப் போட முடியாதுனு சொன்ன பொறவு ஓடி போயிட்டானுவொ. அவனுவொளை கட்டி வச்சு தோலை உரிச்சிருக்கனும். இவனுவொ மாதிரி ஆளுக குடுக்குற தைரியத்துலதான அந்த வெளிநாட்டுக்காரன் இங்க வந்து இந்த அட்டுழியம் பண்ணுதான்..?" என்று கொதிப்பில் வெளிவரும் வார்த்தைகள் செயல்களாக மாறுவதற்கு அதிக நாள் பிடிக்காது.
எங்கிருந்தோ வந்த இந்த அமெரிக்க நாய்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சிதைத்த கொடுமைக்கு, இங்கிருக்கும் பலபேர் பின் புலமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கோக்கின் கழிவு நீர் அண்டாத தூரப்பகுதிகளில் சொகுசாக வாழ்கின்றனர். இன்று ஆடுகள் பலி பீடத்தில் ஏற்றப்பட்டது போன்று நாளை கோக்கிற்கு அவசர பலியாடுகள் தேவை என்றால், இந்த காவாளிகளை முதல் ஆளாக பலியாக்க கோக் தயங்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
http://nadaivandi.blogspot.com/2006/12/blog-post_16.html
|