பொன்ஸ் ஒரு அருமையான பதிவை தனது நட்சத்திர வாரத்தில் கொடுத்திருந்தார்.
ஹார்ட் அட்டாக்கிற்கும், கார்டியாக் அரெஸ்டிற்கும் என்ன வேறுபாடு என ஒரு கேள்வி அங்கு எழுந்தது.
அதைத் தொடர்ந்து இதயம் பற்றி எழுதலாம் என நினைத்து இந்தப் பதிவு.
இது ஒரு விரிவான பதிவல்ல.
சரி!
இதயம் என்பது என்ன?
எலும்புகளே இல்லாத ஒரு சதை உறுப்பு.
நான்கு அறைகள் கொண்டது.

[இது இதயத்தின் குறுக்குத் தோற்றம்.
உங்களுக்கு எதிர் தோற்றம் இது! உங்களது இடது, வலது அல்ல!
மேலே தெரியும் சிவப்பு பகுதி அயோர்டா எனப்படும் மஹாதமனியின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
அதன் கீழே நீல நிறத்தில் காண்பது வலது ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள்.
சிவப்பு நிறத்தில் காண்பது இடது ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள்.
இடையில் திறந்து மூடும் வால்வுகளைக் காணலாம்.]
வலது, இடது ஆரிக்கிள்.[right and left auricle]
வலது, இடது வென்ட்ரிக்கிள்.[right and left ventricle]
வலது பக்கம் கெட்ட ரத்தத்தை வாங்குகிறது.
இடது பக்கம் நல்ல ரத்தத்தை அனுப்புகிறது.
வலது ஆரிக்கிள் கெட்ட ரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வாங்குகிறது.
அதை வலது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.
அங்கிருந்து அது நுரையீரலுக்கு அனுப்பி ரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.
அங்கிருந்து அது இடது ஆரிக்கிளை அடைகிறது.
இடது ஆரிக்கிள் இந்த சுத்த ரத்தத்தை, இடது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.
இடது வென்ட்ரிக்கிள் அதை மீண்டும் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்புகிறது.
இது எப்படி நிகழ்கிறது?
வலது ஆரிக்கிளின் மேல் பகுதியில் சைனோஏட்ரியல் நோட் [sino-atrial node] என ஒரு மின்சார அதிர்வை நிகழ்த்தும் உறுப்பு இருக்கிறது.
இதன் அதிர்வு, வலது ஆரிக்கிளின் கீழ்ப்பகுதியில் ஏட்ரியோ வென்ட்ரிக்கிள் நோட்[atrio-ventricle node] என்பதை "அவனுடைய கட்டுகள்" [Bundle of His] மூலம் அடைகிறது.
இந்த இடைவெளியில், ரத்தம் கீழ் வென்ட்ரிக்கிளை அடையும் நேரத்தில்தான் இதயத் துடிப்பு நிகழ்கிறது.
இதுதான் லப் டப்!
லப்!
இதயம் நிரம்புகிறது.
டப்!
இதயம் வெளியனுப்புகிறது.
இந்த இதயம் இவ்வாறு துடிப்பதற்கு, அது இயங்க வேண்டும்!
அதற்குத் தனியாக ரத்த நாளங்கள், இதயத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனை
அனுப்ப இருக்கின்றன.
இவற்றிற்கு கரோனரி நாளங்கள் [caronory arteries] எனப் பெயர்.
இவற்றில் ஏற்படும் கோளாறுகளால் இதயத் தாக்குதல் [heart attack] நிகழலாம்.
இது தவிர, ஆரிக்கிளுக்கும், வென்ட்ரிக்கிளுக்கும் இடையே, சில வால்வுகள் [valves] இருக்கின்றன.
மைட்ரல், ட்ரைகஸ்பிட் வால்வுகள்[mitral, tricuspid valves] ஆரிக்க்கிளிலிருந்து வென்ட்ரிக்கிளுக்கு ரத்தத்தை அனுப்ப வழி செய்கிறது.
அயோர்டிக், பல்மோனரி வால்வுகள் [aortic, pulmonary] ரத்தத்தை இதயத்திலிருந்து வெளியே அனுப்ப உதவுகின்றன.
இதில் ஏற்படும் கோளாறுகளாலும் இதயநோய் உ ண்டாகலாம்.
இதயம் இருக்கின்றதே தம்பி!
இனி, இந்த இதயம் எவ்வாறு இயங்குகிறது எனப் பார்க்கலாம்.
வலது, இடது பக்கங்களில் இரு, இரு அறைகளாக நான்கு அறைகள் கொண்டது இதயம்.
ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி வேலை இருக்கிறது.
ஒன்று நிகழும் போது அடுத்தது நிகழ்ந்தால் எல்லா ரத்தமும் ஒன்றாகக் கலந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இதற்காகத்தான் வால்வுகள் ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் இடையே இருக்கின்றன.
ஒரு அறைக்குள் ஒரு பணி நிகழும்போது, அது மட்டுமே நிகழ இவை உதவுகின்றன.
1. உடலின் எல்லாப் பாகங்களிலும் இருந்தும் அசுத்த ரத்தம் வலது ஆரிக்கிளை [Right auricle] அடைகிறது. இதைக் கொண்டுவரும் இரு ரத்தக் குழாய்களின் பெயர் சுபீரியர், இன்ஃபீரியர் வீன கேவா [Superior & Inferior Vena Cava]
2. இந்த ரத்தம் வலது ஆரிக்கிளில் இருந்து வலது வெண்ட்ரிக்கிளை [Right Ventricle] ட்ரை கஸ்பிட் வால்வைத் [Tricuspid valve] திறந்து கொண்டு அடைகிறது.
வலது வெண்ட்ரிக்கிள் முழுதுமாக நிரம்பியதும், ட்ரை கஸ்பிட் வால்வ் தானாகவே மூடிக் கொள்ளும்.
இதன் மூலம், வலது வெண்ட்ரிக்கிள் அடுத்து இந்த ரத்தத்தை வெளி அனுப்பும் போது, திரும்பவும் மேலே வலது ஆரிக்கிளுக்குச் செல்ல முடியாது.

3. இப்பொது பல்மோனிக் வால்வின் [Pulmonic Valve] வழியே ரத்தம் பல்மோனரி ஆர்ட்டெரிக்கு [Pulmonary Artery] சென்று நுரையீரலை [Lungs] அடைகிறது .
இவையனைத்தும் இதயத்தின் வலது பக்கத்தில் நிகழ்வன.
அசுத்த ரத்தம் நுரையீரலில் சுத்திகரிக்கப் படுகிறது.
[இது எவ்வாறு என்பதைத் தனியே பார்க்கலாம்.]
இனி வருவது இடது பக்க நிகழ்வுகள்.
4. பல்மோனிக் வெயின் [PulmonicVein] எனும் ரத்தக் குழாய் நுரையீரலில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட, பிராணவாயு நிரம்பிய சுத்த ரத்தத்தை இடது ஆரிக்கிளுக்கு[Left Auricle] கொண்டு வந்து நிரப்புகிறது.
5. ஒரு குறிப்பிட்ட அளவு ரத்தம் நிரம்பியதும் இதன் அழுத்தத்தால், இடது ஆரிக்கிளுக்கும், வெண்ட்ரிகிளுக்கும் இடையில் இருக்கும் மைட்ரல் வால்வ் [Mitral Valve] கீழ் நோக்கித் திறக்கிறது.
6. வலது ஆரிக்கிள் சுருங்கி ரத்தத்தை இடது வெண்ட்ரிகிளுக்கு அனுப்புகிறது.
7..வெண்ட்ரிகிள் நிரம்பியதும், மைட்ரல் வால்வ் தானாக மேல்நோக்கி மூடிக் கொள்ளுகிறது . [இதுவும் வெண்ட்ரிகிள் சுருங்குகையில், ரத்தம் மேலே செல்லாமல் இருக்க ஒரு தற்காப்பு ஏற்பாடே.]
8. இப்போது, அயொர்டிக் வால்வ்[Aortic Valve] திறந்து வெண்ட்ரிக்கிள் சுருங்கி ரத்தம் அயோர்டா[Aorta] எனும் மஹா தமனியின் வழியே உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லுகிறது.
என்ன! தலை சுற்றுகிறதா?!
இந்த நிகழ்வுகள் தொடர்சியாக உடல், இதயம், நுரையீரல், இதயம், மீண்டும் உடல் என்று விடாமல் நடந்து கொண்டிருக்கிறது!
நிமிடத்திற்கு 72 முறை என்னும் அளவில், ........வால்வுகளின், மற்றும் ரத்த அழுத்தத்தின் துணை கொண்டு!
நுரையீரலில் நடப்பது என்ன?
பல்மோனரி ஆர்டெரி[Pulmonary Artery] வழியே நுரையீரலை [Lungs] அடைந்த அசுத்த ரத்தம், காப்பிலரி வெஸ்ஸெல்கள்[Capillary Vessels] எனப்படும் சிறு சுத்த ரத்தக் குழாய்கள் வழியே கரியமில வாயுவை [Carbo dioxide] நுரையீரலின் காற்றுப் பைகளுக்குக் கொடுத்து, அங்கிருந்து நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே நிரம்பிக்கிடக்கும் பிராணவாயுவை[Oxygen] பெற்றுக் கொள்கிறது. இந்தக் கரியமில வாயுதான் நமது சுவாசத்தின் வழியே வெளியேறுகிறது.

உடலில் என்னதான் நடக்கிறது?
நம் உடலில் சுத்த, அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்ல தனிதனி ரத்தக் குழாய்கள் இருக்கின்றன.
ஆர்டெரி[Artery] எனப்படும் குழாய்கள் சுத்த ரத்தத்தையும், வெயின்[Vein] எனப்படும் குழாய்கள் அசுத்தரத்தத்தையும் உடல் முழுதும் கொண்டு செல்லுகின்றன.
இவை இரண்டுமே மேலும் சிறு சிறு குழாய்களாகப் பிரிந்து உடலின் பல இடங்களையும் அடைகின்றன.
உடலுக்குத் தேவையான பிராணவாயு, மற்ற ஊட்டச் சத்துகளை ஆர்டெரிகளும்,
கழிவுப் பொருட்களை, பிராணவாயு குறைந்த ரத்தத்தை வெயின்களும் சுமந்து செல்லுகின்றன.
இவை இரண்டும் தனித்தனியே ஓடினாலும், 'காபில்லரிகள்'[Capillaries] எனும் மிகச் சிறிய ரத்தக் குழாய்கள் மூலம் இணைக்கப்படுகின்றன.

நம் உடலில் ஓடும் இந்த ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சுமார் 60,000 மைல்கள்.
இவற்றில் ரத்தம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.
இதயமும் தன் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறது!
என்ன சத்தம் இந்த நேரம்!
இதயத்தின் நான்கு அறைகள் இயங்கும் விதத்தையும், அவற்றின் மூலம் ரத்தம் உடலெங்கும் போய்த் திரும்புவதையும் சென்ற பதிவில் பார்த்தோம்!
பொன்ஸ் சொன்ன இதயத் தாக்குதலைப் [Heart attack] பற்றி எழுதவே இத்தொடரை ஆரம்பித்தேன்.
இப்போது இதைப் படிக்கும் வாசகர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் இதயம், ரத்தம், ரத்தக் குழாய்கள் இவற்றைப் பற்றிச் சொல்லிவிட்டு பிறகு இதயத்தைப் பாதிக்கும் நிகழ்வுகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட இதயத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் இதன் மூலம் நாம் பார்க்கலாம்.
இது உங்களுக்குச் சம்மதமெனில் சொல்லவும்.
இல்லையேல், சுருக்கமாகச் சொல்லி உங்கள் நேரத்தைக் காக்கிறேன்!!
இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
பீடிகையை முடித்துவிட்டு பதிவுக்குள் செல்லலாம்!
இன்று இதயத்தின் சத்தம், அந்தத் துடிப்பு Heart Beat] எப்படி நிகழ்கிறது என்பதை இன்று பார்க்கலாம்.
ஆரிக்கிள்கள், வெண்ட்ரிக்கிள்கள் தனித்தனியே இயங்குகிறது எனச் சொன்னேன்.
ஆனால், இவை இரண்டின் இயக்கமும் ஒருங்கே [Simultaneously] நிகழ்கிறது.
அதாவது வலது ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் இரண்டும் ஒரே நேரத்திலும், இடது ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் இரண்டும் ஒரே நேரத்திலும் சுருங்கியும், விரிந்தும் ரத்தத்தை இதயத்துக்குள் பரிமாறிக் கொள்கின்றன.
இவை நிகழ்வது ஒரு மின்சார அதிர்வினால், இயக்கத்தால் [Electrical Impulses]!
ஆமாங்க, மின்சாரம் என்ற ஒன்றை நம் கண்டுபிடிக்கும் முன்னரே, நான் வணங்கும் இறையோ, அல்லது மற்றவர் சொல்லும் இயற்கையோ, இதை நம் உடலில் பல இடங்களில் வைத்திருக்கிறது என்பதே உண்மை!!
இது ஒரு தனி வழிப்பாதை [Special Pathway] மூலம் இதயத்தில் நிகழ்வதால், இதயத் துடிப்பு என்ற ஒன்று நடக்கிறது.
1. ஸைனோ-அயோர்டிக் நோட் [Sino-Aortic Node, SA node ] :
இதை இதயத்தின் தொடக்க ஆட்டக்காரர் [Pace maker] என அழைக்கலாம்!
வலது ஆரிக்கிளில் இருக்கும் ஒரு விசேஷ செல்களின் [Specialized cells] கூட்டமைப்பில் இருந்தது இது துவங்குகிறது.
இவை அனைத்தும் சேர்ந்து கொடுக்கும் அதிர்வினால், வலது, இடது ஆரிக்கிளின் சுருக்கம் ஏற்படுகிறது.
இதன் மூலம், ரத்தம் வெண்ட்ரிக்கிள்களுக்கு அனுப்பப் படுகிறது.
இந்த எஸ்.ஏ. நோடுதான் [SA node] இதயத் துடிப்பின் அளவையும் [rate] தரத்தையும் [rhythm] நிர்ணயிக்கிறது.
எஸ்.ஏ.நோட் ஒழுங்காக இந்த மின்சார அதிர்வை அனுப்பும் இதயத்தை "ஒழுங்காக இயங்கும் இதயம்" [Normally functioning heart]என அழைக்கிறோம்.
2. ஏட்ரியோ-வெண்ட்ரிகுலர் நோட் [Atrio-ventricular node, AV Node] :
ஆரிக்கிளுக்கும், வெண்ட்ரிக்கிளுக்கும் இடையே இருக்கும் ஒரு கூட்டு செல்களே ஏ.வி நோட் [AV Node] என அழைக்கப்படுகிறது.
இதன் வேலை எஸ்.ஏ.நோடின் அளவைத் தரப்படுத்தி [collect®ularize] வெண்ட்ரிக்கிளுக்கு அனுப்ப்வது.
இந்த தாமதம் [delay] ஆரிக்கிளுக்கு ஒரு சிறிய அவகாச முன்னோடியைக் [delay advantage] கொடுக்கிறது, வெண்ட்ரிக்கிள்கள் சுருங்குவதற்கு முன்!
3. ஹிஸ்-பர்கிஞ்ஜி அமைப்பு [His-Purkinje Network]:
இவை ஒரு கூட்டான இழைகள்[fibres]. வலது, இடது வெண்ட்ரிக்கிள்களின் உட்சுவர்களில் ஊடுருவி இருப்பவை. இவை அனைத்தும் சேர்ந்து இயங்கும் போது வெண்ட்ரிக்கிள் இரண்டும் சுருங்கி ரத்தத்தை நுரையீரலுக்கும், உடலின் பல பாகங்களுக்கும், அனுப்ப முடிகிறது.
4. இது நிகழ்ந்து முடிந்ததும், மீண்டும் அடுத்த அதிர்வை எஸ்.ஏ.நோட் அனுப்புகிறது.
இப்படித்தான் இதயத் துடிப்பு நிகழ்கிறது.
சாதாரணமாக, ஒரு நிமிடத்திற்கு 50 முதல் 90 வரை இதயத் துடிப்பு நிகழலாம்.
உடற்பயிற்சி,[exercise] உணர்ச்சி மிகுதி [emotions] ,காய்ச்சல் [fever] போன்ற நேரங்களில் இது அதிகமோ. குறைவோ படும்.
மேலே சொன்னது ஒரு இதயத் துடிப்பைப் பற்றி!
ஆனால், இதுவல்ல நாம் கேட்கும் லப் டப்!!
அது என்ன?
ஆரிக்கிள்களுக்கும், வெண்ட்ரிகிள்களுக்கும் இடையே வலது, இடது பக்கங்களில் தனித்தனி வால்வுகள் இருப்பதைப் பார்த்தோம்!
வலது, இடது ஆரிக்கிள்கள் முழுதும் சுருங்கி, ரத்தத்தை வலது, இடது வெண்ட்ரிக்கிளுக்குள் அனுப்பிய , வெண்ட்ரிகிள்கள் முழுதும் நிரம்பிய,... இன்னும் பல்மோனிக், அயோர்டிக் வால்வுகள் [pulmonic, aortic valves] திறக்காத... நிலையில், ட்ரைகஸ்பிட், மற்றும் மைட்ரல் வால்வுகள் [tricuspid, mitral valves] மேல் நோக்கி 'சட்டென்று' மூடி ஆரிக்கிள், வெண்ட்ரிகிள்களுக்கிடையே ரத்த ஓட்டத்தை நிறுத்தும் ஒலியே "லப்"[lub]!
அதே போல, வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கி முறையே, நுரையீரலுக்கும், உடலுக்கும் ரத்தத்தை அனுப்பியபின், இன்னும் மேலே சொன்ன வால்வுகள் மூடிய நிலையில், வெண்ட்ரிக்கிளுக்குள் ரத்த அழுத்தம் குறைவதால், பல்மோனிக், அயோர்டிக் வால்வுகள் [pulmonic, aortic valves] 'டப்'[dub] என்று மூடிக் கொள்கின்றன!
இதயம் துடிப்பதை ஒரு மருத்துவர் ஸ்டெதாஸ்கோபின் மூலம் இடது பக்க மார்பில் கேட்பதைப் பார்த்திருப்பீர்கள்.
ஒரு நண்பர், "எங்கேயோ பார்த்துக் கொண்டு அலட்டலாக கையைப் பிடித்துப் பார்க்கிறாரே, அது எப்படி?" என ஒரு கேள்வி கேட்டிருந்தார்!!
தன் விரல்களை உள் மணிக்கட்டிற்கு சற்று மேலே, கட்டைவிரலின் அடிப்பாகத்தில், வைத்து ஒரு அதிர்வை "உணர்வதே" அது! அதான் 'அலட்டலாக' எங்கோ பார்க்கிறார்!
இதை நீங்களும் செய்யலாம்!

ஒரு பத்து நொடிகள் இந்த அதிர்வை எண்னவும்.
அதை ஆறால் பெருக்கினால், ஒரு நிமிடத்தில் எவ்வளவு முறை உங்கள் இதயம் துடிக்கிறது என்பதை அளவிட முடியும்.
சற்று உன்னிப்பாக உணர்ந்தால், இது ஒழுங்காக அடிக்கிறதா, இல்லையா என்பதைக் கூட உணர முடியும்!
இதயத்திற்கே ரத்தமா?
"கரோனரி நாளங்கள்" [Caronary Arteries]
உடலின் பல பாகங்களைப் போலவே, இதயமும் திசுக்களால் ஆன ஒன்றே! அதற்கும் பிராணவாயுவும்,[Oxygen] மற்ற சத்துப் பொருள்களும் [Nutrients] வேண்டும்!
அட! இது என்னய்யா புதுக்கதை! "இவருக்கே பாட்டா" என்று நம் பாடகர் எஸ்.பி.பி.யைப் பார்த்து 'காதலன்' படத்தில் ஒரு வசனம் வருமே, அதைப் போல, ரத்தத்தையே அனுப்பும் இதயத்திற்கு இதெல்லாம் தேவையா என ஒரு கேள்வி எழலாம்!
ஆனால், "ஆறு முழுதும் நீர் ஓடினாலும், நாய் நக்கித்தான் குடிக்கணும்" என்பதைப் போல, இதயம் முழுதும் ரத்தம் நிரம்பிக் கிடந்தாலும், அதற்குத் தேவையான சத்துக்களை, அதுவும் சில ரத்தக் குழாய்கள் அனுப்பும் ரத்தத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்!
அவற்றைச் செய்வது "கரோனரி நாளங்கள்" [Caronary Arteries] என அழைக்கப்படும் ரத்தக் குழாய்கள்!
மஹாதமனி[Aorta]யிலிருந்து பிரியும் இரு கரோனரி நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தின் மூலம், பிராணவாயுவையும், மற்ற சத்துப் பொருள்களையும் அளிக்கின்றன.
1. வலது கரோனரி நாளம் [Right Caronary Artery, RCA] வலது ஆரிக்கிளுக்கும், வலது வெண்ட்ரிக்கிளுக்கும் ரத்தத்தைக் கொடுக்கிறது. இது இன்னொரு பிரிவாகப் பிரிந்து இடது வெண்ட்ரிக்கிளின் கீழ்ப்பகுதிக்கும், இதயத்திற்குப் பாதுகாப்பாக மூடியிருக்கும் 'ஸெப்டம்" [Septum] என அழைக்கப்படும் ஜவ்வு சதைக்கும் ரத்தத்தை Posterior Descending Artery[PDA] மூலம் அனுப்புகிறது.
2. இன்னொரு பிரிவான இடது கரோனரி நாளம் [Left Main Caronary Artery] இரு பிரிவுகளாகப் பிரிகிறது.
[அ] இடது ஆரிக்கிளுக்கும், இடது வெண்டிக்கிளின் பக்கங்களுக்கும், பின் பகுதிக்கும் சர்க்கம்ஃப்ளெக்ஸ்[Circumflex artery] நாளமும்,
[ஆ] இடது வெண்ட்ரிக்கிளின் முன் பகுதிக்கும், கீழ்ப் பகுதிக்கும், 'ஸெப்டத்தின்' [Septum] முன் பகுதிக்கும் Left Descending Artery [LDA], எனும் நாளமும்
ரத்தத்தைக் கொடுக்கிறது.
இவை அனைத்தும், மேலும் பல சிறு சிறு நாளங்களாகப் பிரிந்து கிடக்கின்றன.... சும்மா!
ஆம்! இவை எல்லாம் சாதாரணமாக இதயம் இயங்கும் போது, முழுதுமாக மூடிக் கிடக்கும்!
இதயத்திற்குத் தேவையான ரத்தம் சரியான முறையில், பிராணவாயுவை அனுப்ப இயலாத நிலையில், இவைகளில் சில திறந்து, தேவையான ரத்தத்தை இதயத்திற்கு அனுப்பும் வேலையை மேற்கொள்ளும்.
அதாவது, இதயத்தின் முக்கிய நாளங்களில் ஏதேனும் அடைப்பு [block] ஏற்படும்போது, இந்த துணை நாளங்கள்[collaterals] திறந்து, அடைப்பைத் தாண்டி [bypass] இதயத்திற்குத் தேவையான ரத்தத்தைத் தடையின்றி அனுப்பும் வேலையை மேற்கொள்ளுகின்றன.
இதயம் பழுதுபடாமல் ஒழுங்காக இயங்க இந்த ஏற்பாடு உதவுகிறது!
அவ்வளவுதாங்க! இன்னும் ஒரே ஒரு பதிவு, ரத்தம் என்றால் என்ன என்பதைப் பார்த்தபின்,
இவற்றில் ஏற்படக்கூடிய கோளாறுகளைப் பார்க்கலாம்!
ரத்தத்தின் ரத்தமே!
"வாழ்வின் நதி" எனச் சொல்லலாம் இதை!
உடலெங்கும் ஓடி ஒவ்வொரு அவயவமும், அதனதன் வேலையை ஒழுங்காகச் செய்ய உதவிடும் ஓர் அற்புத நதி இது!
இதில் என்னென்ன இருக்கிறது, ஒவ்வொன்றும் என்ன செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது நம்மை நாமே நன்கு அறிந்து கொள்ள உதவும்.
ரத்தம் என்பது செல்களும்,[cells] ப்ளாஸ்மாவும் [plasma] சேர்ந்த ஒரு கலவை.
இதயம் பிராணவாயுவையும்,[oxygen] சத்துப் பொருள்களையும்[Nutrients] ரத்தக் குழாய்கள் மூலம் உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. அங்கிருக்கும் பாகங்கள் இவற்றைப் பெற்றுக்கொண்டு, கழிவுப்பொருள்களைத் திருப்பி அனுப்புகின்றன.
முன்னரே சொன்னபடி, ஒருசாதாரண மனித உடலில் 5 லிட்டர் ரத்தம் ஓடுகிறது.
ப்ளாஸ்மா என்னும் திரவத்தில், சிவப்பு, வெள்ளை அணுக்களும், ப்ளேட்லெட்டுகள் எனும் செல்களும் இருக்கின்றன. கூடவே சத்துப் பொருள்களும்!
சிவப்பு அணுக்கள் பிராணவாயுவை எடுத்துச் செல்லும்.
வெள்ளை அணுக்கள் நோயை எதிர்கொண்டு சண்டை போடும்.
ப்ளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவும்.
சிவப்பு அணுக்கள்: [Red Blood Cells]
ரத்தத்திற்கு நாம் காணும் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை இவையே! ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் [5,200,000]சிவப்பு அணுக்கள் இருக்கின்றன!
பெண்களுக்கு சற்று குறைவாக 4,600,000 அணுக்கள் இருக்கும்.
இதற்குள்தான் நாம் ஹீமோக்ளோபின் [Hemoglobin] என அறியும் புரதப்பொருள் [Protein] இருக்கிறது. இதுதான், பிராணவாயுவை இந்த அணுக்களுக்குள் தக்க வைத்துக் கொள்கிறது.
சுவாசத்தின் மூலம் நாம் இழுக்கும் பிராணவாயு, நுரையீரலில் [Lungs] இருந்து ஹீமோக்ளோபினால் பிணைக்கப்பட்டு, இதயத்தை அடைந்து, ரத்தக் குழாய்கள் மூலம் அனுப்பப்படும் ரத்தத்தில் இருக்கும் இந்த சிவப்பு அணுக்கள் வழியாக உடலின் பல இடங்களையும் செயல்பட வைக்கிறது!
ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா!
இது மட்டும் அல்ல இந்த சிவப்பு அணுக்கள் செய்வது!
பிராணவாயுவை அளிக்கும் அதே நேரத்தில், கழிவுப்பொருளான கார்பன் டைஆக்சைடையும் [carbon di-oxide] திரும்பப் பெற்றுக்கொண்டு, வெயின்களின்[veins] வழியே நுரையீரலுக்குக் கொண்டு செல்லும் வேலையையும் இவை செய்கின்றன.
வெள்ளை அணுக்கள்: [White Blood Cells]
நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாப்பவை இவையே! சாதாரணமாக 5,000 முதல் 10,000 வரை ஒரு க்யூபிக் மில்லிமீட்டருக்கு இருக்கும் இவற்றின் எண்ணிக்கை நோய்வாய்ப்பட்டிருக்கையில் அதிகமாகும்.
வெள்ளை அணுக்களில் மொத்தம் 5 வகையான செல்கள் இருக்கின்றன.
நியூட்ரோஃபில்கள்:[Neutrophils]
கிருமிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்கிறது.
லிம்ஃபோசைட்டுகள்:[Lymphocytes]
வைரஸ் எனும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை எதிர்க்கும். ஒரு சில சாதாரண கிருமிகளையும் கூட!
மானோசைட்டுகள்:[Monocytes]
கடுமையான நோய்களின் போது இவற்றின் தேவை ஏற்படுகிறது.
இயசினோஃபில்கள் மற்றும் பேஸோஃபில்கள்: [Eosinophils and Basophils]
இவை அலர்ஜி சம்பந்தமான நோய்களின் போது உதவிக்கு வருகின்றன.
ப்ளேட்லெட்டுகள்:[Platelets]
த்ராம்போசைட்டுகள் [Thrombocytes] எனவும் அழைக்கப்படும் இந்த செல்கள், ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. நமக்கு அடிபட்டதும் பீறிடும் ரத்தம் சில நிமிடங்களில் தானே உறைவது இவற்றினாலே!
இவை குறைவாக ரத்தத்தில் இருக்கையில்,[Thrombocytopenia]] ரத்தப்போக்கு அதிகமாவதும், அதிகமாகையில்,[Thrombocytosis]]சீக்கிரம் உறையாமல் போவதும் நிகழ்கிறது.
150,00 முதல் 400,000 ப்ளெட்லெட்டுகள் ரத்தத்தில் இருக்கும்.
இந்த எல்லா செல்களும் எலும்பு மஜ்ஜையில்[Bone Marrow] இருந்து பிறக்கின்றன. இந்த மஜ்ஜையில் இருந்து உற்பத்தியாகும் ஸ்டெம் செல்கள் [Stem Cells] என இப்போது ஊடகங்களில் அதிகம் அடிபடும் தனித்தன்மை செல்கள்,[Specialized Cells] பலவிதமான ரத்த செல்களாக மாறும் தன்மை உள்ளவை. மேலும், இவை தன்னைத்தானே புதிப்பித்து, இரட்டிப்பாக்கிக் கொள்ளும் [reproduce itself] தன்மையும் உள்ளவை. இவை பற்றி பிறகு பார்ப்போம்!
சத்துப் பொருள்கள்:[Nutrients]
எலெக்ட்ரோலைட்டுகள்,[Electrolytes] கார்போஹைட்ரேட்டுகள்,[Carbohydrates] வைட்டமின்கள் [Vitamins] [நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைப்பவை]எல்லாம் ப்ளாஸ்மாவில் கலந்து திசுக்களை அடைகின்றன ரத்தத்தின் மூலம்!
****************************************
இதுவரை, இதயம், நுரையீரல், ரத்தக் குழாய்கள், ரத்தம் என இதயம் சம்பந்தமான அனைத்தையும் பற்றி அறிந்தோம்![??:)]
இவற்றால், இவற்றில், ஏற்படக்கூடிய சில [எல்லாம் அல்ல!] நோய்களைப் பற்றி இனி பார்க்கலாம்!
அனீமியா
நம்ம கொத்தனார் ரத்தம், அதில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப்போகிறது என ஒரு கேள்வி கேட்டிருந்தார்!
இதயம் மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்களைப் பற்றி எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு வழியைக் காண்பித்ததற்கு அவருக்கு நன்றி சொல்லி, இதிலிருந்தே தொடங்குகிறேன்!
உலகெங்கும், குறிப்பாக நம் இந்தியாவை மிக வாட்டும் ஒரு நோய் அனீமியா [anemia] என அழைக்கப்படும் "ரத்த சோகை'
இந்த சோகை என்னும் சொல்லிலேயே ஒரு சோகம் ஒளிந்திருப்பதைக் கவனிக்கவும்.
வளம் குறைந்த, நலிந்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு பிராணவாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சோகமே அனீமியா எனப்படும்.
இதன் அறிகுறிகள் என்னென்ன?
தளர்ச்சி, தோல் வெளுத்துப் போதல், இதயத்துடிப்பு அதிகமாதல், அடிக்கடி மூச்சு வாங்குதல், தலை சுற்றல், தலைவலி, கை,கால் ஜில்லிட்டுப் போதல்.
நோயின் கடுமையைப் பொருத்து மேற்கூறிய அறிகுறிகளின் தாக்கம் அமையும்.
மேற்கூறியவற்றுள் எதேனும், தொடர்ந்து இருந்து வந்தால் டாக்டரை உடனே ஆலோசிப்பது மிகவும் முக்கியம்!
ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதை உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.
ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மா, சிவப்பு, வெள்ளை அணுக்கள், சத்துப் பொருள்கள், வைட்டமின்கள் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.
சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோக்ளோபினின் அளவோ குறைவதால் அனீமியா ஏற்படுகிறது.
இவை உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜை.
வலு குறைந்த சிவப்பணுக்கள் மரிக்கையில், மேலும் மேலும் இது போன்ற செல்களையே உடலின் எலும்பு மஜ்ஜை[Bone marrow] உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, நோய் கடுமையாகிறது.
[உரமிடாத நிலத்தில் தொடர்ந்து பயிரிடும் போது, அடுத்து வரும் பயிர்கள் வளம் குறைந்து விளைவது போல!]
இவைகளால் அதிக அளவில் பிராணவாயுவைச் சுமக்க முடியாததால், திசுக்கள் வலுவிழந்து சோர்வு ஏற்படுகிறது.
இப்போது அனீமியாவின் வகைகளைப் பார்ப்போம்.
1. இரும்புச் சத்து குறைவால் வரும் ரத்த சோகை: [Iron-Deficiency Anemia]
ஐந்தில் ஒருவர் என்ற கணக்கில் பெண்களை வாட்டுவது இது. எலும்பு மஜ்ஜை ஹீமொக்ளோபினை உற்பத்தி செய்ய இரும்புச் சத்து மிகவும் தேவையான ஒன்று.சிவப்பு அணுக்கள் இறக்கும் போது [ஒரு ஆரோக்கியமான சிவப்பணு சுமார் 90-120 நாட்களுக்கு உயிர் வாழும், நம் உடம்பில்!]அதில் இருக்கும் இரும்புச் சத்து [iron]மீண்டும் புதிய செல்களுக்கு பயன்படுகிறது.
மாதவிலக்கு அதிகமாகப் போகும் பெண்கள், குடல் புண் எனச் சொல்லப்படும் அல்ஸர் நோய்[Peptic ulcer], குடல் புற்று நோய் [colon cancer] போன்ற நோய்களால் ரத்தம் உடலில் இருந்து வீணாகும் பொது இந்த வகை ரத்த சோகை ஏற்படும். இரும்புச் சத்து குறைந்த உணவாலும் ரத்தச் சோகை ஏற்படும்.
கர்ப்பமுற்ற காலத்தில் வளரும் கருவும் தாயின் ரத்தத்தில் இருந்து இரும்புச் சத்தை எடுத்துக் கொள்வதாலும் இது வரும்.
2. வைட்டமின் குறைவால் வரும் அனீமியா: [Vitamin deficiency anemia]
ஃபோலேட்,[Folate] B12 வைட்டமின்கள் வலுவான சிவப்பு அணுக்கள் உருவாகத் தேவையானவை. உணவின் மூலமே இவை நமக்குக் கிடைக்கின்றன. சிறுகுடலில் உறிஞ்சப்படும் இந்த வைட்டமின்கள், குடல் நோயால் அவ்வாறு நிகழாமல், இவ்வகை அனீமியா வருகிறது.
3. நீண்டகால நோய்களால் வரும் அனீமியா: [Anemia of chronic diseases]
புற்றுநோய் [Cancer], ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் என்னும் எலும்பு முடக்கு நோய் [Rheumatoid arthritis], க்ரோன்ஸ் நோய் எனப்படும் குடல் சுணக்கம் [Crohn's disease], காசநோய் [T.B.] இன்னும் பல நீண்டகால நோய்கள், சிவப்பு அணுக்கள் உற்பத்தியை பாதிக்கின்றன. இந்த நோய்களுக்காக கொடுக்கப்படும் மருந்துகளின் வீரியத்தாலும், இது நிகழும்!
4. ஏப்ளாஸ்டிக் அனீமியா; [Aplastic anemia]
எலும்பு மஜ்ஜை [Bone Marrow] தன் சக்தியை இழப்பதால் ஏற்படும் இவ்வகை சோகை உயிருக்கே உலை வைக்கும் மிகக் கொடிய நோய்! இது ஒரு வகையான ஆட்டோ இம்யூன் நோய் [Auto-Immune disease]. அதாவது உடலே தனக்குதானே ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சிலவகையான மருந்து வகைகளும் இதனை உண்டாக்கலாம். முக்கியமாக புற்று நோய் மருந்துகள்.
இது எல்லாவகையான ரத்தசெல்களையும் பாதிக்கும்.
5. எலும்பு மஜ்ஜை நோயால் வரும் அனீமியா: [Anemias associated with bone marrow diseases]
லுகீமியா[Leukemia], மைலோ டிஸ்ப்ளேசியா[Myelodysplasia], மல்டிபில் மைலோமா[Multiple Meyloma], லிம்ஃபோமா[Lymphoma]போன்ற நோய்கள் எலும்பு மஜ்ஜையைத் தாக்கி ரத்த உற்பத்தியைத் தடுக்கும். இவையெல்லாம் புற்றுநோய் வகையைச் சார்ந்தவை. நம் திரைப்படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் 'ப்ளட் கேன்ஸர்"[Blood cancer] என்பது இதுதான்!
6. ஹீமோலைடிக் அனீமியா: [Hemolytic anemia]
எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் அளவை விட அதிக அளவில் சிவப்பு அணுக்கள் மரிக்கும் போது, தேவையான வேகத்தில் இவைகளை அனுப்ப முடியாமல் போகும் நிகழ்வுக்கு இப்பெயர். ஆட்டொ இம்ம்யூன் நோய்களும், பல மருந்து வகைகளும் இதற்குக் காரணங்கள். இந்நிலையில் உடல் மஞ்சள் நிறமாக மாறி மஞ்சள் காமாலை [Jaundice]
ஏற்படுகிறது.
7. சிக்கில் செல் அனீமியா: [Sickle cell anemia]
ஹீமோக்ளோபினில் ஏற்படும் ஒரு மாறுதலால் வரும் இந்நோய் ஆப்பிரிக்க, அரேபிய இன மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. கம்யூனிஸ்டு கொடியில் இருக்கும் 'வளைந்த அருவாள்' வடிவில் சிவப்பு அணுக்கள் உருமாறி, அதிகம் பிராணவாயுவை எடுத்துச் செல்ல முடியாமல் போய் உடலைப் பாதிக்கும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாயும் முடியும்.
8. இன்னும் பல வகையான அனீமியாக்கள் இருக்கின்றன. அவை மிகவும் அரிதானதால்,[rare types of anemia] இங்கு சொல்லாமல் விடுகிறேன்.
பொதுவாக, சத்து குறைந்த உணவு, குடல் நோய்கள், மாத விடாய், கர்ப்பம், நீண்ட கால நோய்கள் இவையே சோகை வருவதற்குக் காரணம்.
இது பரம்பரை நோய் அல்ல! ஒரு சில அனீமியாக்களைத் தவிர!
சிக்கில் செல் அனீமியா, போன்ற சில வகைகள் பரம்பரையாக வரும்.
நோயின் தன்மையைப் பொருத்து சிகிச்சை அமையுமாதலால், அதனை இங்கு சொல்லாமல் விடுகிறேன். உங்கள் மருத்துவர் இதனை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுவார்.
இதனைத் தடுக்கும் வழிகளை இப்போது சொல்கிறேன்!
பெரும்பாலான அனீமியாக்கள் வராமல் நம்மால் தடுத்துக் கொள்ள முடியாது!
ஆனால், மிகவும் பரவலாகக் காணப்படும், முதல் இரண்டு வகை அனீமியாக்களை [1&2] இரும்புச் சத்து, வைட்டமின்கள் அடங்கிய உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் தவிர்க்கலாம்.
பீன்ஸ், பருப்பு வகைகள், கீரை வகைகள், உலர்ந்த பழங்கள் [பேரீச்சை, திராட்சை] முந்திரி, பாதாம் பருப்பு, ஒரு சில விதைகள் [Sun flower seeds, Pumpkin seeds etc] இரும்புச் சத்து மிகுந்தவை.
பழங்கள், பழச்சாறு, கீரை வகைகள் இவற்றில் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.
மேலே சொன்ன வைட்டமின்களைத் தவிர, C வைட்டமினும் இரும்புச் சத்து உடலில் கலக்க உதவும் என்பதால் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்றையும் தேர்ந்த மருத்துவர் மூலம் மாத்திரைகளாகவும் வாங்கி சாப்பிடலாம்!
தேவைக்கு அதிகமாக இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிடுவது ஆபத்தானது! கவனம்!!
சும்மாவாவது, உடல் அசதியாய் இருக்கிறது என்று, நீங்களே மருந்துக் கடைக்குச் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட வேண்டாம்.
முறையான உடற்பயிற்சி[Exercice], நல்ல காற்றோட்டமான சூழ்நிலை, உடலையும், மனதையும் மகிழ்ச்சியாய் வைத்திருத்தல் போன்றவை வளமான செல்கள் உருவாக உதவும்!
இதையெல்லாம் படித்ததும், நம் நாட்டில் இவை கிடைக்காத ஏழைக் குழந்தைகளை ஒரு நிமிடம் நினையுங்கள்! முடிந்தால் அவர்களுக்கு இது கிடைக்கத் தொண்டாற்றி வரும் முறையான அறக்கட்டளைகள் மூலம் உங்களாலான உதவி செய்யுங்கள்!
உங்கள் மனம் மகிழ அது உதவும்!! புது ரத்தம் பாயும்!
http://kasadara.blogspot.com/2006/12/blog-post.html
http://kasadara.blogspot.com/2006/12/2.html
http://kasadara.blogspot.com/2006/12/3.html
http://kasadara.blogspot.com/2006/12/4.html
http://kasadara.blogspot.com/2007/01/5.html
http://kasadara.blogspot.com/2007/01/6.html
|