| இந்தியாவில் இனவெறி |
| வெங்கட் | |
|
இந்த நேரத்தில் விழிப்பூட்டும் இதுபோன்ற கட்டுரைகள் மிக அவசியம். ஷிவம் சொல்லியிருப்பதைப் போல நாம் ஆழ்மனத்தில் இனவெறி கொண்டவர்கள்தாம். சொல்லப்போனால் இதுகுறித்த எந்தவிதமான குற்ற உணர்வும் நமக்குக் கிடையாது. கறுப்பாயிருக்கும் என்னுடைய ஒன்றுவிட்ட தமக்கையைப் பெண்பார்க்க வந்த ஒரு குடும்பத்தினர் முகத்துக்கு நேராகவே “பொண்ணு நல்ல கறுப்புதான்; வைரத்தோடு, வைரமூக்குத்தி ரெண்டும் போட்டுடுவேலோல்யோ!” என்று சொன்னது இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது (வந்தவர்கள் குடும்பமும் அதே நிறம்தான் என்பது இதில் விசேடம்). குறுகிய மனப்பான்மையில் நாம் யாருக்கும் சளைத்தவரல்லோம். பல நூறு ஆண்டுகளாக நாம் வர்ணாசிரமம் என்ற அழுக்கைச் சுமந்து திரிகிறோம்; சொல்லப்போனால் அதில் பெருமிதம் கொள்பவர்களும் நம்மில் நிறையவே உண்டு. (வர்ணாசிரமத்தில் இருக்கும் வர்ணத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஷிவம் சொல்கிறார்). பல்லடுக்குச் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தம்மைவிட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதுவதைப் பார்க்க முடிகிறது. வடமாளுக்கும் வாத்திமாளுக்கும், வடகலைக்கும் தென்கலைக்கும், பலிஜா நாயுடுவுக்கும் கவர நாயுடுவுக்கும், வாண்டையாருக்கும் மேல்கொண்டாருக்கும், பறையருக்கும் பள்ளருக்கும் என்று இந்த அளவுக்குக் குறுகிய பிரிவு மனப்பான்மை வேறு சமூகங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. சாதியை, இனவேற்றுமையுடன் ஒப்பிடக்கூடாது என்று இந்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் போராடி, அதில் வெற்றியும் கண்டிருப்பதாகக் கட்டுரை சொல்கிறது. என்னைப் பொருத்தவரை சர்வதேச அளவில் பேசப்படும் நிறப்பிரிவினைவிட இந்தியாவின் சாதிக்கொடுமை பல மடங்கு மோசமானது. தலித் தலைவர்கள், மற்றும் சமூக அறிஞர்கள் உலக வரலாற்றிலிருந்து ஒப்புமைகள் கண்டு சாதியையும் இனப்பிரிவுடன் இணைத்து சர்வதேச அளவில் பேசப்படச் செய்யவேண்டும். ஷிவத்தின் பதிவுக்குக்கீழே கருத்துக்கள் வாயிலாக நியோ ஸ்போர்ட்ஸ் சானலின் விளம்பரங்களில் இனவெறிச் சாயல் குறித்த சுப்ரியாவின் இந்தப் பதிவையும் படிக்க நேர்ந்தது. உண்மையைப் பிரதிபலிக்கிறோம், இதெல்லாம் சும்மா தாமாஷ்க்கு என்று சொல்லிக் கொண்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஊடகங்களில் இதுபோன்ற விடயங்களைப் பரப்புவதை அரசாங்கம் தலையிட்டு நிறுத்த வேண்டும் (இதில் ஒன்றும் தவறு கிடையாது, கனடா போன்ற நாடுகளில் இவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன). சுப்ரியாவின் பதிவில் இந்தியாவில் வசிக்கும் ஒரு கறுப்பு மாணவர் மனம் நொந்து தன் நேர்கொண்ட அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார். கனடாவில் இந்த மாதத்தை கறுப்பர் இனவரலாறு மாதமாகக் கொண்டாடுகிறோம். பல்கலைக்கழகம், நூலகம் தொடங்கி காப்பிக் கடைகள் வரை பல கொண்டாட்டங்களும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளின் ஆதரவுடன் நடக்கின்றன. தாராளமயமாக்கலில் தனது கதவுகளை வெளிநாட்டவருக்குத் திறந்திருக்கும் இந்தியா ஆரம்பத்திலேயே வந்தாரை எப்படி வரவேற்பது, அரவணைப்பது என்பது குறித்து நம் மக்களுக்குத் தெருட்டவேண்டும்.
|